Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்வது ! - எழுவதற்கா? அழுவதற்கா? 24

அதிரைநிருபர் பதிப்பகம் | June 19, 2012 | , , , , ,


அண்மையில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அந்நிய செலாவணி சந்தையில் இந்தியா ரூபாயின் நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட சரிவும் பல வினாக்களை பலருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைப்பற்றிய ஒரு சிறு விளக்கக் குறிப்பைத்தரவே இந்தப் பதிவு அவசியமாகிறது. 

தொடங்கும் முன்பு ஒரு வார்த்தை – குறிப்பாக வளைகுடா நாடுகளில்  ஊதியம் ஈட்டுவோருக்கும் – NRI  என்ற பட்டம் பெற்றோருக்கும் கூறிட விரும்புகிறேன். அமெரிக்க டாலரின் விலை ஏற்றத்தின் விளைவாக நாம் அயல்நாடுகளில் சம்பாதிக்கும் தொகைக்கு இந்தியப் பணத்தில் அதிக அளவு கிடைப்பதாக எண்ணி நாம் ஒரேயடியாக மகிழ முடியாது. காரணம் நம்முடைய பண வருமானத்தின் அளவு கூடி இருக்கலாம். ஆனால் உண்மை வருமானத்தின் அளவு கூடவில்லை. பொருளாதார கலைச் சொற்களில் பண வருமானத்துக்கும் , ( DIFFERENCE BETWEEN MONEY INCOME AND REAL INCOME ) உண்மை வருமானத்துக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. அதாவது நம்முடைய ஊதிய வருமானத்தில் செலவு போக நம் கையில் சேமிப்பாக மிஞ்சுவதன் அளவுதான் உண்மை வருமானமாகும். அதைவிட்டு அதிக பண அளவிலான வருமானம் சென்ற மாதத்தை விட இந்த மாதம் கிடைத்தாலும் நமது வழக்கமான செலவுபோக கையில் மிஞ்சாமல் பற்றாக்குறைதான் நிலைமை என்றால் அது நமக்கு பண வருமானமேயன்றி நமது உண்மை வருமானமல்ல. நமது நாட்டின் பணத்தின் மதிப்பு குறைகிறது என்றால் நாம் உபயோகப்படுத்தும் அல்லது நுகரும் பொருள்களின் விலையும் கூடுகிறது அலது கூடும் என்று பொருள். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 

அதே நேரம் நாம் அயல்நாட்டில் ஈட்டும் சம்பளத்தைக்கொண்டு , இப்போதைய செலாவணி விகிதத்தில் ஊருக்கு பணம் அனுப்பி நாம் ஏற்கனவே வாங்கி இருந்த கழுத்தை நெறிக்கும் கடன்கள் இருந்தால் அவைகளை உடனே தீர்க்க முயற்சிக்கலாம். பேசிமுடித்து முன் பணம் மட்டும் கொடுத்து வந்திருக்கும் சொத்துக்களை இப்போது கூடுதலாக பணம் அனுப்பி பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயல்கள்   ஓரளவுக்கு நமக்கு பயன்தரும் என்பதை சொல்லிக்கொண்டு இதைப்பற்றி சில குறிப்புகளை அலசலாம். 

கடந்த ஓராண்டாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல விழுந்துகொண்டிருந்தது; ஊசலாட்டம் ஆடிக்கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம்.  2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து சற்றேறக்குறைய இப்போதைய  வீழ்ச்சிவரை ரூபாயின் மதிப்பு 22% சரிந்து வந்திருக்கிறது. பொருளாதார வல்லுனர்கள் இந்த சரிவு இன்னும் தொடரும் என்றுதான் கணக்கிடுகிறார்கள். ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ. 60 ௦ வரை வரக்கூடும் என்று ஜோசியம் சொல்கிறார்கள். 

இதற்கு நச் என்று ஒரு தலையாய காரணம் சொல்லவேண்டுமானால் அமெரிக்க டாலருக்கான நமது நாட்டின் தேவைகள் அதிகரித்துவிட்டன என்று சொல்லலாம். பொதுவாக பொருளாதார கோட்பாடுகளின் அரிச்சுவடி, எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் தேவை அதிகரித்து அதற்குத் தகுந்தபடி வரத்து இல்லையோ அந்தப்பொருள் அல்லது சேவைகளின் விலை உயரும் என்பதாகும். தக்காளி முதல் தங்கம் வரை இதே கோட்பாடுதான். அதன்படி பல்வேறு காரணங்களுக்காக நமது நாட்டின் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இருக்கும் தேவைக்கு  சம்பந்தமே இல்லாமல் அமெரிக்க டாலரின் வரத்து குறைந்துகொண்டே போகிறது. இது முக்கிய காரணம். 

இப்படி தேவைகள் அதிகரித்து இருப்பதும் வரத்து குறைவாக இருப்பதும் அரசுக்கு தெரியாமல் திடீரென்று நடந்ததல்ல. இப்படி நடக்கும் என்று பல பொருளாதார மேதைகள் எச்சரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஆறு பொருளாதார நிபுணர்களைக்கொண்ட நமது அரசின் அமைச்சர் பெருமக்களுக்கு அயல்நாட்டு சுற்றுப்பயணம் பெருகியது மட்டுமல்ல அதற்கான செலவுகளையும் அரசே கொடுத்ததால் அந்த வலி தெரியவில்லை. 

இப்படி நமது நாட்டுக்கு அமெரிக்க டாலரின் பற்றாக்குறை ஏற்பட மூன்று  முக்கியமான காரணங்களைச் சுட்டிக்காட்டலாம். 

முதலாவதாக அந்நிய முதலீடுகளின் வெளியேற்றமும், குறைவான ஏற்றுமதிகளும். நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் இரு வழிகள் நமது நாட்டில் செய்யப்படும் அந்நிய முதலீடுகளும், நாம் செய்யும் ஏற்றுமதி மூலம் வரும் பட்டியல் தொகைகளுமே ஆகும். 2000 – ஆம் ஆண்டு நம்மை நோக்கி அந்நிய முதலீடுகள் அதிக அளவில் வரத்தொடங்கின. இவைகள் பெரும்பாலும் அந்நிய நாட்டினர் நம் நாட்டில் செய்த முதலீடுகள் மட்டுமல்லாமல் நமது அரசியல்வாதிகள் செய்த மாயஜாலங்களின் மூலமும் கருப்பை வெள்ளையாக்கும் அகடம் பகடம் மூலமும் வந்தவை. ( படிக்க: எனது முந்தைய பதிவு அந்நிய முதலீடும் அன்னியர் முதலீடும் என்ற தலைப்பில் ) ஆனால் எப்படியானாலும் அவை அமெரிக்க டாலர்களாக வந்தன. ஆனால் சமீக காலத்தில் இந்த முதலீடுகளும் அதன் மூலமாக கிடைத்த இலாபங்களும்( REPATRIATION) வெளியேறத்தொடங்கியுள்ளன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 2000  ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை நமது நாட்டிலிருந்து அந்நிய முதலீடுகள் பெரும்பாலும் வாபஸ் பெறப்படவில்லை.  ஆனால் 

2009 ல் 3.1 பில்லியன் டாலரும் 

2011 ல் 10.7 பில்லியன் டாலரும் நமது நாட்டின் அந்நிய மூலதனத்திலிருந்து வெளியேறிவிட்டன. 

2012 ல் 19 பில்லியன்  பிளஸ் டாலர்வரை வெளியேறும் என்று கணக்கிட்டு இருககிறார்கள். 

(கிளிக்கு ரெக்கை முளைச்சுடிச்சு. ஆத்தைவிட்டு பறந்து போயிடுச்சு.) இப்படி அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு செய்த பணத்தை உருவிக்கொண்டு துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடுவதற்குக் காரணங்கள்? ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி யார் இறைப்பார்கள்? நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, கூட்டணி அரசின் நிலையற்ற கொள்கைகள், வணிக கோட்பாடுகளுக்குட்படாத திட்டமிடமுடியாத செலவினங்கள் என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. வணிக கோட்பாடுகளுக்குட்படாத  செலவினங்கள் என்பது அரசியல்வாதிகளுக்கு காரியம் நடத்திகொள்வதற்காகக்  கொடுக்கப்படும் இலஞ்சம் ஆகும். இவைகளுக்கு பயந்து அந்நிய முதலீடுகள் வாபஸ் பெறப்படுகின்றன. 

இரண்டாவதாக கச்சா எண்ணெய் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து கூடுவது ஒருபுறம் அதற்காக அமெரிக்க டாலரில் செலுத்தவேண்டிய பணம் கைவசம் இல்லாவிட்டால் சந்தையில் அதிக விலை கொடுத்தேனும் டாலரை வாங்கி செலுத்தவேண்டிய கட்டாயம். இதனால் எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவை, சந்தையில் டாலருக்கான விலையை ஏற்றிவிடுகிறது. 

மூன்றாவதாக யூரோவுக்கு வந்துள்ள சோதனை. உலகின் அந்நிய செலாவணி சந்தைகளில் அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக கருதப்படுவது யூரோ எனப்படும் ஐரோப்பிய யூனியனின் செலாவணியாகும். இந்த யூரோ ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொது செல்வாணியாகும். ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில்  கிரீஸ் – கிரேக்கம்-  நாடு ஒரு அங்கமாகும். கிரீஸ் நாட்டில் பலவித காரணங்களால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. ஒரு அங்கத்தினர் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்ற அங்கத்தினர் நாடுகளை பாதிக்கும் என்று அஞ்சும் நாடுகள் கிரீஸை ஐரோப்பிய யூனியனிலிருந்து ஒதுங்கிவிடும்படி வற்புறுத்துகின்றன. அப்படி கிரீஸ் வெளியேறும் சூழ்நிலையில் யூரோவின்மேல் உள்ள அழுத்தம் அதிகமாகி  மதிப்புகுறையும். இதைக் கண்ட உலகின் மற்ற நாடுகள் யூரோவை வைத்து முதலீடு செய்வதை தவிர்த்து அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் தொடங்கி இருககிறார்கள். இதனாலும் உலக அளவில் அமெரிக்க டாலரின் விலை உயர்ந்து வருகிறது. குற்றாலத்தில் இடி இடித்து கோயம்புத்தூரில் மழை பெய்வதுபோல்தான் இந்தக் கதை . இதற்குக் காரணம் உலகமயமாக்கல் என்ற பொருளாதரத்தில் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் அசுரனும் அவனை ஊட்டி வளர்க்கும் வல்லரசுகளுமாகும். இந்நிலை இல்லாவிட்டால் கிரீஸ் நாட்டில்  ஏற்பட்ட அரிப்புக்கு இந்தியா மற்றும்  ஏனைய நாடுகள் சொரிந்து கொள்ள வேண்டியதிருக்காது. 

இந்த மாற்றங்களினால் நாம் எழுவோமா? அழுவோமா? பதில் என்ன வென்றால் நாம் இப்போது அழலாம் ஆனால் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் நம்மால் எழவும் முடியும் . இப்போது எப்படியெல்லாம் நாம் அழவேண்டி இருக்கும்?

1. பெட்ரோலுக்கு இன்னும் அதிக விலை கொடுக்க நேரிடும். இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு தரும் மானியம் அதிகரிக்கப்படவேண்டிவரும். அரசுமானியம் என்பது மன்மோகன்சிங் அல்லது மண்டேசிங் அலுவாலியா வீட்டுப் பத்தாயத்தில் உள்ள கோதுமையை விற்று வருவதல்ல. அரசின் மானியம் கூடினால் வரிச்சுமை கூடும் இதனால் விலைவாசி உயரும். 

2. நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க நேரிடும். ஒரு விவசாய நாட்டில் இன்றும் நிறைய உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கேவலமான நிலைமையில் இருக்கிறோம். 

3. வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை மட்டும் பெரிதாக பேசுகிறோம். . வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் நமது மாணவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்த நேரிடும். விமானப் பயணத்தின் கட்டணங்கள் விமானம் பறக்கும் உயரத்துக்கு எகிறி விடும். 

4. விலை உயர்வால் நடுத்தரவர்க்கத்தின் நுகர்வு குறைவால் உற்பத்தியான பொருள்கள் தேக்கமடையும். உற்பத்திப் பொருள்களின் தேக்கத்தால் உற்பத்தி குறையும். முதலீடு செய்வோருக்கு முனைப்பு வராது. இலாபம் குறைவதால் சேமிப்பும்  அதன்மூலம் வரும் முதலீடுகளும் குறையும். பொருளாதார மந்த நிலை ஏற்படும். 

எப்படி எல்லாம் செய்தால் நாம் எழலாம்?

1. ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் அமெரிக்க டாலரை வங்கிகளுக்கு திறந்த சந்தையில் விற்று பற்றாகுறையை சற்று சரிக்கட்ட உதவலாம். இது ஒரு தற்காலிக முதலுதவியாகும். நீண்ட நாட்களுக்கு குணமாக்கும் மருந்தை அரசுதான் தரவேண்டும். 

2. தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முதலீடுமட்டுமல்ல தொழில் வளர்ச்சிக்கான  நீண்டகால கடன்களும் அமெரிக்க டாலரில் வாங்கிக்கொள்வதற்கு வகை செய்யலாம். 

3. எண்ணை நிறுவனங்களுக்கும், இன்றியமையாத பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிர்ணய விலையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட அளவு அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யலாம். சந்தை நிலவரத்தில் வாங்கும் டாலரின் விலையில் உள்ள ஸ்திரமற்ற நிலையும் விலையும் இதனால் தவிர்க்கப்படலாம். 

4. கூட்டணிக்கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றும் போக்கை மத்திய அரசு கைவிடலாம். ஒரு நிலையான அந்நிய முதலீடு மற்றும் அந்நிய செலவாணி கொள்கைகளை அறிவித்து பின்பற்றலாம். 

5. நாட்டின் மூல கனிம வளங்களை தனியாருக்கு குறைந்த விலையில் தாரைவார்ப்பதை நிறுத்தலாம். முக்கிய வருமானம் வரும் சுரங்க கனிமங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி பட்டியலில் குறைத்து விலைபோட்டு – வித்தியாசங்களை சுவிஸ் வங்கியில் சேர்க்கும் சில அரசியல்வாதிகளின் ஊழல வெளிப்பட்டுள்ளதை தீவிர குற்றமாக கருதி அப்படி ஒதுக்கப்பட்ட மூல வளங்களை பறிமுதல் செய்யலாம்.   

6. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் டெபாசிட்கள்  100 பில்லியன் வரை இருந்து இப்போது 50 பில்லியனாக ஆகிவிட்டது. ஊக்கப்படுத்தி அதிக டெபாசிட்டுகளை கவரலாம். 

7. உலகிலேயே அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு கட்டுப்பாடு விதித்து கணவன்மார்களது கண்ணீரைத் துடைக்கலாம். வரதட்சணையாக தங்க நகை போடுவதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கலாம். ( யார் யார் அடிக்க வரப்போகிறார்களோ?).

8. வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்கிறேன் என்று சில குருவிக் கூட்டங்கள் அமெரிக்க டாலரை சலுகைவிலையில் வாங்கிக் கொண்டுபோய் வெளிநாடுகளில் விற்கும் நிலைகளைக் கட்டுப்படுத்தலாம். 

பொருளாதாரத்தில் பண மதிபபு குறைவது என்பது உலக அரங்கில் ஒரு நாட்டின் மரியாதைக்குரிய  பிரச்னை.   2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம், நிலக்கரிச் சுரங்க வயல்களைக் குறைந்த விலைக்குக் குத்தகை விட்டது, கனிமச் சுரங்கங்களில் அரசியல்வாதிகளை விருப்பம்போலச் சம்பாதிக்க அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் செல்வம் குறிப்பிட்ட சிலரால் சூறையாடப்பட்டுவிட்டது. 2ஜிஅலைக்கற்றை, நிலக்கரி மற்றும் கனிம வளங்கள் போன்ற அரசுக்கு வருவாய் பெற்றுத் தரும் தேசச் சொத்துகளைச் சரியான முறையில் விலை நிர்ணயம் செய்திருந்தாலே போதும். இந்திய அரசுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும்.  இப்படி நாட்டின்  செல்வத்தின்  மூலமான வருமானம் இடைக்கொள்ளை இன்றி வகைப்படுத்தப்பட்டு இருந்தால் திடீரென்று உலகைத்தாக்கும் பொருளாதார வீழ்ச்சி சுனாமிகளில்  இருந்து தப்பித்துக்கொண்டு விழுந்த பொருளாதாரம் எழுந்த பொருளாதாரமாக நிற்கவே முடியும். அரபு தேசங்கள் அப்படித்தான் ஆடாமல் நிற்கின்றன. 

-இபுராஹீம் அன்சாரி

24 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நாடு தலையெடுக்க உயர்தர வழிகள்!
நடைமுறைக்கு வர இந்திய அரசின் முக்கிய அங்கத்தினராக, ஆளுமையினராக இப்ராஹிம் அன்சாரி காக்கா வர வேண்டும் என்பது ஆவலும் துஆவும்.

Yasir said...

பண வீழ்ச்சியைப்பற்றி தெள்ளத்தெளிவான கட்டுரை....கீரைக்கட்டு ஊரில் 50 ரூபாயாமே.....வாங்கியகடன் களை அடக்க தற்போதைய சூழ்நிலை உதவும் என்பது உண்மை மற்றபடி மகிழ்ச்சி கொள்ள காரணம் இல்லை..வாழ்துக்கள் மாமா

இங்கே நைஜீரியாவில் 500மிலி தண்ணீர்....2.25$........தண்ணி குடிக்கவே பயமா இருக்கு....

லாகோசின்(lagos) ரம்மியமான காலைப்பொழுதை அனுபவத்துகொண்டு இதை எழுதுகிறேன்

சேக்கனா M. நிஜாம் said...

மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களே,

அருமையான ஆக்கம் ! வாழ்த்துகள் ! தொடர்ந்து எழுதுங்கள்.............

பணத்தை ஊருக்கு அனுப்பலாம் என்று சந்தோஷப்படவும் வேண்டியதில்லை.......காரணம் ஊரில் விற்பனை செய்யும் பொருட்களின் விலையோ மலமலவென உயர்ந்து காணப்படும்.

எடுத்துக்காட்டாக,

1. மார்க்கெட்டில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன. மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்றால் அதே விலைக்கு வாங்குவதில் சிக்கல் இல்லை. மக்களிடம் ரூ. 200 கோடி ரூபாய் பணம் இருந்தால்...?

அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். பொருட்களின் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அதே பொருட்களை 200 கோடி ரூபாய் வரை விலை ஏற்ற வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. விலைவாசி உயரும்........... அதாவது உயர்த்தப்படும்...............

2. மற்றொரு நிகழ்வைப் பார்க்கலாம். மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. மார்க்கெட்டில் பொருட்களின் சப்ளை குறைத்துவிடுகிறது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தான் வந்திருக்கின்றன. என்ன ஆகும் ?

அப்பொழுதும் போட்டிதான். குறைவான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். விலை உயரும்........ அதாவது உயர்த்தப்படும்.................

தீர்வுதான் என்ன ?

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும். ஓரளவு கட்டுப்படுத்த இவை உதவும்.

Noor Mohamed said...

காக்கா, அந்நிய செலாவணி பற்றி ஓர் அலசு அலசிவிட்டீர்கள். பொருளாதாரம் படிக்காத நான் தங்களின் ஆக்கங்களைப் படித்து பகுதிப் பொருளாதார மாணவனாக மாறிவிட்டேன்.

இந்த வீழ்ச்சி நீடிக்குமானால், மாதம் 10000 ரூபாய் சம்பளம் பெறுவோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் பட்டியலில் இடம் பிடித்து விடுவரோ என்ற ஐயம் எழுந்துவிட்டது.

//வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் நமது மாணவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்த நேரிடும். விமானப் பயணத்தின் கட்டணங்கள் விமானம் பறக்கும் உயரத்துக்கு எகிறி விடும்.//

100% முற்றிலும் உண்மை. நான் ஒரு travel agency, accounts/admin ல் பொறுப்புள்ள பணி செய்துகொண்டிருப்பதால் தங்களின் விளக்கத்தை முழுமையாக என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

//உலகிலேயே அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு கட்டுப்பாடு விதித்து கணவன்மார்களது கண்ணீரைத் துடைக்கலாம். வரதட்சணையாக தங்க நகை போடுவதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கலாம். ( யார் யார் அடிக்க வரப்போகிறார்களோ?).//

கண்டிப்பாக அதிரை வாசிகள்தான் அடிக்க வருவார்கள். அவர்களை உங்களுக்கு சமாளிக்க தெரியாதா?! யார் என்ன சொன்னாலும், எப்படி விவரித்தாலும் அதிரை வாசிகளைத் திருத்த முடியுமா??

Shameed said...

மாமாவின் கட்டுரை "மணி" "மணி" யாக உள்ளது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// திடீரென்று உலகைத்தாக்கும் பொருளாதார வீழ்ச்சி சுனாமிகளில் இருந்து தப்பித்துக்கொண்டு விழுந்த பொருளாதாரம் எழுந்த பொருளாதாரமாக நிற்கவே முடியும். அரபு தேசங்கள் அப்படித்தான் ஆடாமல் நிற்கின்றன. //

அசல் !

//ஆனால் ஆறு பொருளாதார நிபுணர்களைக்கொண்ட நமது அரசின் அமைச்சர் பெருமக்களுக்கு அயல்நாட்டு சுற்றுப்பயணம் பெருகியது மட்டுமல்ல அதற்கான செலவுகளையும் அரசே கொடுத்ததால் அந்த வலி தெரியவில்லை. //

அப்படின்னா வீக்கம் எப்போ குறைவது !?

சுல்லென்ன்ற அலசல் !

sabeer.abushahruk said...

காக்கா,

தரமான கட்டுரையைத் தந்து என்னைப்போன்றோருக்கு பொருளாதார தெளிவு ஏற்படுத்தும் தங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.

அந்நிய முதலீடு குறைவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததும் ஒரு காரணிதானே?

கத்துக்கிட்டம்ல கேப்பம்ல!

Ebrahim Ansari said...

தம்பி ஷேக்கனா எம் நிஜாம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

தொடர்ந்து தாங்கள் தரும் ஆர்வமூட்டும் கருத்துக்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டது,

//ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும். ஓரளவு கட்டுப்படுத்த இவை உதவும்.//

உண்மைதான் . ஆனாலும் , உற்பத்தியை பெருக்குவது என்பதில் இரண்டு அம்சங்களை கவனித்து நடைமுறைப்படுத்தினால் மிகவும் நன்மையாக இருக்கும்.

(ஒன்று) ஏற்றுமதி செய்யும் வண்ணம் உற்பத்தி – நமக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும்.

(இரண்டு) இறக்குமதி செய்யும் பொருள்களை நாமே உற்பத்தி செய்துகொள்வது அல்லது உள்நாட்டில் விளைவதையே சார்ந்து இருப்பது – நமது அந்நிய செலாவணியை செலவாகாமல் தக்கவைக்கும். உதாரணமாக சில சமையல் எண்ணை வகைகளைக்கூட நாம் இறக்குமதி செய்கிறோம் ( பாமாயில்) . நம்மிடையே விளையும் கொப்பராவுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்று நம் விவசாயிகள் போராடுகிறார்கள்.

வஸ்ஸலாம்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

//கத்துக்கிட்டம்ல கேப்பம்ல// வரவேற்கிறேன்.

இது போல கேள்விகளை நிறைய எதிர்பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி.
நீங்கள் கேட்டது

//அந்நிய முதலீடு குறைவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததும் ஒரு காரணிதானே?//

ஆமாம். மத்திய அரசு ஒரு ஓட்டுப்போட்ட துணி என்பதால் அதன் கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முடியவில்லை. பலவகைகளில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் சமரசமாக போகவேண்டியதாக இருக்கிறது. இல்லாவிட்டால் ஆட்சி கவிழும் அபாயம். இதை மேலெழுந்தவாரியாக கட்டுரையில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறேன்.

1. //நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, கூட்டணி அரசின் நிலையற்ற கொள்கைகள், வணிக கோட்பாடுகளுக்குட்படாத திட்டமிடமுடியாத செலவினங்கள் என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.//

2. //கூட்டணிக்கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றும் போக்கை மத்திய அரசு கைவிடலாம். ஒரு நிலையான அந்நிய முதலீடு மற்றும் அந்நிய செலவாணி கொள்கைகளை அறிவித்து பின்பற்றலாம். //


3. //கனிமச் சுரங்கங்களில் அரசியல்வாதிகளை விருப்பம்போலச் சம்பாதிக்க அனுமதித்தது//

மேலே காணும் நிலைமைகளுக்குக் காரணம் அரசின் ஸ்திரத்தன்மை அவ்வப்போது ஆட்டம் காண்பதுதான்.

வஸ்ஸலாம்.

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//அப்படின்னா வீக்கம் எப்போ குறைவது !?//

வீக்கம் குறையாவிட்டால் வெட்டி வீசவேண்டியதுதான்.

வஸ்ஸலாம்.

Ebrahim Ansari said...

மருமகனார் யாசிர் !

என்னா நைஜீரியாவா? " சொல்லவே இல்லே".

அப்படியே அடுத்தவீடு அங்கோலாவை எட்டிப் பார்த்துவிட்டு வாங்க!

மீண்டும் போகவேண்டுமாம்.

முடிந்தால் ஆபிரிக்க காடுகளில் இருந்து வாய்பேசாத ஆனால் தலையாட்டுகிற வகையறா இருந்தால் புக் பண்ணிவாருங்கள். ஒரு போட்டியில் போட்டியிடவைக்கவேண்டி இருக்கிறது.

Unknown said...

தெளிவான விளக்கங்கள் அன்சாரி காக்கா.அந்நிய முதலீடுகளை திரும்ப பெறுவதற்கு 2g spectrum வழக்கில் ஏற்கனவே தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் .

KALAM SHAICK ABDUL KADER said...

demand and supply பாடத்தை என் பொருளாதார பேராசிரியரை விட மிகவும் விளக்கமாகப் பாடம் நடத்தி விட்டீர்கள்

Ebrahim Ansari said...

அன்பின் சகோதரர். ஹார்மிஸ் அவர்களுக்கு,

தாங்கள் குறிப்பிட்டிருப்பதும் ஒரு காரணம்தான். 2G Spectrum ஊழலின் மூலம் தொலைதொடர்பு நிருவனங்களில் முதலீடு செய்யப்பட்டதொகைகள் ஓரளவு மீண்டும் வெளியேறிவிட்டன என்பது சரிதான். இதைத்தான்

// 2000 – ஆம் ஆண்டு நம்மை நோக்கி அந்நிய முதலீடுகள் அதிக அளவில் வரத்தொடங்கின. இவைகள் பெரும்பாலும் அந்நிய நாட்டினர் நம் நாட்டில் செய்த முதலீடுகள் மட்டுமல்லாமல் நமது அரசியல்வாதிகள் செய்த மாயஜாலங்களின் மூலமும் கருப்பை வெள்ளையாக்கும் அகடம் பகடம் மூலமும் வந்தவை. ( படிக்க: எனது முந்தைய பதிவு அந்நிய முதலீடும் அன்னியர் முதலீடும் என்ற தலைப்பில் )// என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

நான் குறிப்பிட்டுள்ள முந்தைய பதிவை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

திஹார் சிறையின் களிக்கு பயந்து- உள்ளதைக் காப்பாற்ற பணம் வெளியேறியதும் பற்றாக்குறைக்கு காரணம்தான். நல்ல பாயின்ட் கொடுத்தீர்கள்.

Ebrahim Ansari said...

கவியன்பன் அவர்களைக் காண மிக்க மகிழ்ச்சி.
அதிரை எப்படி இருக்கிறது?
சேர்ந்தாற்போல் இரண்டு கவிகளும் அதிரையில். ஜமாயுங்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

அல்ஹம்துலில்லாஹ் உங்கள் திருவாக்கு உண்மை சற்று நேரத்திற்கு முன்னர் கவிவேந்தர் சபீர் அவர்களைக் கண்டு உரையாடி மகிழ்ந்தேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பொருமையாக படிக்கப்படவேண்டிய கட்டுரை.

வெளிநாடுகளில் சம்பாதிப்பவர்களுக்கு இது நல்ல செய்தியாக இருந்தாலும், நம் நாட்டிற்கு இது சாபக்கேடே என்பதை தெளிவாக விளக்கி பாடம் நடத்தியமைக்கு ஜஸகல்லாஹ் ஹைரன்...

//2. நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க நேரிடும். ஒரு விவசாய நாட்டில் இன்றும் நிறைய உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கேவலமான நிலைமையில் இருக்கிறோம். //

தென்னந்தோப்புகள், வயல்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறிவருவதே நீங்கள் சொல்லும் கேவலமான நிலைக்கு காரணம்....

crown said...

Yasir சொன்னது…

பண வீழ்ச்சியைப்பற்றி தெள்ளத்தெளிவான கட்டுரை....கீரைக்கட்டு ஊரில் 50 ரூபாயாமே.....வாங்கியகடன் களை அடக்க தற்போதைய சூழ்நிலை உதவும் என்பது உண்மை மற்றபடி மகிழ்ச்சி கொள்ள காரணம் இல்லை..வாழ்துக்கள் மாமா
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சென்னை பாஷையில் எப்டிகீரபா(எப்படி இருக்கிறாய் என்று)சகஜமாய் கேட்க முடியாத அளவிற்கு கீரைவிலைகூட இருப்பது இனி பசுமை என்பதும் இந்தியாவில் கொடுமையாகத்தான் பாவிக்கப்படும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். மிக அருமையான அலசல் பொருளாதர மேதையிடமிருந்து. அல்ஹம்துலில்லாஹ்!
எப்படியெல்லாம் பாடம் நடத்துகிறார்கள். ஆனால் பொதுமக்கள் அரசியல் வாதிகளுக்கு பாடம் நடத்தாமல் நம் நாடு தேர்ச்சி பெறாது.இங்கே(அமெரிக்காவில்)பலர் நம் நாட்டவர் சொல்வது ஆஹா! நம் டாலர் மதிப்பு கூடுகிறது!!!(?)படித்த நல்ல நிலையில் பணியில் உள்ளவர்களும் சொல்லும் விதம் வேடிக்கையாக இருக்கும்!அவர்களிடம் என்ன விளக்கம் கொடுத்தாளும் போப்பா ஊரில் உள்ள விலைவாசியெல்லாம் யாருக்கு வேணும் நாம அனுப்புவது கூடுதலாக கிடைக்கிறதே என்பார்கள் விளக்கம் சொல்லியே ஓஞ்சிபோய்ட்டேன்.

அதிரை சித்திக் said...

வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும்

கொண்டு போனது என்ற பழமொழி போல அன்னிய

முதலீடு தங்களின் கொள்கையை மாற்றிக்கொண்டு

இந்தியாவை விட்டு வெளியேறியதை அன்சாரி காக்கா

மிக சரியாக சொன்னீர்கள் ,,மீண்டும் சுதேசி கொள்கையை

பின்பற்றினால் நாட்டிற்கு நலம் பெயர்க்கும் ..வெளிநாட்டில்

உள்ளவவர்கள் ..கடனை அடைக்க நல்ல தருணம் ...

அற்புதமான் ஆக்கம் ..வாழ்த்துக்கள்

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari,

தொடரும் மின்வெட்டு உற்பத்தியை பாதிப்பதுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு "தொடர்ந்து தொழில் செய்ய முடியுமா?" என்ற பயத்தை கொடுத்து அப்படியே அப்பீட்டாக திட்டம் போடுதலும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம்...இது போல் விசயங்களை பைனான்ஸ் மினிஸ்ட்ரி கண்டுபிடிக்கும்போது சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கி ட்ரான்சிட் லான்ச்சில் விமானத்துக்கு காத்து கிடக்கும்போது சமோசா தின்றுகொண்டிருக்களாம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

தேவை அதிகரிக்க,அதிகரிக்க விலையும் அதிகரிக்கும்.அதுபோல இப்போது நமது தேவைக்கு அதிகமான உற்பத்தி இல்லாமையினால், விலையும் அதிகரித்து - சிகரம் தொடுகிறது.சோசியளிஷம்,கேபிடலிசம்,கம்யூனிசம் இன்னும் எத்தனை இசம்கள் வந்தாலும் - எதுவும் சரியாகப்போவதில்லை,இஸ்லாம் இசத்தை தவிர.இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்தட்டும்.வெற்றி நிச்சயம்,(இன்ஷா அல்லாஹ்)

பொருளாதார நிபுணர்,டாக்டர் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அப்துல்மாலிக் said...

வீழ்ந்த பொருளாதாரத்திலிருந்து சாமானிய மக்களால் என்ன அட்வைஸ் எல்லாம் கிடைக்கிறது என்பதை கருத்தில் கொண்டு இந்த அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க இபுராஹீம் அன்சாரி காக்காவின் இந்த கட்டுரை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் நலம், குழப்பத்தில் இருக்கும் அரசுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் (அவய்ங்களுக்கு முதல் குடிமகனை தேர்ந்தெடுக்கவே தலைகீழா நிக்கவேண்டிருக்கு இதுக்கெல்லாம் எங்கேர்ந்து சிந்திப்பது..)

Ebrahim Ansari said...

புதுடில்லி : முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.57.30 ஆக சரிந்துள்ளதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய ரூபாயின் சரிவை சரி செய்ய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் எனவும் நிதி அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே 50 சதவீதம் அமெரிக்க டாலர்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து வாங்குமாறு எண்ணெய் நிறுவனங்களை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நிதித்துறை செயலாளர் ஆர்.எஸ்.குஜ்ரால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்கவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

From To-day's News Paper.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு