Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்..! - தொடர் - 8 18

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


நம் அருமை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தமக்காகவும், இஸ்லாத்திற்காகவும் பல வகையில் உதவிகள் தியாகங்கள் செய்தவர்களின் செயலை எண்ணி அழுதார்கள்  என்ற படிப்பினை தரும் தகவல்களைச் சென்ற பதிவில் பார்த்தோம்.

இந்த வாரம், மிகவும் உருக்கமானது. இந்தப் பதிவைத் தட்டச்சு செய்ய இரண்டு நாட்கள் எடுத்தது, காரணம் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள உணர்ச்சிபூர்வமான சம்பவங்களின் தாக்கத்தால் என்னால் தட்டச்சு செய்ய முடியவில்லை, இருப்பினும் கண்ணீர் மல்க இதை தட்டச்சு செய்தேன்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீனால் நமக்கு இவ்வுலகிற்கு கொடுக்கப்பட்ட அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்கள், சிறு வயதில் தாயையும் தந்தையையும் இழந்து, அனாதையாகி, உணவுக்காக ஆடு மேய்த்து, தன்னுடைய பெரிய தந்தையின் அன்பான வளர்ப்பில் வளர்ந்து, தன்னுடைய நல்லொழுக்கத்தாலும் நற்குணத்தாலும் கவரப்பட்டு செல்வ சீமாட்டி அன்னை ஹதீஜா(ரலி) அவர்களை மணமுடித்து, 40 வது வயதில் நபித்துவம் பெற்ற பின் தன்னுடைய மற்றும் தன் மனைவியினுடைய அனைத்து சொத்துக்களையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்து, மக்காவில் தன்னுடைய ஊர் மக்களால் கொடுமைபடுத்தப்பட்டு பிறகு மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்று, மதீனாவில் எண்ணிலடங்காக் கஷ்டங்களை அனுபவித்து, பிறகு அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் மக்காவை வெற்றி கொண்டு உலக மக்களுக்கு ஜனாதிபதியாக இருந்து, தான் இறக்கும் போது தனக்கோ தன் குடும்பத்திற்கோ எந்த பொருட்களையும் விட்டுச் செல்லாமல் மரணித்தார்கள் என்று நாம் வரலாறுகளில் படித்திருப்போம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் என்னதான் அல்லாஹ்வுடைய தூதராக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதன் எப்படி உணவின்றி பசியில் வாடிடுவானோ அது போல் தன்னுடைய வாழ்நாளில் பல சந்தர்ப்பத்தில் இருந்துள்ளார்கள், இதனை அவர்களோடு அனுபவித்த உத்தம நபியின் உண்ணத தோழர்களும் அடங்குவர். இதோ ஒரு சில சம்பவங்கள்..

ஒரு காலகட்டத்தில் மிகப்பெரும் வரட்சியான சூழல், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அன்றாட உணவுக்கு வழியின்றி பசியோடு வாழ்ந்து வந்தார்கள். அதே பசியோடு இருந்த சஹாபாக்களும் யாரிடமும் யாசகம் கேட்காமல் நபி(ஸல்) அவர்களுடைய சபையிலே வந்தமர்ந்து நல்லுபதேசங்களைக் கேட்டு தங்களின் பசியை மறந்தவர்களக்ச் செல்வார்கள்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் மதினாவில் சஹாபாக்களுடன் தொழுதுவிட்டு அமர்ந்திருக்கிறார்கள், அந்த நேரத்தில் சிறுவயதுடைய அனஸ் பின் மாலிக்(ரலி) (7 வயது சிறுவர்) அவர்கள் அந்த இடத்துக்கு வருகிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய கற்களை எடுத்து ஒரு துணியில் போட்டு கட்டி தன்னுடைய வயிற்றில் கட்டிக்கொண்டு தன்னுடைய மேனியில் ஒரு துணியைப் போட்டு மூடுகிறார்கள். இதனை அனஸ்(ரலி) அவர்கள் காண்கிறார்கள்.

உடனே அனஸ்(ரலி) அவர்கள் பிற சஹாபாக்களிடம் “ ரஸூல்லுல்லாஹ் வயிற்றில் ஏதோ கட்டி வைத்துள்ளார்களே அது என்ன?” என்று கேட்கிறார்கள். அதற்கு அங்கிருந்த சஹாபாக்கள் சொன்னார்கள், நம்முடைய உத்தம நபி(ஸல்) அவர்கள் ரொம்ப நாட்களாக உணவின்றி சாப்பிடாமல் பசியில் இருக்கிறார்கள், தன்னுடைய பசியின் துயரத்தைத் தாங்கிக்கொள்ள துணியில் கல்லை கட்டி தன் வயிற்றில் கட்டி வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். இதனை கேட்ட அனஸ்(ரலி) சத்தம் போட்டு அந்த கஷ்டத்திற்கு நாசமுண்டாகட்டும், நாசமுண்டாகட்டும் என்று அழுதவர்களாக தன்னுடைய தாய் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் வந்து நபி(ஸல்) அவர்கள் பசியினால் தன் வயிற்றில் கல்லைக் கட்டி வைத்திருப்பதைச் சொன்னார்கள். அந்த தீன்குலப்பெண்மனி உம்மு சுலை அவர்கள் உடனே நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்புகிறார்கள். நபி(ஸல்) அந்த உணவை உம்மு சுலைம்(ரலி) அவர்கள் வீட்டிற்கே கொண்டு செல்லுமாறு அனஸ்(ரலி) அவர்களிடம் சொல்லிவிட்டு, அல்லாஹ்வின் கட்டளைபடி நபி(ஸல்) மற்றும் சஹபாக்களும் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் வீட்டிற்கு சென்று உணவருந்தினார்கள். அன்றைய தினம் அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புதம் நிகழ்த்தி காட்டப்பட்டு அத்தனை சஹபாக்களும் வயிறார உணவருந்தினார்கள் என்பதை புகாரி முஸ்லீம் போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் நாம் பார்க்கிறோம்.

மற்றுமொரு சம்பவம், இஸ்லாமிய வரலாற்றில் வீரத்திற்கு எடுத்துகாட்டான நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் ஒரு  பகல் நேரத்தில் வெளியில் வேகமாக நடந்து வருகிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களை முதன் முதலில் உண்மைபடுத்திய (சித்தீக்) உண்மையாளர் என்று ஒட்டுமொத்த முஸ்லீம்களால் அழைக்கப்படும் அபூபக்கர்(ரலி) அவர்களும் அதே பட்டப் பகலில் வெளியே வருகிறார்கள். அந்த வீரத்தோழரும், உண்மை தோழரும் தெருவில் சந்திக்கிறார்கள்.

“என்ன உமரே இந்த பகல் நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்” என்று அபூபக்கர்(ரலி) கேட்க, அதற்கு உமர்(ரலி) அவர்கள் “எனதருமை தோழர் அபூபக்கரே பசி தாங்க முடியவில்லை, அதுதான் நபி(ஸல்) சபைக்குச் செல்கிறேன்” என்று சொன்னார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையைப் பிடித்து “அதே நிலைதான் எனக்கும் உமரே, வாருங்கள் நபி(ஸல்) அவர்களின் சபைக்கு நாம் செல்வோம்” என்று கூறி இருவரும் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.

நபி(ஸல்) அவர்களும் அந்த வெயில் நேரத்தில் வெளியில் வருகிறார்கள், தன்னுடைய அருமைத் தோழர்கள் இருவரும் நடுப்பகலில் தெருவீதியில் வேகமாக வருவதைக் கண்டார்கள். “என்ன தோழர்களே எங்கே இந்த வெயில் நேரத்தில் கிளம்பிவிட்டீர்கள்” என்று கேட்டார்கள்.

அந்த தோழர்களில் ஒருவர் சொன்னார்கள் “யா ரசூலுல்லாஹ் பசி தாங்முடியவில்லை அதான் உங்களைச் சந்திக்க வந்தோம்” என்றார்கள். உடனே நபி(ஸல்) “எனது உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நானும் அதற்காகத்தான் வெளியில் வந்தேன்” என்று கூறி அந்த உத்தம தோழர்கள் இருவரைக் கட்டி அனைத்து, “வாருங்கள் நம் அருமை தோழர் அபூ அய்யூப் அல் அன்சார்(ரலி) அவர்கள் வீட்டிற்குச் செல்வோம்” என்று அவ்விருவரையும் அழைத்துச் சென்றார்கள்.

உத்தம நபியின் மதீனத்து உண்ணத தோழர் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களும், உமர்(ரலி) அபூபக்கர்(ரலி) ஆகியோரின் வருகையை அறிந்து உடன் தன் இல்லத்திற்கு வந்தார்கள். உணவு சமைத்து வருவதற்கு முன்பு வந்த விருந்தாளிகள் மூவருக்கும் பேரீத்தம்பழங்களைக் கொடுக்கிறார்கள் கொஞ்சம் பசியார வைக்கிறார்கள்.

பிறகு உணவு சமைத்து தட்டில் வைத்து, அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கும், அருமை தோழர்களுக்கும் பரிமார மிக ஆவலோடு வருகிறார்கள். அப்போது நபி(ஸல்) திடீரென எழுகிறார்கள், சஹபாக்கள் இருவரும் என்ன ரஸூலுல்லாஹ் எழுந்துவிட்டார்களே என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை தன் தோழர்களுடைய பசி, தன்னுடைய பசியைப் பற்றியே பேசிய நபி(ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களைப் பார்த்து “ நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்கிறோம் அபூ அய்யூப் அல் அன்சாரி அவர்களே, இந்தத் தட்டில் உள்ள உணவை என்னுடை அருமை மகள் ஃபாத்திமா அவர்களிடம் சென்று கொடுத்துவிட்டு வாருங்களேன். வீட்டில் என்னுடைய மகள் ஃபாத்திமாவும்(ரலி), மருமகன் அலி(ரலி), பேரக்குழந்தைகள் ஹசன்(ரலி) ஹுசைன்(ரலி) ஆகியோரும் பசியோடு இருக்கிறார்கள், சாப்பிட்டு பல நாட்களாகிவிட்டது.” என்று கேட்டுக்கொண்டார்கள். அதுவரை நபி(ஸல்) அவர்களும் இரு தோழர்கள் மட்டும் தான் பசியாக இருக்கிறார்கள் என்று எண்ணிய அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களுக்கு அப்போது தான் தெரிந்தது நபி(ஸல்) அவர்களின் குடும்பமே பசியில் உள்ளது என்று. சுப்ஹானல்லாஹ்….

அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் அந்த உணவை ஃபாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்குச் சென்று கொடுத்துவிட்டு, நபி(ஸல்) அவர்களை உபசரிப்பதற்காக தன் வீட்டிற்கு வந்தார்கள், பிறகு நபி(ஸல்) அவர்களுடனும், மற்ற இரு தோழர்களுடம் உணவருந்தினார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் நபி(ஸல்) அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள், தாடி நனையும் வரை அழுதார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களைப் பார்த்து அழுதவர்களாக சொன்னார்கள் “ இதோ ரொட்டி, இதோ இரைச்சி, இதோ பேரீச்சம்பழம் என்று விதவிதமாக சாப்பிடுகிறோமே, இதற்கெல்லாம் நாளை மறுமையில் அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பான் தோழர்களே, அதை நினைத்து அழுகிறேன் என்றார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது. சுப்ஹானல்லாஹ்.

அகிலத்தின் அருட்கொடை, இந்த உலகில் பிறந்த எவராலும் தோற்கடிக்க முடியாத படையின் தளபதி, ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் உலக பொருளாதார மாமேதை, தந்தைகளுக்கெல்லாம் முன்மாதிரி, கணவர்களுக்கெல்லாம் முன்மாதிரி, தோழர்களுக்குக்கெல்லாம் முன்மாதிரி, ஆசிரியர்களுக்கெல்லாம் முன்மாதிரி, வியாபரிகளுக்கெல்லாம் முன்மாதிரி, என்று ஒட்டுமொத்த மனித குலத்திற்கே முன்மாதிரி நம் உயிரினும் மேலான அண்ணல் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் ஆருயிர் தோழர்கள் அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) அவர்களோடு பல நாட்கள் பசியோடு இருந்த நிலையில், அல்லாஹ் நமக்கு வித விதமான உணவைத் தந்துள்ளானே, அவனின் அருளை நினைத்தும், உண்ட அந்த உணவுகளுக்கு நாளை மறுமை நாளில் அல்லாஹ்விடம்கேள்வி கணக்கு உள்ளதே என்று எண்ணி அழுதுள்ளார்கள் என்றால், நம்முடைய நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டாமா…

அன்பான சகோதரர்களே, நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அவர்களோடு வாழ்ந்த உத்தம தோழர்களும் பல நாட்கள் உண்ண உணவின்றி கஷடப்பட்ட நிலையிலும் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த அருளை எண்ணி அல்லாஹ்வுக்காக கண்ணீர் சிந்தினார்கள்.

விதவிதமாக இன்று நாம் பல்சுவை உணவு, நாவுக்கு ருசியாக சாப்பிடுகிறோமே, என்றைகாவது நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் பசியோடு கஷ்டப்பட்டார்களே, என்று எண்ணி  அழுதிருக்கிறோமா?

பொருளாதாரத்தில் அபிவிருத்தியை தந்து, எந்தவித கஷ்டமும் இன்றி நம்முடைய வாழ்நாட்களைக் கழிக்கிறோமே, இந்தப் பொருளாதாரத்திற்கு நாளை அல்லாஹ்விடம் கேள்வி கணக்கு உண்டே என்று என்றைக்காவது மறுமையை நினைத்து அழுதிருக்கிறோமா?

உண்ண உணவின்றி கோடானு கோடி மக்கள் இன்றும் வாழ்கிறார்களே அவர்களின் நிலையை நினைத்து அல்லாஹ் நம்மை நல்ல நிலையில் வைத்துள்ளானே என்று அவனின் அருளை எண்ணி என்றைக்காவது அழுதிருக்கிறோமா?

அழ வேண்டும்
அர்த்தத்தோடு
அழ வேண்டும்.

இந்த வார உறுதி மொழி: 

நமக்கு ஏற்படும் கஷ்டமான சூழ்நிலையில், நபி(ஸல்) அவர்கள் பட்ட கஷ்டங்களை எண்ணிப்பார்ப்போம். என்னதான் நமக்கு செல்வம் வந்தாலும் அல்லது கஷ்டம் வந்தாலும், வறுமை, பசி வந்தாலும் நம்மை படைத்த அல்லாஹ்வைப் புகழ்வோம், அவனுடைய அருளை எண்ணி அவனுக்கு நன்றி சொலுத்துவோம்.

அல்லாஹு அக்பர்.
தொடரும் இன்ஷா அல்லாஹ் !
M. தாஜுதீன்

18 Responses So Far:

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் அவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

மிகவும் உணர்ச்சிவசப்படவைத்த வரிகள். இன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் படிக்கப் பட்ட தஹ்லீமிலும் வறுமை பசி பற்றிய காட்சிகள்.

ஆனால் இன்று மட்டும் இங்கு எட்டு திருமணங்கள். இந்த திருமணங்களில் எவ்வளவு உணவு வீணாகப் போகப் போகிறதோ என்கிற கண்ணீர் சிந்தும் அளவு கவலை எனக்கு.

வஸ்ஸலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் தம்பி !

கருத்து பதியவேண்டுமென்பதற்காக இங்கே சொல்லவில்லை...!

உண்மையை இங்கே ஒத்துக் கொள்ளவே எழுதுகிறேன், வாசிக்கும்போது வரிகளைக் கடக்க முடியவில்லை கண்களில் நீர் மடையாக மறித்தது !

பசித்திருப்பதால் பசித்திருப்பவர்களையும் நினைவுகூர்ந்து அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடியே நன்மைகள் செய்வோம் கண்ணீர் சிந்துவோம் !

Unknown said...

சகோதரர் தாஜுதீன் அவர்களே !

அழவைத்துக்கொண்டே இருக்கின்றீர்கள், அல்லாஹ்வை நினைத்தும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் தியாக சம்பவங்களை வைத்தும் அழவைத்துக்கொண்டே இருக்கின்றீர்கள்.

அந்த உத்தம நபியும், அவர்தம் தோழர்களும் அல்லாஹ்வுக்காக எத்தனை தியாக வாழ்க்கை வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள் என்பதை என்னும்போது, சுபுஹானல்லாஹ்! படிக்கும் எவருக்கும் கண்ணீர் வராமல் இருக்க வாய்ப்பே இல்லை.

நபி (ஸல்) அவர்கள் வறுமையில் வாடியபோதும் சரி கதீஜா (ரலி) அவர்களை கல்யாணம் செய்து, வியாபாரம் செய்து செல்வச்சீமானாய் வாழ்ந்த போதும் சரி மூன்று வேலை வயிறார சாப்பிட்டதே இல்லை என்றும் ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து பார்க்கின்றோம்.

நபி (ஸல்) அவர்களும் சரி , அவர்தம் அருமைத்தோழர்களும் சரி, தனக்கு பசிஎன்று வரும்போது, தனக்கு முன்னால் சுவைபட உணவு இருக்கும்போது , ஒரு சராசரி மனிதனின் நிலையைத்தாண்டி அந்த உணவை , தம்மைப்போல் பசி உள்ள அடுத்தவர் இருக்கும்போது தனக்கு, தன் பசிக்கு முக்கியத்தும் வாழ்நாளில் கொடுத்ததே இல்லை. சராசரி மனிதன் வாழ்க்கை, நபித்துவ வாழ்க்கை, இரண்டிலுமே, ஒரு அற்ப்புதமான, வாழ்க்கை வாழ்ந்து , தன் பசியை பின்னுக்குத் தள்ளி , அடுத்தவர் பசிக்காக அழுது , அதற்க்கு முன்னுரிமை கொடுத்து, அந்த பசியை போக்கி, அதில் சந்தோசம் கண்டு வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள் என்றால் இந்த தியாக வாழ்க்கை , ஒவ்வரு வறுமையில் உள்ளவனுக்கும் சரி, ஒவ்வரு செல்வந்தனுக்கும் சரி ஒரு அழகிய எடுத்துக்காட்டல்லவா ?

பசியைப்போக்க கல்லைக்கட்டி பொழுதைப் போக்கினார்கள் என்றும், அக்கணமே உணவு கிடைத்தும் ,அதை தம் குடும்பத்தவர் பசியைப்போக்க அனுப்பி வைத்தார்கள் என்றால், இன்று எந்த ஒரு மனிதரையாவது இப்பேர்ப்பட்ட தியாக குணத்தில் காணமுடியுமா !

என்னே ஒரு வாழ்க்கை, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை.
தியாகம், வீரம், பொறுமை, நேர்மை, இன்னும் நற்குணத்திற்கு என்னவெல்லாம் உலகில் வார்த்தைகள் உண்டோ அனைத்திற்கும் சொந்தக்காரராக வாழ்ந்து, அனைவர்க்கும் ஒரு ஜொலிக்கின்ற முன்னுதாரணமாய் வாழ்ந்து மறைந்து சென்றிருக்கின்றார்கள் என்றால் ,

இதை விட , ஒரு பின்பற்றப்படவேண்டிய சிறந்த வழக்கை வேறென்ன இருக்கின்றது ?

அல்லாஹ் நம் அனைவரையும் , இந்த சீரிய நபியின் சிறந்த வாழ்க்கையைப்பின்பற்றி அவர்தம் உத்தம சகாபாக்கள் வாழ்ந்த வாழ்க்கை வாழ்ந்து , அவர்கள் எதற்க்காக அழுதார்களோ அதற்காக நாமும் அழுது, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றவர்களாக இவ்வுலகை விட்டு பிரிய அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக !

ஆமீன்.

Abdul Razik said...

இதுவரை இத்தொடரை நான் சரியாக படித்ததில்லை.இன்று ஒரு நாள் படித்து விட்டு இவ்வளவு அருமையான தொடரை படிக்க தவர விட்டது வருத்தமாக உள்ளது.

நாம் சாப்பிடும் உணவுகளில் எத்தனை விதம், சுப்ஹானல்லாஹ். வகை வகையான சாப்பாடுகள் பல வித ருசிகள் மிகுந்த உணவு வகைகள் ஏற்பாடு செய்யும்போது, அதில் ஏதாவது ஒன்று குறைந்தால், ஏதொ பெறிய இழப்பு ஏற்ப்பட்டதுபோல் நாம் உணர்வது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். சுவர்க்கம் கிடைக்க, மற்ற நபி மார்களுடைய ஷபாஅத் கிடைக்காமல், இறுதியாக அல்லாஹ்விடம், நமது தூதர் ரசூலுல்லாஹ்வுடைய, வேண்டுகோளை அல்லாஹ்வே அங்கீகரிக்கிறான் என்று சொன்னால், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எந்த அளவிற்கு மதிப்பு உள்ளது என்பதோடு, அப்படிப்பட்ட அவர்களே உணவு விஷயங்களில் பல கஷ்டங்களை சந்தித்து இருப்பது நம்மவர்களுடைய வழி காட்டுதலுக்குத் தான்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹலாலான போதுமான உனவைத் தர வேண்டும். ஆமீன்.

நாம் சிந்தும் கண்ணீருக்கும் , அவர்கள் சிந்திய கண்ணீருக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது இக்கட்டுறையில் அருமையாக சொல்ல்ப்பட்டுள்ளது.
தம்பி தாஜுதீன் தொடர்ந்து இதை எழுதி வர வேண்டும்

Abdul Razik
Dubai

sabeer.abushahruk said...

நமக்கு நல்வழி காட்டித்தர நம் கண்மணி நாயகமும் அவர்கள்தம் குடும்பத்தினரும் சகாபாக்களும் அடைந்தத் துயரங்களும் துன்பமும்
கல்லையும் கரைக்கும் எனில் நம் மனம் எம்மாத்திரம்?

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர் தாஜுதீன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சொல்ல வார்த்தை இல்லை! கண்ணீரால் மனம் கனக்கிறது!

நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ் நமக்கு நல்லருள் புரியட்டும்.

/// நமக்கு ஏற்படும் கஷ்டமான சூழ்நிலையில், நபி(ஸல்) அவர்கள் பட்ட கஷ்டங்களை எண்ணிப்பார்ப்போம். என்னதான் நமக்கு செல்வம் வந்தாலும் அல்லது கஷ்டம் வந்தாலும், வறுமை, பசி வந்தாலும் நம்மை படைத்த அல்லாஹ்வைப் புகழ்வோம், அவனுடைய அருளை எண்ணி அவனுக்கு நன்றி செலுத்துவோம்.///

இன்ஷாஅல்லாஹ்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உருக்கமான நிகழ்வுகளும் அதன் தொகுப்பும்!

எந்த சூழல் ஏற்பட்டாலும் நபி(ஸல்) அவர்கள் பட்ட கஷ்டங்களை எண்ணிப்பார்ப்போம். செல்வம், கஷ்டம், வறுமை, பசி, எது வந்தாலும் நம்மை படைத்த அல்லாஹ்வைப் புகழ்வோம், அவனுடைய அருளை எண்ணி அவனுக்கு நன்றி செலுத்துவோம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். படிக்கும்போது அவ்வப்போது நெஞ்சைஅடைக்கசெய்தது. கண்ணீர் மடை கட்டியது. நம் எண்ணம்,ஈமான் பலம் பெற அல்லாஹ் ஹிதாயத்தை வழங்குவானாக. ஆமீன்.

Shameed said...

தலைப்பும் எழுத்தும் மிக பொருத்தமாக உள்ளது


Ebrahim Ansari சொன்னது…
தம்பி தாஜுதீன் அவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

மிகவும் உணர்ச்சிவசப்படவைத்த வரிகள். இன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் படிக்கப் பட்ட தஹ்லீமிலும் வறுமை பசி பற்றிய காட்சிகள்.



m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
ஜஸாக்கல்லாஹ் தம்பி !

கருத்து பதியவேண்டுமென்பதற்காக இங்கே சொல்லவில்லை...!

உண்மையை இங்கே ஒத்துக் கொள்ளவே எழுதுகிறேன், வாசிக்கும்போது வரிகளைக் கடக்க முடியவில்லை கண்களில் நீர் மடையாக மறித்தது !



Abdul Khadir Khadir சொன்னது…
சகோதரர் தாஜுதீன் அவர்களே !

அழவைத்துக்கொண்டே இருக்கின்றீர்கள், அல்லாஹ்வை நினைத்தும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் தியாக சம்பவங்களை வைத்தும் அழவைத்துக்கொண்டே இருக்கின்றீர்கள்.



Abdul Razik சொன்னது…

நாம் சிந்தும் கண்ணீருக்கும் , அவர்கள் சிந்திய கண்ணீருக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது இக்கட்டுறையில் அருமையாக சொல்ல்ப்பட்டுள்ளது.
தம்பி தாஜுதீன் தொடர்ந்து இதை எழுதி வர வேண்டும்



sabeer.abushahruk சொன்னது…
நமக்கு நல்வழி காட்டித்தர நம் கண்மணி நாயகமும் அவர்கள்தம் குடும்பத்தினரும் சகாபாக்களும் அடைந்தத் துயரங்களும் துன்பமும்
கல்லையும் கரைக்கும் எனில் நம் மனம் எம்மாத்திரம்?



அலாவுதீன்.S. சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சொல்ல வார்த்தை இல்லை! கண்ணீரால் மனம் கனக்கிறது!



M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
உருக்கமான நிகழ்வுகளும் அதன் தொகுப்பும்!



crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். படிக்கும்போது அவ்வப்போது நெஞ்சைஅடைக்கசெய்தது. கண்ணீர் மடை கட்டியது.

Yasir said...

நமக்கு ஏற்படும் கஷ்டமான சூழ்நிலையில், நபி(ஸல்) அவர்கள் பட்ட கஷ்டங்களை எண்ணிப்பார்ப்போம். என்னதான் நமக்கு செல்வம் வந்தாலும் அல்லது கஷ்டம் வந்தாலும், வறுமை, பசி வந்தாலும் நம்மை படைத்த அல்லாஹ்வைப் புகழ்வோம், அவனுடைய அருளை எண்ணி அவனுக்கு நன்றி சொலுத்துவோ

ZAKIR HUSSAIN said...

உணவுகளை வீணடிப்பவர்கள் நஷ்டமடைந்தோர்களாக இருக்கிறார்கள்.

இந்த மாநபியின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் நம் ஊரில் நடக்கும் திருமண விருந்து [ பெரும்பாலும் லுஹர் தொழுகைக்கு பிறகு ] பள்ளிவாசல்களில் கூடும் [ சாப்பாட்டு ] கூட்டத்திற்கு ஸ்பீக்கர் போட்டு படித்து காண்பிக்ககூடிய தரம் வாய்ந்தது.



இதை காது கொடுத்து கேட்டால் கேட்பவர்களுக்கு நன்மை ..'ஏதோ ஹதீஸ் சொல்ராங்க" என்று எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ்
உருக்கமான ஆக்கத்தால் நம் கல்நெஞ்சம் உருகி நம் அனைவரின் கண்களில் நீர் வழிந்தோட செய்வானாக!

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Unknown said...

//அதுவரை தன் தோழர்களுடைய பசி, தன்னுடைய பசியைப் பற்றியே பேசிய நபி(ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களைப் பார்த்து “ நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்கிறோம் அபூ அய்யூப் அல் அன்சாரி அவர்களே, இந்தத் தட்டில் உள்ள உணவை என்னுடை அருமை மகள் ஃபாத்திமா அவர்களிடம் சென்று கொடுத்துவிட்டு வாருங்களேன். வீட்டில் என்னுடைய மகள் ஃபாத்திமாவும்(ரலி), மருமகன் அலி(ரலி), பேரக்குழந்தைகள் ஹசன்(ரலி) ஹுசைன்(ரலி) ஆகியோரும் பசியோடு இருக்கிறார்கள், சாப்பிட்டு பல நாட்களாகிவிட்டது.” என்று கேட்டுக்கொண்டார்கள்.//
அல்லாஹு அக்பர்!!! நம்மில் யாருக்காவது இப்படி ஒரு நிலைமை நம் வாழ் நாளில் ஏற்பட்டுள்ளதா? அல்லாஹ் நம்மை நல்ல நிலையில் வைத்துள்ளதை நினைத்து, அவனுக்கு எந்த அளவுக்கு ஷுக்ரு செய்கிறோம். அவன் அளித்த நிஹ்மத்துகளுக்கு நன்றி செலுத்துவதை விட்டு விட்டு, மற்றவர்களைப்பற்றி புறம் பேசுவதிலும்,அவதூறு பரப்புவதிலும் அல்லவா நம் சமுதாயத்தவர்களின் காலம் கழிகிறது...யா அல்லாஹ் எங்களை,மன்னித்து,
எங்களுக்கு நேர் வழி காட்டுவாயாக!! ஆமீன்!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை நிதானமாக வாசித்து கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும், வாசித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரன்.

ஊக்கம் தரும் உங்கள் கருத்துக்கள் என்னை இன்னும் இது போன்ற நேகிழ்வூட்டும் வரலாற்று சம்வங்களை தொகுத்தளிக்க தூண்டுகிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.

இந்த பதிவை நீங்கள் வாசித்ததோடல்லாமல், உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வாசித்துக்காட்டுங்கள். இணைய வசதியில்லாத உங்கள் சொந்தங்களுக்கு தேவைப்பட்டால் பிரிண்ட் எடுத்து கொடுத்து அவர்களை வாசிக்க சொல்லுங்கள்.

நபி(ஸல்) அவர்களின் எளிய வாழ்க்கை முறையை மீண்டும் மீண்டும் ஞாபக்கடுத்திக் கொண்டிருப்பதன் மூலம், நம்மிடம் நிச்சயம் இஹ்லாசுடன் நல்ல மாற்றம் ஏற்படும். இன்ஷா அல்லாஹ்.

நமக்கு ஏற்படும் கஷ்டமான சூழ்நிலையில், நபி(ஸல்) அவர்கள் பட்ட கஷ்டங்களை எண்ணிப்பார்ப்போம். என்னதான் நமக்கு செல்வம் வந்தாலும் அல்லது கஷ்டம் வந்தாலும், வறுமை, பசி வந்தாலும் நம்மை படைத்த அல்லாஹ்வைப் புகழ்வோம், அவனுடைய அருளை எண்ணி அவனுக்கு நன்றி சொலுத்துவோம்.

Meerashah Rafia said...

பெரிய பதிவு என்பதால் முழுவதும் படிக்க முடியவில்லை என்று சொல்வதைவிட அதிக ருசிகொண்ட உணவான அல்-பைக் ப்ரோஸ்ட் உட்கொண்டதால் திக்குமுக்குடன் முழுவதையும் படிக்கமுடியாமல் அந்த சிவப்பு எழுத்துக்களின்மூலம் அவர்கள் கண்ணீர் விட்ட அதே தேசத்தில் இந்த நொடிப்பொழுதில் எங்கள் நிலையை உணரமுடிந்தது..

அவர்களது திக்குமுக்கும்(மறுமையை எண்ணி) எங்களது திக்குமுக்கும் (வயிற்றை எண்ணி) ஈமானின் உண்மை நிலையை உணர்த்துகின்றது.


பரக்கத்தான உணவையும், சீரான செல்வத்தையும் கொடுத்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்..

Canada. Maan. A. Shaikh said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்!

சொல்ல வார்த்தை இல்லை கண்ணீரால் மனம் கனக்கிறது!

நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ் நமக்கு நல்லருள் புரியட்டும், இன்ஷா அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு