Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 13 9

அதிரைநிருபர் பதிப்பகம் | October 02, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

முந்தைய பதிவில் உத்தம நபியின் உன்னதத் தோழர் பிலால்(ரலி) அவர்களிடம், ஆருயின் நபியின் அருமைத் தோழர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களும், உமர்(ரலி) அவர்களும் எப்படி நடந்து கொண்டார்கள் என்று சுருக்கமாகப் பார்த்தோம், படிப்பினைகளை அறிந்து கொண்டோம். இந்தப் பதிவில் வித்தியாசமான நிகழ்வுகளைப் பற்றி பார்க்கலாம்.

வீட்டில் கணவன் மனைவிடம் பழகும் விதம், மனைவி கணவனிடம் பழகும் விதம் அன்றாடம் நாம் கண்டு வருபவையே என்றாலும், கெளரவம், வரட்டு பிடிவாதம், பெருமை, முகஸ்துதி போன்றவைகள் நமக்கு நிம்மதி தருவது போல் இருந்தாலும், அது ஒரு நிரந்தர நிம்மதி அல்ல என்பது நாம் கண்டு வரும் அனுபவப்பூர்வமான உண்மை.

மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்து கொள்கின்றேன்’ என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)

எனவே, ஒருவர் நல்லவர் என சாட்சி கூற வேண்டுமென்றால் அவர் அவரது மனைவியிடம் நல்லவராக இருக்க வேண்டும்.

‘அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.’ (அல் குர்ஆன் 4:19)

மேற்குறிப்பிட்ட வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றது.

மேற்சொன்ன ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனங்கள் போல் ஏராளமானவை உள்ளன. இருப்பினும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எப்படி தம் மனைவியர்களிடம் நடந்து கொண்டார்கள் என்பதை ஒரு சில சம்பவங்களை வைத்துப் பார்த்தால் உண்மையில் ஆச்சரியப்படுவோம்.

ஓரு முறை நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்கள் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களுக்கும் சிறு பிரச்சினை ஏற்பட்டது. தன் கணவர் அமைதியான சுபாவம் உள்ளவர் என்ற எண்ணத்தினாலோ என்னவோ அந்த நேரத்தில் ஆயிஷா(ரலி) அவர்கள் கொஞ்சம் சத்தம் போட்டு நபி(ஸல்) அவர்களை நோக்கி பேசினார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள் தந்தை அபூபக்கர்(ரலி) அவர்கள் அந்த இடத்தருகில் வந்தார்கள். மகள் போடும் சப்தம் கேட்டு கோபத்துடன் நபி(ஸல்) அவர்கள் வீட்டினுல் அனுமதி பெற்று உள்ளே சென்றார்கள் அபூபக்கர் (ரலி) அவர்கள். உடனே அபூபக்கர்(ரலி) அவர்கள் “ரஸூல் ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முன்னெதிரே சத்தமாகவா பேசுகிறாய்?” என்று சொல்லி தன் மகளை அடித்து விடுகிறார்கள். அதனால் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஒரு சிறிய காயம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் இடையில் வந்து தம் அருமைத் தோழர், மாமனார் அபூபக்கர்(ரலி) அவர்களைத் தடுத்து நிறுத்தி அங்கிருந்து போகச் சொன்னார்கள்.

அபூபக்கர்(ரலி) அவர்கள் போன பிறகு ஆயிஷா(ரலி) அவர்கள் தன் தந்தையிடம் அடி வாங்கியதால் கோபத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அமைதியின் சிகரம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தன் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களிடம் “ஆயிஷாவே ஏன் என்னுடன் கோபம் கொள்கிறீர்கள், நான் இடையில் பாய்ந்து உங்கள் தந்தையைத் தடுக்கவில்லையா? நான் உங்கள் தந்தையை மேலும் அடிக்கவிட வில்லையே?” என்று சொல்லி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கெளரவம் பார்க்காமல் சமாதானம் செய்தார்கள். விட்டுக் கொடுத்து பேசினார்கள் கருணையின் சிகரம் நபி(ஸல்) அவர்கள். சிறிது நேரம் கழித்து அன்னை ஆயிசா(ரலி) அவர்களின் கோபம் பறந்து சென்றது, மகிழ்ச்சியோடு சிரித்து சந்தோசமாக இருந்தார்கள். இந்த சந்தர்பத்தில் அபூபக்கர்(ரலி) அவர்கள் மீண்டும் நபி(ஸல்) அவர்கள் இல்லத்திற்கு வந்தார்கள். இருவரும் சமாதானமடைந்து சந்தோசமாக இருப்பதைப் பார்த்த அபூபக்கர் “உங்கள் யுத்தத்தில் என்னை சேர்த்துக் கொண்டது போல், உங்கள் சமாதானத்திலேயும் எங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றுக் கேட்டுக் கொண்டார்கள்.

இது போன்ற ஒரு பிரச்சினை நம் வீட்டில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு மனைவியானவள் சத்தம்போட்டு தன் கணவனிடம் சண்டை போடுகிறார், அந்த சமையத்தில் தாயோ, அல்லது தந்தையோ அந்த மனைவின் சத்தம் கேட்டு, அவளை கண்டிக்கிறார்கள். கணவனும் அவரது பங்கிற்கு சேர்ந்து சண்டையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒரு வைராக்கியத்தோடு இருப்பார் அந்த மனைவி, “நம்ம உம்மாவையும், வாப்பாவையும் வைத்து எனக்கு திட்டு வாங்கி கொடுத்து விட்டாரே இந்த மனுசர் இருக்கட்டும் அவருக்கு நான் யார் என்று புரிய வைக்கிறேன்” என்று மனைவியானவள் நினைக்க. அடுத்து கணவனோ “மாமியார் மாமனார் முன்னாடி என்னோடு சண்டையிட்டாளே இவள், வரட்டும் என்ன செய்கிறேன்” என்று வரட்டு பிடிவாத கெளரவத்தால் மனதில் வீணான எண்ணங்களை ஏற்படுத்தி நாட்கணக்கில் அந்த கோபத்தோடு காலத்தை ஓட்டினால் வாழ்வில் நிம்மதி இருக்குமா? 

ஆனால் நபி(ஸல்) அவர்கள் கோபப்படாமல் இறங்கி வந்து தன் மனைவியைச் சமாதானப் படுத்தினார்கள், பிரச்சினை சொற்ப நிமிடங்களில் முடிந்தது, மேலும் சமாதானம் அடைந்த அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் தன்னைக் கண்டித்த தந்தையோடும் உடனடியாக ஒற்றுமையானார்கள். வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் குடும்பத்தில் நிரந்தர சந்தோசமாக இருந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் நாம் காண்கிறோம்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் மதினாவில் வசிக்கும் ஃபாரிஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் வந்து “நபி(ஸல்) அவர்களே நான் ஒரு உணவு(சூப்) செய்திருக்கிறேன், நீங்கள் என் வீட்டிற்கு வந்து அருந்தி விட்டு செல்லுங்கள்” என்று அழைத்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “என் மனைவி ஆயிஷாவையும் அழைத்துக்கொண்டு வரவா” என்று கேட்டார்கள், ஆனால் அந்த நபர் வேண்டாம் என்று சொல்லி சென்று விட்டார். 

மறுபடியும் அந்த நபர் வந்து “நபி(ஸல்) அவர்களே நான் ஒரு உணவு(சூப்) செய்திருக்கிறேன், நீங்கள் என் வீட்டிற்கு வந்து அருந்தி விட்டு செல்லுங்கள்” என்று அழைத்தார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் “என் மனைவி ஆயிஷாவையும் அழைத்துக் கொண்டு வரவா” என்று கேட்டார்கள், மீண்டும் அந்த நபர் வேண்டாம் என்று சொல்லி சென்று விட்டார். 

மூன்றாவது முறையாக அந்த நபர் வந்து “நபி(ஸல்) அவர்களே நான் ஒரு உணவு(சூப்) செய்திருக்கிறேன், நீங்கள் என் வீட்டிற்கு வந்து அருந்தி விட்டு செல்லுங்கள்” என்று அழைத்தார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் “என் மனைவி ஆயிஷாவையும் அழைத்துக் கொண்டு வரவா” என்று கேட்டார்கள், “ஆம், அழைத்து வாருங்கள்” என்றார் அந்த ஃபாரிஸ் நாட்டை சேர்ந்த நபர். அப்போது நபி(ஸல்) அவர்களும், அன்னை ஆயிஷா(ரலி) அவர்களும் தோளோடு தோள் ஒட்டிக் கொண்டவர்களாக அந்த வீட்டிற்கு சென்றார்கள் என்று ஹதீஸ்களில் பார்த்து வாசிக்கும் போது எவ்வளவு சந்தோசமாக உள்ளது. 

இங்கு நபி(ஸல்) அவர்கள் கெளரவம் பார்க்கவில்லை. தனக்கு கிடைக்கும் உணவு, விருந்து தன் மனைவிக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அந்த விருந்து இருவருக்கும் கிடைக்கும் வரை காத்திருந்தார்கள். அதோடு அல்லாமல், அவர்கள் தன் மனைவியோடு ஒற்றுமையாக இருப்பதற்கு சான்றாக தோளோடு தோள் ஒட்டியவர்களாக வீதியில் சென்றார்கள்.

நம்முடைய வாழ் நாட்களில் இது போன்ற ஒரு சம்பவம் நடப்பதாக இருந்தால் எப்படி இருக்கும். ஒரு திருமண அழைப்பிதழ் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். கணவனுக்கு மட்டும் அழைப்பு வருகிறது. உடனே கணவன் சொல்லுவார், எனக்கு பகல் சாப்பாடு வேண்டாம் கல்யாண விருந்து நீ பிள்ளைகள் தனியாக சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு விருந்திற்கு சென்று ஒரு கட்டு கட்டுவார். இதுபோல் மனைவிக்கு மட்டும் ஒரு திருமண அழைப்பு பெண்களால் அழைக்கப்படுகிறது, கணவனுக்கு பத்திரிக்கை வரவில்லை என்றால், மனைவி கணவனிடம் “நீங்கள் கடையில் சாப்பிடுங்கள், அல்லது உம்மா வீட்டில் இல்லாட்டி உங்கள் ராத்தா தங்கச்சி விட்டுல சாப்பிடுங்கள்” என்று சொல்லி விட்டு விருந்துண்ண சென்று விடுவாள். அல்லது அப்படியே இருவருக்கும் சொந்தத்தில் திருமண அழைப்பு வந்திருந்தால். இருவரும் திருமண விட்டிற்கு ஒன்றாக செல்ல மாட்டார்கள், அப்படி ஒன்றாக சென்றாலும், முன்னால் கணவன் செல்வார் நடுவில் பிள்ளை பின்னால் மனைவி வருவார். 

போகிற வழியில் “அட பிள்ளையை ஒழுங்கா பிடிச்சுக்கிட்டு வா” என்று கணவன் சொல்ல “நான் ஒழுங்கா பார்த்துக் கொண்டுதான் வருகிறேன் நீங்கள் ஒழுங்கா போங்க” என்ற கசப்பான உரையாடலும் இடம் பெறத்தான் செய்கிறது. மேலும் பேருந்து போன்ற வாகனத்தில் சென்றால் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள், பேருந்தை விட்டு இறங்கியவுடன், கணவனுக்கும் மனைவிக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருக்கும் இரண்டுக்கும் இடையில் பிள்ளைகள். என்னதான் அவள் நம்மைக் கேவலப்படுத்தினாலும் அவள் ஒரு பெண், நபி(ஸல்) அவர்கள் மனைவியோடு சிறந்தவரே உலகில் சிறந்தவர் என்று சொன்னார்கள் என்ற நபி மொழியை ஞாபகப்படுத்தி அவள் செய்த தவற்றைப் பொறுத்துக் கொண்டு அவளோடு ஒன்றாக வீதிகளில் செல்ல வேண்டும்.

வெளியில் செல்லும் போது மனைவியோடு ஒன்றாக செல்வதா? என்ற வெட்கம் நம்மிடம் வந்து கணவன் மனைவியை வெளி உலகுக்கு சண்டைக்காரர்கள் போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. நபி(ஸல்) அவர்களின் அழகான வழிகாட்டுதல் நம் கண் முன்னே இருக்கும் போது,  கணவன் மனைவியும் ஏன் தெருவில் ஒன்றாக போக முடியாது? நான் என் மனைவியோடு இரக்கம் கொண்டவன், என் மனைவி என்னோடு இரக்கம் கொண்டவள் என்ற ஒவ்வொரு கணவன் மனைவியிடத்திலும் சூழல் உருவாக வேண்டும்.

ஆனால், நபி(ஸல்) அவர்கள் தனக்கு கிடைக்கும் விருந்திலும் தன் மனைவிக்கு பங்குண்டு என்று நிரூபித்தார்கள். தான் வெளியில் சென்றாலும் தன் மனைவியோடு செல்ல வேண்டிய இடங்களுக்கு சந்தோசமாக ஒன்றாக செல்வேன் என்பதை நமக்கு எடுத்து காட்டி வாழ்ந்தும் காட்டியுள்ளர்கள். நாம் நம்முடைய வாழ்வு, கணவன் மனைவியோடு நடந்து கொள்ளும் முறை, மற்றும் மனைவி கணவனோடு நடந்து கொள்ளும் முறை நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையிலா உள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேல் சொன்ன நபி(ஸல்) அவர்களின் வரலாற்றில் உள்ளது போல் இக்காலத்திலும் இளைஞர்களில் சிலரும், மேலும் வயதான தம்பதிகளில் பலரும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்பதையும் இங்கு மறுக்க இயலாது. அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள் புரிவானாக.

நபி(ஸல்) அவர்கள் எப்படி தம் மனைவியரோடு நல்ல முறையில் வாழ்ந்து சந்தோசமாக தம் வாழ்வை கழித்தார்களோ அது போல் நாமும் சதோசமாக நாமும் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
தொடரும்...
M. தாஜுதீன்

9 Responses So Far:

Unknown said...

மனைவியை மனதாரப் பாராட்டுங்கள். அது அவரின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு சிலு, சிலுவென்று காற்று வீசுகையில் மனைவியின் காதருகில் சென்று ஐ லவ் யூ என்று சொல்லுங்கள். அவர் பதில் சொல்லாமல் புன்னகை புரிந்தால். ஐ லவ் யூ சொன்னால் லவ் யூ டூ என்று சொல்ல வேண்டும் என்று கூறுங்கள்.

நீங்கள் எப்பொழுது அவரை முதன்முதலாகப் பார்த்தீர்கள். நிச்சயதார்த்தத்தில் எப்படி ஓரக்கண்ணால் பார்த்தீர்கள், திருமணத்தில் உங்கள் மனைவி எப்படி வெட்கப்பட்டு தலைகுனிந்தபடி நின்றார், குழந்தை பிறந்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்பது போன்று பேசுங்கள். இதெல்லாம் எத்தனை தடவை பேசினாலும் அலுக்காத ஆனந்த விஷயங்கள்.எவ்வளவு காலம் சென்றாலும்.

கணவரின் முதல் ஆலோசகரும், விமர்ச்சகரும் மனைவிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள். மனைவி ஒரு மந்திரி என்பதை அனைத்து சந்தர்ப்பத்திலும் கணவருக்கு உணர்த்த வேண்டும். கணவரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதோடு மட்டும் மனைவியின் கடமை முடிந்து விடுவதில்லை. தவறுகளை எடுத்துக்கூறி திருத்துவதற்கும் உரிமை உண்டு. புரிதல்தான் வாழ்க்கை

கணவன் மனைவிக்கிடையே ஒரு சில நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொண்டு உடனடியாக தீர்ப்பதில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்த்தாலே குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படாது. ஈகோவை துரத்துங்கள்

கணவரிடம் பேசும்போது, வெளிப்படுத்தும் வார்த்தைகளில் அன்பும் கனிவும் மட்டுமே இருக்கவேண்டும். அதிகாரமோ, ஆணவமோ தேவையில்லை. சிறு வார்த்தைக் கூட மனதளவில் காயத்தை ஏற்படுத்தி விடும். நீங்கள் பேசும் வார்த்தைகள் எளிதாக உங்கள் கணவரை சென்றடைந்து அதை செயல்படுத்தும் விதமாக அமைய வேண்டும்.

எந்த சந்தர்ப்பத்திலும் ஈகோவை எட்டிப்பார்க்க விடாதீர்கள். கணவருக்கு மதிப்பு எந்த சந்தர்ப்பத்திலும் பிறரின் முன் கனவரை விமர்ச்சிக்க வேண்டாம். குழந்தைகளின் முன் கூட கணவரை விமர்ச்சிப்பது தவறான முன் உதாரணமாகிவிடும். கணவர் செய்வது தவறாகவே தெரிந்தாலும், தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில் பேசி அவரது தவறை புரிய வைக்க வேண்டும். மன உளைச்சலை தீர்க்கலாம்

எல்லா நாட்களிலும் படுக்கையறையில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேளைப்பளு, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களில் சில நாட்களில் செயல்பட முடியாத நிலை ஏற்படாலாம். அன்றைய தினத்தில் கணவரை தொந்தரவு செய்வதை விடுத்து அவரை உற்சாகமூட்டும் விளையாட்டுக்களின் ஈடுபடலாம். அது கணவரின் மன உளைச்சலை போக்கி விடும்.

கணவர் என்பவர் காலம் முழுவதும் நம்முடன் வரப்போகிறவர் என்ற எண்ணம் மனைவிக்கு இருக்க வேண்டும். வாழ்வின் சரிபாதி. கணவரின் மதிப்பை உயர்த்துவது மனைவியின் கடமை. அசாதாரண சந்தர்ப்பங்களில் கணவரின் நண்பர்கள் உங்கள் வீட்டிற்கு வர நேர்ந்தால் நீங்கள் நடந்து கொள்ளும் விதம்தான் அவர்களிடம் மதிப்பை உயர்த்தும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மனைவி சொல் மந்திரம்
உம்மா சொல் உயர்தரம்
உறவுகள் சொல் தந்திரம்

//வாழ்வின் சரிபாதி// யா ?
ஸாரி பாதி தான் !

கருத்துச் சொல்றேன்னு 'வாயை விட்டு' மாட்டிக்கனுமான்னு எனக்கு வந்த நெனப்பு எத்தனை பேருக்கு இருந்திருக்குமோ தெரியலைங்க !

இருந்தாலும் அவர்கள் வாழ்வோடு நம் வாழ்நாட்களை ஒப்பீடு செய்து படிப்பினை போதிக்கும் இந்த தொடர்.. எவ்வித இடரின்றி படரனும் அனைவரிடமும் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கணவன் மனைவி லவ் நீள அழகான சம்பவ எடுத்துக்காட்டுகள்!

காதராக்காவும் "லவ் யூ" நீள சொன்ன குறிப்புகளும் அருமை!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எப்படி தம் மனைவியரோடு நல்ல முறையில் வாழ்ந்து சந்தோசமாக தம் வாழ்வை கழித்தார்களோ அது போல் நாமும் சதோசமாக நாமும் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் அடிப்படையில் மட்டுமே கணவன் மனைவி உறவு பலப்படும் என்பதை மார்க்க ரீதியாகவும் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி வாழ்க்கை மூலமாகவும் சுட்டிக்காட்டி சிறப்பாக எழுத்கப்பட்டிருக்கிறது இவ்வாரம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, தாஜுதீன்

Yasir said...

அழகான சம்பவங்கள்/ படிப்பினைகள்....பல வேலைப்பளுகளுக்கிடையே இதனை ஆக்கமாக எழுதி நன்மைகளை கொள்ளை அடிக்கும் சகோ.தாஜூதீனைப் பார்த்து பொறாமையாக இருக்கு....தொடரட்டும் நண்பரே

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். அற்புதம்! அன்மையில் நெருங்கி பெண்மயில் வருகையிலே உண்மையில் ஆண் மயில் மகிழ்ச்சியில் ஆடும்! இது என்றும் நன்மையில் முடியும். இது மனித வாழ்கைக்கும் பொருந்தும் என்பதை கண்மணி நபி(ஸல்) காட்டியவிதம் நாம் வாழ்ந்தால் பண்மையில் இனிமை தேடிவரும்.தனிமையில் நடப்பதால் கடுமை, கொடுமை, பகைமை இப்படி பொல்லாதவைகள்தான் நடக்கும்.

crown said...

அழகிய உதாரணங்களுடன், ஆதாரங்களும் " நடை'முறை(முரன்)க(லை)ளையும் சொல்லும் அருமையான தொடர் என்றும் தொடர அல்லாஹ் துணை நிற்பதுடன் அதற்குண்டான கூலியை அருள்வானாக ஆமீன்.

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் ! அஸ்ஸலாமு அலைக்கும். நிதானமாக இப்போதுதான் படித்தேன்!. மகிழ்ந்தேன்! வியந்தேன்!

பாராட்டுக்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தொடர்ந்து இந்த தொடர் பதிவுக்கு ஊக்கம் தந்து வாசித்து பயனடைந்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸக்கல்லாஹ ஹைரா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு