Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமிய தீவிரவாதம் 27

அதிரைநிருபர் பதிப்பகம் | October 10, 2013 | , , , , ,

"தீவிரம்" என்ற சொல்லை இதற்கு முன்பு எங்கெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று "தீவிரமாக" யோசிச்சுப்  பாருங்க! 'தீவிர' விளைச்சல்,'தீவிர' மழை, 'தீவிர' முயற்சி, 'தீவிர' பயிற்சி, 'தீவிர' பக்தர்...ஏன் 'தீவிர' நாத்திகர் போன்ற பல்வேறு அடைமொழிகளுடன் இணைந்து பேசப்படுமே அந்த தீவிரம் தாங்க!

சப்பைமேட்டருக்கெல்லாம்கூட மூளையைக் கசக்கி சிந்தித்துக் கொண்டிருப்பவரிடம் என்ன 'தீவிர'யோசனையில்  இருக்கிற மாதிரி இருக்கு என்றும்,குப்புசாமி அண்ணே மகசூல் எப்படி இருக்கு? என்று கேட்டால் 'தீவிர' மழை  பெய்ந்திருப்பதால் 'தீவிர'மாக நடவு நாட்டு, குறுவை/சம்பா தீவிரமா சாகுபடி செய்து, சில மாதங்கள் கழித்து  மீண்டும் 'தீவிர' அறுவடை செய்யனும் என்பார். 

இவை மட்டுமின்றி ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் சிறைக்குச் செல்வதை தவிர்க்க நெஞ்சில்  கைவைத்துக் கொண்டு உட்கார்ந்த தலைவர், 'தீவிர' சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்களின் 'தீவிர' கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பார்.இப்படியாக தீவிரம் என்ற சொல்லானது, நமது அன்றாட வாழ்க்கையில்  பல்வேறு சூழல்களில் புழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒருவிசயம் இயல்புக்கு மீறி செல்வதை தீவிரம் என்று  சொல்லலாம். 

சரி,தீவிரம் தெரியும்! அது யாருங்க தீவிரவாதிகள்? ஆளை விடுங்க நமக்கு ஒன்றும் தெரியாது என்றோ அல்லது  புரியலையே என்றாலோ நீங்கள் தினசரி செய்திகளையோ அல்லது நாட்டு நடப்புகளையோ தீவிரமாக கவனித்து வருகிறீர்கள் அல்லது 'தீவிர' தமிழ் சினிமா ரசிகராக இருக்க வேண்டும். தீவிரவாதிகள் யாரென பார்க்கும் முன்பாக  கால எந்திரந்தை சற்று பின்னோக்கி ஓட்டுவோம். 

ஆகஸ்ட் 15,1947க்கு முன்பு ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி வந்த இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளிலும்  தீவிரவாதிகள் இருந்துள்ளனர்! ஆங்கிலேய அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்களை இப்படித்தான்  தீவிரவாதிகள் (Terrorist) என்று செல்லமாகக் குறிப்பிடுவர்.அதாவது, அடக்குமுறைக்கு எதிராகப் போராடும்போது, அடக்கியாள்பவர்கள்தான் யார் தீவிரவாதி என்பதை தீர்மானிப்பர்! உலகளவில் இந்தப் பொறுப்பை அமெரிக்காவும்,  அதற்கு ஊதுகுழலாக ஊடகங்களும் எடுத்துக் கொண்டுள்ளன. 

அவ்வகையில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருடன் சமரசமாக நடந்து சுதந்திரத்தை அடையலாம்  என்ற மிதவாத பிரிவினரும், அடிக்கு அடி,உதைக்கு உதை என ஆங்கிலேயரை நிம்மதியாகத் தூங்கவிடாமல் செய்து  சுதந்திர வேட்கையை தட்டி எழுப்பியவர்களும் இருந்தனர். இவர்களில் குறிப்பிடதக்கவர்கள் நேதாஜி, லஜபதி ராய், பகத்சிங்,திப்புசுல்தான்,பேகம் ஹசரத்மஹல் என ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் இருந்தனர். ஆங்கிலேயருக்கு  தீவிரவாதிகளாகத் தெரிந்தவர்கள், இந்தியர்களுக்கு தியாகிகளாக /புரட்சியாளர்களாகத் தெரிந்தனர் என்பதிலிருந்து  தீவிரவாதத்திற்கு மாறுபட்ட அர்த்தங்கள் உள்ளன.

சாதாரணமாக இருப்பவர்களின் இயல்பு நிலை மாறுகிறது என்றால், அதற்கு வேறு புறக்கார(ணி)ணங்களும் இருக்க  வேண்டும். அவ்வகையில் தீவிரவாதம் என்பது இருபக்க வினைசார்ந்த தொடர் நிகழ்வு. இதையே, அச்சுருத்தல்கள்  மூலம் அரசியல் நோக்ககத்தை நிறைவேற்றலாம் என்று நம்புவதை, தீவிரவாதம் என்று குறிப்பிடப்படுகின்றனர். 

இப்படியாக,மென்மையாக புழங்கப்பட்டு வந்த ஒரு சொல், கொஞ்சம் கொஞ்சமாகத் 'தீவிர'மடைந்து இஸ்லாமிய  தீவிரவாதம்,காவி / இந்து தீவிரவாதம், கிறிஸ்தவ தீவிரவாதம், சீக்கிய தீவிரவாதம், பவுத்த தீவிரவாதம் என அவரவர்  வசதிக்கேற்ப மதமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இஸ்லாமிய தீவிரவாதம் என்பதை முன்னிறுத்துவதில்  சிலர் தீவிரமாக இருப்பதிலிருந்து, தீவிரவாதம் - வசதிக்கேற்ப கையாளப்படுகிறது என்பது புலணாகிறது.

ஏனைய மத / இயக்க / சித்தாந்தவாதிகளைப் பற்றி அவரவர் மார்க்கம் என்ன சொல்கிறது என தெரியவில்லை.  ஆனால், ஓர் முஸ்லிம் எக்காரணம் கொண்டும், எந்தச் சூழலிலும் சகமனிதனுக்குத் தீங்கிழைப்பவனாக இருக்கவே முடியாது என்பது உறுதியாகத் தெரியும். இஸ்லாம் / ஸலாம் என்றால் அமைதி. தீவிரமும் அமைதியும் எதிரெதிர்  நிலை கொண்டவை எனும்போது,இஸ்லாமிய தீவிரவாதம் என்பது பொருத்தமற்றதும், பொருளற்றதும் ஆகும்.

நாவால்,கரங்களால்,செயலால் சகமனிதனுக்கு தீங்கிழைக்காதவரே உண்மையான முஸ்லிம். தொழுகையைக்  கொண்டும் பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்பது இறைக் கட்டளை. ஓருயிரை  வாழவைத்தவர் ஒரு சமூகத்தையே வாழவைத்தவராவார்; அதுபோல் ஓருயிரை கொன்றவன்  சமூகத்தையே  அழித்தவன் என்பதெல்லாம் முஸ்லிம்களுக்கான இலக்கணம். 

இவற்றை கவனத்தில் கொள்ளாது இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி என்பது காழ்ப்புணர்வன்றி  வேறென்ன?

அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்

27 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
முதலில் என் அபிமான எழுத்தாளன் நண்பன் ஜாமாலுக்கு என் வாழ்த்துக்கள். எப்பொழும் தீவிரமான விசயத்தைகூட மிதமாக அழகாக பதியச்சொல்வதில் கெட்டிகாரன். இப்பொழுது நடக்கும் பத்திரிக்கை(அ)தர்மத்தின் கேலிக்கூத்தை கையில் எடுத்திருப்பது பாரட்டுக்குரியது. நம்மவர்களே பலர் ஊடகத்தில் வரும் நமக்கெதிரான செய்திகளை அப்படியே நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். அந்த அறியாமை நீங்கச்செய்வது நம் கடமை! இதை ஆரம்பித்து வைத்துள்ள நண்பனின் முயற்சிக்கு மீண்டும் தீவிரமான நன்றி!

Yasir said...

”நச்” என்ற் கட்டுரை...சொல்ல வந்த விசயத்தை தண்டாவாளத்தைவிட்டு விலகாத இரயில் போல் - நேராக புரியும் படி சொல்லும் எழுத்துநடை.....ஆபீஸில் வந்து உட்கார்ந்த உடன் தீவிரமாக படித்து முடித்து விட்டேன்..வாழ்த்துக்களும் வரவேற்ப்பும்....ஜமாலுதீன் அவர்களே..... “ இஸ்லாமிய தீவிரவாதம்” என்ற வார்த்தையை பிரபலமாக்கி இஸ்லாத்திற்க்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தியும் வருகின்றனர்....அவமானப்படுவது/படபோவது அவர்கள்தான்...அல்லாஹ் அவன் மார்க்கதை அழகாக்கி வைக்க பெருப்பேற்றுள்ளான்

crown said...

Yasir சொன்னது…

”நச்” என்ற் கட்டுரை...சொல்ல வந்த விசயத்தை தண்டாவாளத்தைவிட்டு விலகாத இரயில் போல் - நேராக புரியும் படி சொல்லும் எழுத்துநடை....
-------------------------------------------------------
தண்டவாளத்தை விட்டு ரயில் நகர்ந்தாலும் அதுவும் இஸ்லாமிய தீவிரவாதம்/சதி என்னும் எழுதப்படாவிதி இங்கே!

Unknown said...

அதிரைக்காரனிடமிருந்து..நல்ல கட்டுரை

ஒருபுறம் ஒருவகை சமூகம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் அதேவேளை மறுபுறம் ஊடகங்கள் அனைத்தும் கைகோர்த்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக வலை பிண்ணுகின்றன

மாற்றான் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று போற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, 'சரணடைய மாட்டேன்' சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்' என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.

ஆனால் ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் தியாகிகள் என ஊடகங்களா போறப் படுகிறார்கள்

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அன்பிற்குரிய அதிரைக்காரன்,

அதிரையின் காரசார எழுத்தாளரும் சமூக அவலங்களுக்கு எதிராக ஆக்கபூர்வமான சிந்தனைகளைக்கொண்டு வெகுண்டெழுபவரும் என்னை மிகவும் வசீகரிக்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரருமாகிய தங்களின் எழுத்து இந்நாள்வரை அதிரையின் இலக்கியத் தரமிக்க இந்த அதிரை நிருபர் தளத்தில் வாராதிருந்த பெருங்குறையைக் களைந்தமைக்கு மிக்க நன்றி.

இந்த இனிய தொடர்பு நீண்ட நெடு காலம்வரை நிலைக்க வேண்டுமாயும் தாங்கள் அடிக்கடி இங்கு எழுத வேண்டுமாயும் துஆச் செய்து தங்களை அதிரை நிருபரின் வாசக வட்டம் சார்பாக வரவேற்கிறேன்.

நன்றி.

sabeer.abushahruk said...

தீவிரம் என்னும் மிதமான, சாந்தமான அர்த்தம் கொண்ட வார்த்தையை ‘வாதம்’ என்னும் நோய்சேர்த்து தீவிர வாதம் என்னும் படுபயங்கர அர்த்தமாக மாற்றிய ஏய்ப்பைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். சாட்டையைத் தீவிரமாகச் சுழற்றிக் காட்டியிருக்கிறீர்கள் சுறீர் சுறீர் என்று.
சரியாகச் செயல்படுவதைத் தீவிரவாதம் என்றால் மிதவாதம் என்னவாம்? ச்சும்மா தேமே என்று உட்கார்ந்திருப்பதா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வக்கிர எண்ணம், அவதூறு கொண்டவர்கள் பற்றி தீவிர, தெளிவான விளக்கம்!

இப்படிக்கு
மனிதநேய தீவிரவாதி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு என்னிடம் சொன்னான் "ஜமால் நல்லா எழுதியிருக்கான் அதைப் பார்க்கவில்லையா?"

நானும் கிரவ்னிடம் சொன்னேன் "ஜ மாலை, மாலை க்குள் வந்து பார்க்கிறேன் என்று !"

நான்ஞ்சொன்ன்னது ஏதும் எடக்கு மொடக்கு இருக்கா ?

எல்லா வாதியும் சரிதான் பொலக்கத்தில இப்போ இருக்கிற இன்னொன்றையும் சேர்த்துக்க வேண்டியதுதான்... "இயக்க வாதி"

ஆளுக்கொரு சாதி யானதுதான் ஐய்யோ கதி !

இன்று ஒரு கட்டுரையை இந்து தமிழ் நாளிதழில் வாசிக்க நேர்ந்தது... எங்கே போய் குமுறுவது !?

அபூ சுஹைமா said...

Terrorism என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ் ஊடகங்கள் தரும் தவறான சொற்பிரயோகம் தீவிரவாதம் என்பது. சரியான சொல் பயங்கரவாதம் என்பதே. எனவே, இனி எவரேனும் நம்மை இஸ்லாமியத் தீவிரவாதி என்றழைத்தால் ஆத்திரப்படாமல் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறலாம். பின்னர் அவருக்கு பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறி புரிய வைக்கலாம்.

அதிரைக்காரன் said...

வ அலைக்கும் சலாம்.

தஸ்தகீர், நீ அமெரிக்காவில் இருந்து கொண்டு கால்மேல் கால்போட்டு எழுதுவதை சிம்பாலிக்கா சொல்வதற்கு என் பெயர்தான் கிடைத்ததா? :)

காந்தியைக் கொன்றவன் முஸ்லிமல்ல, கென்னடியைக் கொன்றவன் முஸ்லிமல்ல, இந்திரா, ராஜீவைக்கொன்றதும் முஸ்லிமல்ல. வெடிகுண்டைக் கண்டுபிடித்தவனும் முஸ்லிமல்ல எனும்போது இஸ்லாமும், முஸ்லிமும் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது எனில் அவ்வாறு செய்தவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு Terrified ஆனவர்களாகத்தான் இருக்க வேண்டும். இந்த நுண்ணிய வேறுபாட்டை நாமறிந்தவர்களுக்குப் புரிய வைத்தால் போதும். இன்ஷா அல்லாஹ் தீவிரமாகப் புரியவைப்போம்.
*****
யாசிர்,
இஸ்லாத்திற்கு எதிரான நச்சு கருத்துருவாக்கம் அபூஜஹ்ல் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அல்லாஹ்வின் ஒளியை எக்காலமும் இவர்களால் ஊதி அணைக்க முடியாது.
****
ஜாஃபர்,
நிஜத்தில் நடந்த திப்பு சுல்தானின் போராட்டத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது இது ஒரு கற்பனை என்று குறிப்பிட்டவர்கள் கையில் ஊடகங்கள் இருக்கும்வரை ஆரியர் வருகை என்றும் மொகலாயர்கள் படையெடுப்பு என்றும்தான் எழுதப்படும்.

அதிரைக்காரன் said...

சபீர் காக்கா, உங்கள் துஆவுக்கு ஜஷாக்கல்லாஹ் ஹைர். கபூலாகட்டும்

மக்களைச் சுரண்டும் முதலாளியத்துவம், சோம்பேரிகளாக்கும் கம்யூனிசம், அடக்கியாளும் பாசிசம்,ஜியோனிசம்,சாதிய பிளவுகளை ஊக்குவிக்கும் பார்ப்பனீயம் ஆகியவை நாலாபக்கமும் சூழ்ந்து, நாத்திகத்தால் தறிகெட்டு போனவர்களுக்கும் கடைசிப் புகழிடமாக விளங்கும் தகுதி இஸ்லாத்திற்கு. உண்டு. இந்த எரிச்சலினால் ஏற்பட்ட பக்கவாதத்தின் விளைவே இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சொல்லாடல்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும் .
முன்பு நான் இத்தளத்தில் எழுதியது.
---------------------------------------------------------------------------------------
நான் தீவிரவாதி!
--------------------------------------------------------------------------------------------
என் மார்க்கத்தின் மேல் கொண்ட பக்தி தீவிரம்,

என் இனத்தின் மேல் கொண்ட காதல் தீவிரம்,

என் உறவுகள் மேல் கொண்ட அன்பு தீவிரம்,

என் ஊரின் மேல் கொண்ட அக்கறை தீவிரம்,

என் நட்பின் மேல் கொண்ட நம்பிக்கை தீவிரம்,

மற்ற உயிரின் மேல் என் கருனை தீவிரம்,

என்னைப்பற்றி எனக்குள் ஆர்வம் தீவிரம்,

ஆம்! நான் தீவிரவாதிதான்!!!!!.

அடிப்படை அன்பு ஒன்றே வண்மம் அல்ல.

அதிரைக்காரன் said...

ஜஹபர் சாதிக்,

சலூன் கடைகளில் ஷேவிங் செய்ததைத் துடைக்க எனக்குத்தெரிந்து அருமையான பேப்பர் தினமலர். அதைமனதில் வைத்துதானே கருத்திட்டே! ;)

அபூஇப்ராஹிம் காக்கா, ஜமாலை பிரித்து கட்டினால் மாலை கிடைக்கும் என்று தாஸ்தாகீர் :) தப்பாக எடுத்துக்கப்போறான். :):)

அபூசுஹைமா, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று குறிப்பிடுபவர்கள் நிச்சயம் முஸ்லிம்ல்லாத பயங்கரவாதிகளாகத்தான் இருப்பர். ஊடகங்களைச்சொல்லி குற்றமில்லை. அவர்கள் வீசும் எலும்புத்துண்டுக்கேற்ப வாலாட்டுகின்றனர். இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்களும் ஊடகத்துறையில் பரிணமிக்கும்போது நம்மீதான தப்பர்தங்கள் நீங்கும்.

Adirai pasanga😎 said...

இஸ்லாமியர் அனைவருக்கும் எதிராக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தாங்கள் எந்த கொள்கையில் வேறுபட்டிருந்தாலும் முஸ்லிம்களை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு கைகோர்த்துக்கொள்வதை நாம் அனைவரும் உணர முன்வருவதில்லை.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே
அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களே என்ற கொள்கையில் இருக்கும் நாம் இஸ்லாத்தின் எதிரிகளான அவர்களை எதிர்கொள்ள திரானியில்லாமல் பிரிந்து கிடக்கின்றோம்.

இஸ்லாத்திற்கெதிராக உலகம் முழுவதும் தீவிர சூழ்ச்சி செய்யப்படுகிறது. இருந்தும் நாம் தீவிர உறக்கத்திலேயே இருக்க்கிறோம்.

எனினும் அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மேலான தீவிரமான சூழ்ச்சியாளன்.

யாஅல்லாஹ் அனைத்து முஸ்லிம் சமுதாயத்தினையும் நீயே பாதுகாப்பாயாக!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நல்ல நேர்த்தியான கட்டுரை நண்பன் ஜமாலுத்தீனின். கொஞ்சம் அசந்தால், அவர்கள் போக்குக்கு விட்டு விட்டால் பண்ணா இஸ்மாயிலுக்கும், இஸ்மாயில் என தன் கையில் பச்சைக்குத்தி பின் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு இந்த பாழாய்ப்போன ஊடகங்கள் முடிச்சு போட்டு இருவரையும் நெருங்கிய சொந்தக்காரர்களாக ஆக்கி இருக்கும்.

"WHOEVER HAVING BEARD, ALL THEY ARE NOT TERRORISTS; WHOEVER HAVING SHAVED ALL THEY ARE NOT GENTLEMEN".

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் ஜமாலுதீன் சரியான நேரத்தில் பதியப்பட்ட பதிவு.

தீவிரமாக நம் முன்னோர்கள் நம் நாட்டு விடுதலைக்காக போராடியதால் வந்த பெயர் தீவிரவாதி..

நாம் அச்சப்பட வேண்டியதில்லை..

பாதிக்கப்பட்டவனின் துஆவைவிட பலமான ஆயுதம் தீவிரவாதி என்று சொல்லும் இஸ்லாமியர்களுக்கு வேறு இல்லை...

Aboobakkar, Can. said...

இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றும் நாம் அனைவரும் இஸ்லாமிய தீவிரவாதிகளே ஆனால் நிச்சயமாக எங்களிடம் பயங்கரவாதம் இல்லை.ஒரு கைதியை பிடித்து அவனை காவல்துறை சிறையில் அடைத்து கோர்ட்டில் ஒப்படைப்பதோடு காவல் துறையின் வேலை முடிகிறது பிறகு அவன் தீவிரவாதி யா இல்லையா என்பதை கோர்ட்டுதான் முடிவு செய்யவேண்டும் ஆனால் அதற்கு முன்பே தீவிரவாதி என்று டிவி யிலும் பத்திரிக்கை களிலும் சித்தரிப்பதில் மட்டுமே அங்கு பத்திரிக்கை தர்மம் குருடாகி விடுகிறது.அப்படி என்றால் முகலாய சாம் ராஜ்யத்தின் கணக்க பிள்ளைகளான பண்டிட்களும் சிந்திகளும் இந்திய நாட்டையே வெள்ளையருக்கு காட்டி கொடுத்து ஜாமீன்களாகவும் இன்று வரை நாட்டை ஆளும் பெரிய பெரிய கட்சிகளாகவும் உள்ளனரே இவர்களை எந்த பெயரில் அழைப்பது ??

sabeer.abushahruk said...

//நேதாஜி, லஜபதி ராய், பகத்சிங்,திப்புசுல்தான்,பேகம் ஹசரத்மஹல் என ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் இருந்தனர். //

ஆனால், இவுகள்ல்லாம் ரொம்ப நல்லவங்க என்று, நாங்கள்
கோடிட்ட இடங்களை நிரப்பி, சரியான விடையோடு பொருத்தி, ஒரு வார்த்தையில் பதில் எழுதி, விரிவாக பத்துமார்க்குக்கு எழுதி அல்லவா பாஸானோம்!

இவங்க செய்த அதே போராட்டத்தை வேறு காரணங்களுக்காகச் செய்தால் தீவிரவாதி? நன்னாருக்கே ஞாயம்.

sabeer.abushahruk said...

//முகலாய சாம் ராஜ்யத்தின் கணக்க பிள்ளைகளான பண்டிட்களும் சிந்திகளும் இந்திய நாட்டையே வெள்ளையருக்கு காட்டி கொடுத்து ஜாமீன்களாகவும் இன்று வரை நாட்டை ஆளும் பெரிய பெரிய கட்சிகளாகவும் உள்ளனரே இவர்களை எந்த பெயரில் அழைப்பது ??//

நச்சுன்னு கேட்டீங்க, அபுபக்கர்.

sabeer.abushahruk said...

//ஆம்! நான் தீவிரவாதிதான்!!!!!.//

நானும்தான் கிரவுன். அதி தீவிரவாதி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சலூன் கடைகளில் ஷேவிங் செய்ததைத் துடைக்க எனக்குத்தெரிந்து அருமையான பேப்பர் தினமலர். //

என்பதைவிட 'தகுதி' பேப்பர்... என்று வாசிச்சுக்கலாம்..

//பிரித்து கட்டினால் மாலை கிடைக்கும் என்று தாஸ்தாகீர் //

ஆமா ! ஹேன்டில் வித் கேர் ! :) :)

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

தீவிரவாதம் என்பது யாதெனில் [அதிரை நிருபர்] நம் வலைதளத்தில் ஏற்படும் வாதங்களே [விவாதங்களே] மிகத்தீவிரவாதம் ஆகும் [மறுப்போர் யாரும் உண்டோ]

Shameed said...

என்ன எல்லோரும் தீவிரமா கச்சை கட்டிட்டாங்க அதிரை நிருபரில்

மாஷா அல்லாஹ்

Meerashah Rafia said...

தன்நாட்டுக்காக போராடும் தாலிபான் மக்கள் தீவிராதிகள் என்றால், மகாத்மா காந்தியும்,பகத் சிங்கும் தீவிரவாதிதான்.. நல்லதொரு கட்டுரை..பலரை சென்றடைய வேண்டும்..

KALAM SHAICK ABDUL KADER said...

\\அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அன்பிற்குரிய அதிரைக்காரன்,

அதிரையின் காரசார எழுத்தாளரும் சமூக அவலங்களுக்கு எதிராக ஆக்கபூர்வமான சிந்தனைகளைக்கொண்டு வெகுண்டெழுபவரும் என்னை மிகவும் வசீகரிக்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரருமாகிய தங்களின் எழுத்து இந்நாள்வரை அதிரையின் இலக்கியத் தரமிக்க இந்த அதிரை நிருபர் தளத்தில் வாராதிருந்த பெருங்குறையைக் களைந்தமைக்கு மிக்க நன்றி.

இந்த இனிய தொடர்பு நீண்ட நெடு காலம்வரை நிலைக்க வேண்டுமாயும் தாங்கள் அடிக்கடி இங்கு எழுத வேண்டுமாயும் துஆச் செய்து தங்களை அதிரை நிருபரின் வாசக வட்டம் சார்பாக வரவேற்கிறேன்.

நன்றி.//


இதை நான் வழிமொழிகிறேன்.

ZAKIR HUSSAIN said...

வெள்ளைக்காரனுக்கு காட்டி கொடுத்ததற்கும், கூட்டி கொடுத்ததற்கும் கிடைத்த பிச்சைதான் ஜமீன் என்ற பட்டம்.

Ebrahim Ansari said...

வேலூரில் கொல்லப்பட்ட அரவிந்த ரெட்டியை கொன்றதாக சொல்லி வஜுர் ராஜா- வை பிடித்தார்கள் சிறையில் அடைத்தார்கள். இப்போது போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர்கள் செய்ததாக போலிஸ் சொல்கிறது.! முன்பு குற்றவாளிகளாக போலிசாரால் சொல்லப்பட்ட வசூர் ராஜா இப்போது குற்றவாளியா? நிரபராதியா?

வேலூர் மத்திய சிறையில் இருந்தபடி, ரவுடி வசூர் ராஜா, ரெட்டியை கொலை செய்ததாக, அப்போதைய வேலூர் எஸ்.பி., ஈஸ்வரன் கூறினார். அதன் பின், வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த தங்கராஜ், பிச்சை பெருமாள், தோட்டப்பாளையத்தை சேர்ந்த சத்யா, உதயா என்ற உதயகுமார், அரியூரை சேர்ந்த ராஜா மற்றும் திட்டம் போட்ட வசூர் ராஜா என, ஆறு பேரை நவம்பர், 22ம் தேதி கைது செய்தனர். ராஜாவை கடலூர் சிறையிலும், மற்றவர்களை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில், 'அரவிந்த் ரெட்டியை கொலை செய்தது, நாங்கள் தான்' என, பயங்கர வாதி, 'போலீஸ்' பக்ரூதீன் வாக்கு மூலம் அளித்திருப்பது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் தெற்கு போலீசார் இந்த வழக்கை விரைந்து முடித்து, நல்ல பெயர் எடுப்பதற்காக, ரவுடி வசூர் ராஜா உள்ளிட்ட, ஆறு பேரை பலி கடா ஆக்கி விட்டதாகவும், அவரை, நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து, ரெட்டியை கொலை செய்ததாக ஒப்பு கொள்ள வைத்து, வழக்கை முடித்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், ரெட்டி கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்ட மிட்டுள்ளனர். இதை அறிந்த வேலூர் தெற்கு போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர். பக்ருதீன் கூறியது உண்மை என நிரூபிக்கப்பட்டால், வசூர் ராஜாவை கொலையாளி என, அப்போது அடையாளம் காட்டிய அப்போதைய எஸ்.பி., ஈஸ்வரன், வேலூர் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் அண்ணா துரை ஆகியோர் மீது, துறை ரீதியான விசாரணை நடத்தி, தவறு உறுதியானால், தண்டிக்க வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நன்றி : சுவனப் பிரியன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு