Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இத்தியாதி இத்தியாதி...! [கட்டற்ற கலக்கல்] 45

அதிரைநிருபர் பதிப்பகம் | October 01, 2013 | , , , , , ,

இன்ன கட்டுக்குள் அடங்கிவிடும் என்று சொல்லவிட இயலாத சில விஷயங்களை இப்படியொரு தலைப்பின்கீழ் பார்த்துவிடலாம் என்று எண்ணி இறங்கியாயிற்று, பார்க்கலாம்.

முதலில் ஒரு பழைய நினைவு:

தலைப்பு: “ஙே !!! “

கைகால் வலிக்குக் ‘கோடாலி’த் தைலம் மற்றும் பச்சைத் தைலம் ஆகியவற்றைப்போல, கொஞ்சம் கூடுதல் உபாதைகளுக்கு நிவாரணமாக நான் என் நண்பர் முகமதலியை உபயோகிப்பதுண்டு. அப்படித்தான் ஒரு முறை பட்டுக்கோட்டையின் பாழாய்ப்போன தூசு மண்டலச் சுற்றுச் சூழலில், ஊரிலேயே சுலபமாகக் கிடைக்குக்கூடிய ஒரு பொருளைத் தேடி அலைந்ததில் ஜலதோஷம் இருமல் என்று தொண்டையையும் தொண்டை சார்ந்த பகுதிகளையும் தொற்றுநோய் தாக்கி கஷ்ட்டப்பட்டேன்.

உள்ளூர் மருத்துவரின் ‘காப்பி பேஸ்ட்’ மருந்துச் சீட்டும் பிருஷ்ட்டத்தில் ஊசியும் சுடுகஞ்சியும் வெப்பத்தைச் சற்றே குறைத்தனவேயன்றி பூரண குணம் தரவில்லை.  உபரியாக ஊசி போட்ட இடத்தில் வலி வேறு. இனிமையாகப் பேசக்கூட முடியாத அளவிற்கு வாய் கசந்தது. ஸ்ட்டீரியோஃபோனிக் இருமல் எந்த ரிதமுமின்றி தாறுமாறான ட்டெம்ப்போவில் ஒலித்ததால் எனக்கே எரிச்சலைத் தந்தது.

நம்ம அலிதான் தஞ்சாவூருக்கு அழைத்துப் போய் அந்தச் சிறப்பு மருத்துவரிடம் காட்ட வைத்தார். அந்த சி.மருத்துவர் மேலோட்டமாகப் பரிசோதித்துவிட்டு, "சிகரெட் பிடிப்பீர்களா?" என்று கேட்டுவிட்டு "ஆம்" என்றதால், "இது வேறொண்ணுமில்லே, 'ஸ்மோக்கர்ஸ் ப்ரொங்க்கைட்டிஸ்தான்' என்று சொன்னார். சொன்னவர் மருந்து எழுதித்தராமல் அவர்தம் பங்காளி லேபுக்குப் போய் சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துவரச் சொல்லி எழுதிக் கொடுத்தார். அப்படி எழுதும்போது அவர் கண்களில் பளிச்சிட்ட இலச்சிணையை வரைந்து அனுப்பியிருந்தால் இப்போதுள்ள ரூபாய்க்கான இலச்சிணைக்குப் பதிலாக நம்முடையதுத் தேர்வாகியிருக்கும், அந்த அளவுக்கு கரன்ஸி பளிச்சிட்டது அவர் கண்களில். நாங்களும் எல்லாச் சோதனைகளும் செய்துகொண்டு முடிவுகளோடு வந்தோம்.

இந்த இடத்தில் அந்த மருத்துவரின் பரிசோதனை அறையின் வடிவமைப்பு எப்படி இருந்தது என்று சொல்வது மிகமிக அவசியம். அவர் நோயாளிகளைப் பரிசோதிக்கும் அறையில் ஒரு தடுப்புத்திரை அமைந்திருக்கும். அதற்கு இந்தப் பக்கமாக அடுத்த நோயாளி காத்திருக்க அந்தப் பக்கம் புது நோயாளியைப் பரிசோதிப்பார்.

நாங்களிருவரும் காத்திருக்கும்போது அப்படித்தான் ஒரு புது நோயாளியை டாக்டர் பரிசோதித்துக் கொண்டிருக்க, டாக்டருக்கும் அந்த நோயாளிக்கும் இடையே நடந்த சம்பாஷனை எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது.

"சொல்லுங்க, என்ன செய்யுது?"

"நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல். ஒரு வாரமா அவதிப்படுறேன் டாக்டர்"

"டெஸ்ட் எழுதித்தாரேன். பார்த்திட்டு வந்துடுங்க, மருந்து சாப்பிட்டாச் சரியாயிடும்"

"ஒன்னும் பயப்படற மாதிரி இல்லையே டாக்டர்?"

"அதெல்லாம் ஒன்னுமில்லே. இது ஸ்மோக்கர்ஸ் ப்ரொங்க்கைட்டிஸ். சிகரெட்டை குறைச்சிடுங்க"

"......”

"என்ன? சொல்றது புரியுதா? சிகரெட்டைக் குறைச்சாத்தான என்னால் குணப்படுத்த முடியும்"

"ஆனா டாக்டர்..."

"என்ன? சொல்லுங்க"

"நான் என் ஆயுளுக்கும் இதுவரை சிகரெட்டோ பீடியோ பிடிச்சதே இல்லையே!!!"

நானும் அலியும் ஒரே ஒரு எழுத்தின் பக்கத்தில் மூன்று ஆச்சரியக் குறிகள் போட்டுப் பார்வையைப் பரிமாறிக்கொண்டு பேந்தப்பேந்த விழித்தோம்.

" ஙே !!! "
*******************************

தலைப்பு: ‘சீ!’

ஓர் இழுப்பு இழுத்துக் கொண்டே லொக்கு லொக்கு என்று இருமி, "இந்தச் சனியனை விடவே முடியலையே" என்று அலுத்துக் கொள்பவர்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கும். ஏனெனில், நானும் அப்படியொரு அவஸ்த்தையைப் பலகாலம் அனுபவித்திருக்கிறேன்.

ஒரு நாளைக்கு 20க்கு மேல் மால்பரோ ஒயிட்ஸ் பிடித்து வந்த காலங்களில் அந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று நான் செய்யாத முயற்சிகள் இல்லை, எல்லாம் ஜெயிப்பதுபோல் தோன்றி, வெற்றியைக் கண்ணில் காட்டி படாரென மீண்டும் தலைகுப்புற கவிழ்த்துவிட்டுவிடும் சக்தி வாய்ந்த கெட்ட பழக்கம் ஸ்மோக்கிங்.

இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்புத்தான் வருகிறது. புகை பிடிக்கும் பழக்கத்தால் நிறைய அவதிப்பட்டு விட்டதால் அதை விடுவதற்காக என்னென்னவெல்லாமோ செய்து பார்த்துவிட்டேன்.  ஒரேயடியாக விட முடியவில்லை. அந்த ‘அர்ஜ்’ ஏற்பட்டவுடன் நாக்கின் உணர்வு மொட்டுகள் அவற்றின் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு நிக்கோட்டினுக்காக ஏங்கி நிற்கும்.

ஆதலால், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தால் நிக்கோட்டினின் தீவிரம் குறைந்து விட்டுவிட சுலபமாகும் என்று எண்ணி திட்டம்போட்டு கட்டம்போட்டு குறைத்தேன். 7 மணிக்கு ஒன்று 8 மணிக்கு ஒன்று என்று துவங்கி மெல்ல மெல்ல 7க்கு ஒன்று என்றால் 7:30க்கு அடுத்தது என்று இடைவெளியைக் கூட்டிக்கூட்டி வந்தேன். இரண்டு குழந்தைகளுக்கு இடையே நல்ல இடைவெளி விடச்சொல்வார்கள்; நானோ இரண்டு சிகரெட்களுக்கு இடையே நல்ல இடைவெளி விட்டு அடுத்தடுத்த வெண்சுருட்டுகளைத் தாமதித்தேன். இப்படியாக ஒரு சமயத்தில் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 என்று குறைந்ததும், ‘இதோ இப்ப விட்டுவிடப் போகிறோம் என்கிற நேரத்தில்’ வாரக் கடைசி நாளாகிய ஏதாவது ஒரு வியாழக்கிழமை இரவில், ரெட்டுக்கு ஃபாலோ போடமுடியாத கேரம் போர்டோ; ரம்மி செட்டாகாத சீட்டுக்கட்டோ  மீண்டும் ஒரு பாக்கெட்டில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.  ப்ரோஜக்ட் படுதோல்வி அடைந்து நிக்கோட்டினின் அராஜக ஆக்ரமிப்பு கோலோச்சும்.  நேரம் குறைத்துக் குறைத்து பிடித்துவந்த சிகரெட் கணக்குகளின் குறிப்புச் சீட்டு என் சட்டைப்பையில் எஞ்சியிருக்க, மீண்டும் துவங்கும் திட்ட அமலாக்கம்.

என்னதான் செய்ய? விட முடியவில்லையே என்கிற ஆதங்கம் பாடாய்ப் படுத்தியது.  இந்நிலையில்தான் கதையில் ஒரு ட்விஸ்ட் வந்தது.  என்னவென்றால், தேரா துபையில் ஒரு வருட காலம் பிரம்மச்சாரிய வாழ்க்கை வாழ்ந்து வந்தபோது உடல்நிலை சரியில்லாமல் ஸ்மோக்கர்ஸ் ப்ராங்கைட்டிஸ் வந்து முதல் இத்தியாதியில் பட்ட அவதிகள் எல்லாம் பட்டேன். வேலைக்குச் செல்லாமல் விடுப்பெடுத்து தலை கிளப்ப முடியாமல் கிடந்தபோது கீழே போய் சிகரெட் வாங்கக்கூட முடியாமல் போனது.  சற்றே குணம் கிடைத்து சிகரெட் நினைப்பு வந்தபோது மூன்று நாட்களாகிவிட்டிருந்தது.  ‘அட! மூன்று நாட்களாக நான் ஸ்மோக் பண்ணலையா?’ ஆச்சரியமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.  ‘இன்னொரு நாள் இருந்து பார்ப்போமே’ என்று நான்காவது நாளையும் கடந்தபோது வெற்றி என்னைத் தழுவிக்கொண்டது.  சிகரெட்டை விட்டுவிட்டேன். ஹுர்ரே!

சிக்ரெட்டை விட்ட பிறகு எப்போதுமே சுவாசித்துக் கொண்டிருந்த கார்ப்பரேஷன் குப்பைலாரி வாடை மறைந்து போனது, நன்றாகப் பசித்தது, உணவு ருசித்தது, சுறுசுறுப்பு கூடிப்போயிற்று.   காரிலும் அலுவலகத்திலும் காற்றில் நறுமணம் இருந்தது.  வாழ்க்கை சலவைசெய்ததுபோல் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருந்தது.  உதடு மெல்லமெல்ல கருமை இழந்து ப்பிங்க்கானது.  கையோடு, பல் ஆஸ்பத்திரிக்குப் போய் பற்களை தூர்வாரி தார் நிக்கோட்டின் ஆகியவற்றை சுரண்டியெடுத்து புதைந்துபோயிருந்த பல்லின் ஒரிஜினல் நிறத்தைப் மீட்டெடுத்தேன். அதற்குப் பிறகு சிரிக்கும்போது தன்னம்பிக்கை கூடிப்போய்விட்டிருந்தது. 

புகையே பிடிக்காதவர்களால் அனுமானமாக புத்திதான் சொல்ல முடியும்.  புகைபிடித்து அவதியுற்றுப் பின்னர் விட்டவர்களால்தான்  அதன் சாதக(?) பாதகங்களை அனுபவரீதியாக விளக்கிச் சொல்லி , தற்போது இந்தப் பழக்கத்தில் இருப்பவர்களை மீட்க முடியும்.  சிகரெட்டை விட்டப் பிறகு மேற்சொன்ன சாதகங்கள் மட்டுமல்ல, இன்னும் வெளியே சொல்ல கூச்சப்படுமளவுக்கு நன்மையான  மேட்டர்ஸும் உண்டு.  காதைக் கொடுங்கள் சொல்கிறேன். 

“வாணாம்பா. விட்டுடுங்கப்பா...சீ!"

*******************************

தலைப்பு: “தீ”

சிகரெட்
விரலிடுக்கில் சிக்கிய வாழ்க்கை
நசுக்கப்படுவது உறுதி!

உதடுகளில் வாழும் உயிர்
உமிழப்படுவது உறுதி!

புகைப்பவருக்குள் புழங்கும் பூதம்
புண்ணாக்கப் போவது உறுதி!

ஆக்ஸிஜனை அசிங்கப்படுத்தும் அருவருப்பு
அணுஅணுவாய் அரிக்கப்போவது உறுதி!

சிகரெட்
சில்லரையாகச் செலவு வைத்து
மொத்தமக மூழ்கடிக்கும் கடன்.

சிகரெட்
சுவாச உருப்புகளில் போடப்பட்டத்
தார்ச்சாலை
பூக்களின்மேல் போர்த்தப்பட்டக்
கேன்வாஷ்

சிகரெட்....
தொடர்கதைபோல நீளும்  வாழ்க்கையை
சிறுகதையாக்கும் அவசரம்...
சிலசமயம்
துணுக்காக முடித்துவிடும் அபாயம்!

உணர்க:
வாயில் புகைகிறதெனில்
உள்ளே
உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது
தீ!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

45 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuShahruk,


" ஙே !!! ", ‘சீ!’, "தீ!" couple of articles and a poem like a giving multiple prescriptions of medicines for cure.

//வாயில் புகைகிறதெனில்

உள்ளே

உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது

தீ!// - A dire warning!!!

But the addiction of nicotine is powerful enough to control the smokers to not to stop the smoking habit.

Prevention is better than cure. Smoking habit should not have been started at all for ultimate cure.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.
www.dubaibuyer.blogspot.com

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அனுபவகதைகள் சுவைஎன்றாலும் நமக்கு அனுகூலமாவது கவிதை என்பதால் அது முதலில் பார்களாமே என மனது சொன்னது.அதனால் இதோ சிலவரிகள்.

crown said...
This comment has been removed by the author.
crown said...

சிகரெட்
விரலிடுக்கில் சிக்கிய வாழ்க்கை
நசுக்கப்படுவது உறுதி!
----------------------------------------------------------------
இதனால் இருவிரல்கள் காட்டுவதுபோல் இப்பழக்கம் கத்தரிக்கபடாவிட்டால்,புற்று கருத்தரிக்கும், சுத்தகரிக்கும் இரத்தமெல்லாம் அசுத்தம் சூழும், வாழ்கையை கரிக்கும் அளவுக்கு புற்று அரிக்கும். இப்படி எச்சரிக்கும் அறிவுரை ஆயிரம் வந்தாலும் சுய முயற்சியே இந்த பழக்கம் இல்லாமல் நம் சுகாதர கேடை சுத்தரிக்கும்.

crown said...

உதடுகளில் வாழும் உயிர்
உமிழப்படுவது உறுதி!
-------------------------------------------------------
இதுதான் வாய்"மை, mouth( வாய்கும் இறப்பு=மெளத்)

crown said...

சிகரெட்
சில்லரையாகச் செலவு வைத்து
மொத்தமக மூழ்கடிக்கும் கடன்.
--------------------------------------------------------------------
முதலில் இப்படி எழுத தோனிய சிந்தனைக்கு ,அற்புதம்,அருமை, மொழிச்செழுமை!
--------------------------
இப்படி சில்லறை செலவு வைத்து கல்லறையில் செ(கொ)ன்று சேர்க்கும் தீய செயலின் கடன்(கடமை) .

crown said...

சிகரெட்
சுவாச உருப்புகளில் போடப்பட்டத்
தார்ச்சாலை
பூக்களின்மேல் போர்த்தப்பட்டக்
கேன்வாஷ்
------------------------------
இப்பழக்கத்தின் பிரைன்வாஸ், பின் எல்லாம் வாஸ் அவுட்" அரசும் எச்சரிக்கை விளம்பரம் எண்ணும் பெயரலவில் செய்யும் ஐவாஸ்! எல்லாம் பாழ்!

crown said...

சிகரெட்
சுவாச உருப்புகளில் போடப்பட்டத்
தார்ச்சாலை
-------------------------------------------------------
இதன் மேல் புற்று நடத்தும் பேரணி! பெரும் பிணி! பின் ஊர் திரண்டு அணி,அணியாய் நம்மை தூக்கி நடக்கும் சவ ஊர்வலம்! எல்லாம் இந்த சாலையில் ஏற்படும் தார்( நிக்கோடின்)சாலையின் உபயம்.இனிமேலும் இல்லாமல் போகுமா உயிர் பயம்???

Anonymous said...

என்னுடைய பிரியத்திற்குரிய சிகரெட் கைவிடப்பட்டு கிட்டத்தட்ட 15 வருடங்களாகி விட்டன! கிட்டத்தட்ட எனக்கும் இதே காரணம்தான் உதவியாக இருந்தது. நியூகாலேஜ் விடுதி வாழ்க்கையின் கடைசி ஆண்டில் வண்ணாரப் பிள்ளை சுப்புவிடம் வாங்கியடித்த செய்யது பீடி விஸ்வரூபமெடுத்து சவூதிவரை துரத்தித் துரத்தி என்னை முத்தமிட்டது :)

ஒருநாள் லேசாக நெஞ்சில் பிடிப்பு. வாங்கிவைத்த ராயல்ஸ் பாக்கெட் சிகரெட் பல்லிளித்தது. ஒருநாள்-மறுநாள் என மூன்றாவதுநாள் கிட்டத்தட்ட சிகரெட்டை மறந்தே போனேன். கப்போர்டில் பிரித்த நிலையிலிருந்த சிகரெட் பாக்கெட் மீண்டும் கண்சிமிட்டியது. சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால்தான் இல்லறம் இனிக்கும் என்று சொன்ன பாகிஸ்தானிய மேனேஜர் (சித்தீக் சவுத்ரி நினைவில் வந்தார்.அவருக்கு அப்போதே ஐந்து பிள்ளைகள்! சாதா கோல்ட் பிளாக் மாதிரி அழகான பிள்ளைகள் :)

சிகரெட்டை கைவிட்டு இயல்பாக இருக்க முடியுமென்றால் உன்னால் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை ஊட்டிய நாகர்கோவில் நண்பர் பொறியாளர் மீரானும் குறிப்பிடத்தக்கவர்கள். காக்காவும் தம்பியும் ஒரே பாக்கெட்டை பங்கு போட்டு ஊதித்தள்ளிய வகையில் தினமும் மூன்று பாக்கெட்! கிட்டத்தட்ட அறுபது சிகரெட்! நாம ஆளுதான் கருப்பு, இதயமும் ஏன்டா கருக்கனும் என்ற முடிவுடன்,திறந்திருந்த சிகரெட் பாக்கெட்டை தினம் பார்த்தபடி சிகரெட்டிலிருந்து விடுதலை!

துண்டுபீடி (ஹி..ஹி..டிப்ஸ்):

1) சிகரெட் பழக்கத்தைவிடுவதற்கு ஏற்ற மாதம் ரமழான். பகல் முழுவதும் கட்டுப்பாடாக இருக்க முடியுமெனில், மீதியுள்ள நான்கு மணி நேரத்தையும் ஓட்டிவிடலாம்!

2) சிகரெட் பழக்கத்தை கைவிட்டதை நண்பர்களிடமும்,நன்கு மதிக்கும் முக்கியமானவர்களிடம் தெரிவிக்கவேண்டும். மீண்டும் சிகரெட் பிடிக்கும் சூழல் ஏற்பட்டாலும், இவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடுமே என்ற எண்ணம் வரும்.

3) சிகரெட் பழக்கத்தை விட்டவர்களைக் பார்க்கும்போது,பொய்யாகவே இருந்தாலும்சரி தற்போதுதான் தெளிவாக இருப்பதாகவோ அல்லது அழகு கூடியிருப்பதாகவோ சிரிக்காமல் சொல்லணும். சிகரெட் பிடிக்காத மற்றவர்களிடமும் இதைச் சொல்லி உற்சாகப்படுத்தலாம். குறிப்பாக சிகரெட்டை விட்டவர்கள் தமது மனைவியிடம் முன்னேற்றம் குறித்து கேட்கலாம் ;)

N.ஜமாலுதீன்

crown said...

உணர்க:
வாயில் புகைகிறதெனில்
உள்ளே
உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது
தீ!
---------------------------------------------
வாய்'' புகைப்போக்கியா? இல்லை உயிர் போக்கியா? ஒருமுறை வாய்க்கும் இந்த வாழ்கை!மறுபடியும் கிடைக்குமா?சிந்திப்பீர்! சோதர்களே!

crown said...

நியூகாலேஜ் விடுதி வாழ்க்கையின் கடைசி ஆண்டில் வண்ணாரப் பிள்ளை சுப்புவிடம் வாங்கியடித்த செய்யது பீடி விஸ்வரூபமெடுத்து சவூதிவரை துரத்தித் துரத்தி என்னை முத்தமிட்டது :)
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் மாப்ள நலமாடா? வண்ணார பிள்ளை அவன் இஸ்திரி பெட்டிய பத்தவச்சா அவனுக்கு காசு ,உன்னைப்போல் மற்றவருக்கு பத்தவச்சா அது ஆபத்தாய் தொடரும் பட்சம் காச நோய்! இப்படி சூடுபட்டு திருந்துபவர்கள் எத்தனை பேர், சந்தோசம் நீ (அது உன்னை விட்டுவிட்டது )சிகரட்டை விட்டு விட்டாய் என்பது.

crown said...

ஜமால் அதிரை நிருபருக்காக ஏதாவது எழுதேன்டா! ஆவலாய் இருக்கிறது!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சுவைத்த கதை ரொம்பச் சுவை!

ச்சே, ஙா, ஙே அந்த பழக்கமே என்றுமே இல்லிங்ஙோ.

crown said...

ஜமால் எங்கே இருக்கே? எமக்காக எழுதனும் சரியாடா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// ஜமால் எங்கே இருக்கே? எமக்காக எழுதனும் சரியாடா? ///

அதானே எங்கே(டா)ப்பா? கருத்துப் பெட்டியிலா / கட்டுரைப் பெட்டியிலா ?

இரண்டில் எதுவானாலும் நீ சொன்னதுதான் சரி கிரவ்னு !

crown said...

துண்டுபீடி (ஹி..ஹி..டிப்ஸ்):
------------------------------------------------
சிகரெட் பிடித்த கையில் என்னடா இப்படி பீடிகை?

crown said...

வேடிக்கையாய் பேசுவதே நம்மூர்காரர்களின் வாடிக்கை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சிகரெட் பிடித்த கையில் என்னடா இப்படி பீடிகை?//

கிரவ்னு:

அதான் பீடி கை யோடு கருத்து பதிக்கப்பட்டிருக்கு ! :)

Yasir said...

ஆகவே எங்கள் கவிக்காக்காநகைச்சுவையாக தந்திருக்கும் அனுபவத்தையும் தீ பொறி பற்க்கும் கவிதையையும் படித்த பிறகாவது சிகெரட்ட்டை கீழே போடுங்க மக்கா....சகோ.ஜமாலுதீன் அவர்களின் குறிப்பும் அருமை

அதிரை.மெய்சா said...

கட்டுரையெல்லாம் எனக்குப் பிடிக்காது [ தமிழ்லே பிடிக்காத வார்த்தை ] என்று சொல்லாத குறையாய் சொல்லும் அன்பு நண்பா..!

இப்போது ஒரே பதிவில் கவிதையையும் கட்டுரையையும் கலந்து சிறந்த விழிப்புணவு படைப்பாய் கொடுத்து இந்த மாத்து மாத்திப்புட்டியப்பா.சூப்பர்.

Yasir said...

கிரவுன் வார்த்தை விளையாடல் தொலைபேசியின் ஊடே
“ என்ன யாசிர் நலமா” கிரவுன்
“ நலம் வார்த்தை வித்தகரே” இது நான்
“ என்ன வெளிநாடு எதுவும் போகவில்லையா “ கிரவுன்
“ ஆமாம் அடுத்த பயணம் மாஸ்கோவாக(Moscow) இருக்கலாம்” உடனடியாக அவர் சொன்னது
“மாஸ்கோ-வா அப்ப நீங்க போற இடத்திற்க்கெல்லாம் மாஸ் கோ (Mass go )" ..வாயடைத்து நின்று ரசித்தேன் --சொல்லுங்க இப்ப அவர் பலமொழி வித்தகர்தானே

Yasir said...

கிரவுனே...அமெரிக்க முழுவதும் ஃபெடரல் ஷட் டவுன் என்கிறார்களே....எங்க கம்பெனில நல்ல UPS (uninterruptible power supply) அனுப்பிவிடவா...கொஞ்சநேரம் தாக்குபிடிக்கும் ???

crown said...

Yasir சொன்னது…

கிரவுனே...அமெரிக்க முழுவதும் ஃபெடரல் ஷட் டவுன் என்கிறார்களே....எங்க கம்பெனில நல்ல UPS (uninterruptible power supply) அனுப்பிவிடவா...கொஞ்சநேரம் தாக்குபிடிக்கும் ???
----------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இங்கே ஏற்கனவே shock இருக்கும் பட்சத்தில் கிடைக்கும் power கூட shock த்தான்.

ZAKIR HUSSAIN said...

பாஸ்...நான் உங்களுக்கு சொன்ன புத்திமதி [!] ஐ கேட்டிருந்தால் இந்த சிகரெட்டுக்கு அழித்த காசை வைத்து மவுன்ட்ரோட்டில் ஒரு பில்டிங் வாங்கி போட்டிருக்களாம் பாஸ்.

என்ன இந்த கட்டுரை கிடைச்சிருக்காது!!!

Shameed said...

பாஸ் நீங்க உட்ட (பு) கையிலே நான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கின்றேன் அதுக்கு ஏதாவது நஷ்ட ஈடு கிடைக்குமா ?

KALAM SHAICK ABDUL KADER said...


கட்டுரையும் கவிதையும் தூய்மையான ஆக்ஸிஜன் காற்றுடன் சுவாசித்தன!

என்னுடன் பணியாற்றும் நண்பர் ஒருவர் இந்தப் பழக்கத்தை எப்படி விடுவது என்று என்னிடம் கேட்டார்; அவர் அன்று கேட்டதும் யான் வனைந்த இக்கவிதை:

http://kalaamkathir.blogspot.ae/2010/11/blog-post_02.html (செவ்வாய், 2 நவம்பர், 2010)


பகைத்திடுவாய் இன்றே புகைத்தலை நண்பா..!


வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;
விதைத்திடும் மனவழுத்தம்; வீணாகக் காசும்போய்(விடும்);
மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்;
நகைத்திடும் ஆண்மை நரம்புத் தளர்ச்சி;
புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி

உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;
குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;
சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக் கேடு;
மற்றவர்க்கு நோய்தருதல் மாபெரும் சாபக்கேடு..!!!

உன்னை வளர்த்த உயர்வானச் சமூகத்திற்கு
உன்னால் தரப்படும் ஒழுக்கமற்ற துரோகத்திற்கு
என்ன தண்டனை என்ற போதே
உன்னை நீயே உருக்குலைப்பது போதுமே...!!!!

இதழ்முத்தம் உனக்கு இனிமேல் எட்டாது;
முதலிரவில் மனைவி முகமும் கிட்டாது
இதைவிடத் தண்டனை ஏற்குமா நெஞ்சே
விதைவிட முன்னே விரட்டிடு நஞ்சை

தோலில் சுருக்கம்; தோல்விகள் தொடர்தல்;
பாலில் நஞ்சுபோல் பார்வைக்குத் தெரியாமல்
ஒவ்வொரு இழுப்பும் உயிரின் இழப்பு
ஒவ்வொரு நெருப்பும் உடலினைக் கருக்கும்

இக்கவிதையை அதிரை எக்ஸ்பிரஸ்ஸில் கண்ட எம் கவிவேந்தர் இக்கவிதை நிரந்தரமாக அங்கிருக்க வேண்டும் என்றும் வேண்டினார்கள், அவர்களுடைய பின்னூட்டத்தில், அதன் காரணம் இன்றுதான் எனக்குப் புரிந்து விட்டது!

KALAM SHAICK ABDUL KADER said...

\\இதழ்முத்தம் உனக்கு இனிமேல் எட்டாது;
முதலிரவில் மனைவி முகமும் கிட்டாது
இதைவிடத் தண்டனை ஏற்குமா நெஞ்சே
விதைவிட முன்னே விரட்டிடு நஞ்சை\\

இந்த வரிகள் தான் அவரின் நெஞ்சைத் தைத்தன; ஏனெனில், அவர் அப்பொழுதுத் திருமண ஏற்பாட்டில் இருந்தவர். நான் சொன்னேன்; “முதலில் இப்பழக்கத்தைக் கைவிடு; பின்னர், முதலிரவில் மனைவியின் கைபிடி”

Ebrahim Ansari said...

ஊரில் புரட்டாசி மாத வெயில் சித்திரை வெயிலைவிடக் கொடுமையாக இருக்கிறது.

இந்தப் பதிவு ஒரு ஜில்லென்ற சிரிப்பைத் தந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு தனிநபரின் பர்சனல் விஷயத்தைக் கூட எவ்வளவு நகைச்சுவையாக எழுத இயலும் என்பதன் இலக்கணம்.

தம்பி சபீர் பெயர் சொன்னால் அதிருதுல்ல .

Ebrahim Ansari said...

ஏன் பங்குக்கு நானும் ஒரு கவிதையைப் பகிர்கிறேன். ஆனால் வேதனையோடு.

================================================================
நீ பிடிக்கும்
சிகிரெட்டில்
உன் மனைவியின்
எதிர் காலம் தெரிகிறது
வெள்ளை புகையில்
விதவையாக......
===============================================================

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நானும் ஒரு கவிதையைப் பகிர்கிறேன். //

பங்கு சூப்பராக இருக்கே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நஷ்ட ஈடாக கேட்கிறீர்கள்
அது
இஷ்ட ஈடாக வரலாம் !
:)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா...

வித்தியாசமா இருக்குன்னு இங்கே வந்து சொன்னா வைய்வாங்க....!

வித்தியாசமாகவே சொல்லிடுறேன்... வித்தியாசமாக சூப்பாரா இருக்கு!

மெய்யாலுமே இதுபோல் நான் ஒருபோதும் எழுதவே இல்லை...!

sabeer.abushahruk said...

va alaikkumussalam varah...

Dear bro. Ahamed Ameen,

Thanks for your comment. You are absolutely correct that the urge for nicotine is such a strong addiction which a controlled will power only can over come.

(I didn't see any of your writings these days. You better find it as your duty to keep feeding those whoever you made them like your writings.)

எம் ஹெச் ஜே,: விரும்பி வாசித்தமைக்கும் நன்றி.

ஜாகிர்: அப்பவெல்லாம் சிகரெட் பிடிப்பதில் ஒரு ஹீரோ கெத்து இருப்பதாகப் பட்டதே காரணம்.

ஹமீது: அதை இப்படியும் சொல்லலாமே. நான் ஸ்மோக் பண்ணும்போது ஓசியிலேயே நீங்களூம் பிடிச்சதுக்கு நான் பண்ணிய செலவில் நீங்கள் பக்கத்திலிருந்து பிடித்த புகைக்கு ஒரு 30% உங்களிடம் வசூலித்திருக்கலாம்தானே. (அட்றா அட்றா. சபீர், எப்டிடா இப்டிலாம் யோசிக்கிறே. என்னமோ போடா)

யாசிர்: பறையறிவுப்புப்போல துவங்கிய தங்களின் கருத்து வித்தியாசமாக இருந்தது நன்றி.

அதிரை மெய்சா: நான் சொன்னதில் ஒரு முக்கியமான அட்ஜெக்ட்டிவ்வை விட்டுவிட்டாய். கட்டுரைகள் என்னை கவர்வதில்லை. நான் தொடர்ந்து ஒரு கட்டுரையை வாசிக்க வேண்டும் என்றால் அது முதல் 10 வரிகளுக்குள் என்னை வசீகரித்தாக வேண்டும். இல்லையேல், 11 வரி வாசிக்க நான் விரும்பாமல் எஸ்கேப் ஆகிவிடுவேன்.

கவிதையெனில், அட்டுக்கவிதையாக இருந்தாலும் முக்கு முணகியாவது கடைசிவரை படித்துவிடுவேன், புரியும் பட்சத்தில்.

உன் கருத்துக்கு நன்றி.

ஈனா ஆனா காக்கா: மனைவியின் எதிர்காலத்திற்கும் ஸ்மோக்கிங்குக்கும் இடையேயான தொடர்பை இவ்வளவு சுருக்கமாக யாரும் சொன்னதில்ல.

அதிரை நிருபரில் மட்டும்தான் சிங்கங்கள் கூட்டமாக வருகின்றன. நிறைய திறமையான எழுத்தாளர்கள் இருப்பதைச் சுட்டுகிறேன்.
நன்றி காக்கா.

sabeer.abushahruk said...

கவியன்பன், தங்களின் மாஸ்டர் பீஸ் கவிதைகளில் சிகரெட்டுக்கு எதிரான மேற்கண்ட கவிதையும் ஒன்று.

அதனால்தான், இதுபோன்ற சமூக சீர்திருத்தக் கவிதை மற்றும் பதிவுகளை இலகுவாக வாசகர்கள் வாசிக்க ஏதுவாக வைப்பது நல்லது என்று சொல்கிறேன். நன்றி.

அபு இபு, உரையாடல்களில் அசத்துவது ஒரு அரிய கலை. அதில் விற்பன்னர் தாங்கள். அதுவும்,கிரவுனுடன் சேர்ந்து விட்டால் சொல்லவே வேண்டாம். உங்கள் இருவரையும் பேசவிட்டு நாள்பூரா கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

வாசித்தமைக்கு நன்றி.

தம்பி ஜமாலுதீன், :

தங்களின் செய்யது பீடியைப்போலவே துண்டுபீடியும் வாசிக்க வாசிக்க என் இதழ்களில் இழையோடிய புன்னகை மறையவே இல்லை. சமீபத்தில் வாசித்த வசீகரமானக் கருத்துகளில் தங்களுடையதும் ஒன்று.

//சாதா கோல்ட் பிளாக் மாதிரி அழகான பிள்ளைகள் :)// இந்த முக்கியமான கருத்தில் முரண்படுகிறேன். கிங்ஸ் ஃபில்ட்டர்தான் கோல்ட் ஃப்ளாக்லேயே கவர்ச்சியான அழகான வடிவம் என்பது என் கருத்து. சாதா கோல்ட் பிளாக் அம்மனமாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றும். கிங்ஸ்தான் முழங்கால் வரைக்கும் ஜீன்ஸ்போட்டு மெத்துன்னு இருக்கும். தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யவும். என் கருத்துக்கு இக்பால், ஜலால் மச்சான், நூரானி,நிஜாம் என்று ஒரு பெரும் கூட்டமே ஒத்தூதும்.

ஒரு நச்சென்ற பதிவோடு உங்களை இங்கு காணத் தேட்டம். பலமுறை சொல்லியாயிற்று, நழுவுகிறீர்கள். ஒன்று மட்டும் சொல்லிவிடுகிறேன். அதிரையில் பல இணைய த்ளங்கள் தமக்கே உரிய தனித்தன்மையோடு ஜொலிக்கும்போது, இலக்கியத்தரம், சமூக மேன்பாட்டுப் பதிவுகள், வாழ்வியல், வரலாறு, மார்க்கம் மற்றும் அனுமதிக்கப்பட்ட கலையான விடயங்கள் ஆகியவற்றில் அதிரை நிருபர் தமக்கென ஒரு இடம் ஏற்படுத்திக்கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

இதில் தங்களின் பதிவு இன்னும் வராதது இருவருக்கும் ஒரு குறையே. யால்லா யால்லா. கம் அப் வித் என் ஆர்ட்டிக்கிள், தம்பி.


sabeer.abushahruk said...

நிறைவாக, கிரவுன்.

தாங்கள் தமிழ்க்காய்களை வைத்துக் கொண்டு சொக்கட்டான் ஆடுகிறீர்கள், பல்லாங்குழி ஆடுகிறீர்கள் எல்லாவற்றிலும் நீங்களே ஜெயிக்கிறீர்கள். உதிரியாக கூடைகூடையாகச் சரக்கை வைத்துக்கொண்டு தொடுத்துத்தர மறுக்கிறீர்கள்.

எனக்கு மட்டும் நேரம் வாய்த்தால் தங்களின் உதிரிகளைத் தொகுத்து தொடரே எழுதிவிடுவேன். யாசிர் சொன்னதுபோல் சமயத்தில் உங்கள் வார்த்தை சாதுர்யத்தையும் சட்டென சமயோஜிதமாக சொல்லும் வாக்கியங்களிலும் வாயடைத்துப் போவது நானும்தான்.

அந்த ஸ்லிம்...முஸ்லிம்... கருத்தை நான் வெகுவாக ரசித்தேன். அதுபோல், தாங்களும் அபு இபுவும் உரையாடிய ச்சாட்டை நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அபு இபு எனக்கு ஈமெயிலினார். ஒரு பதிவாகப் போடுமளவுக்குத் தமிழ்க் கொண்டாடப்படுவதை அதில் கண்டேன். அருமையான சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் உங்களுக்கும் அபு இபுவுக்கும். நல்ல செட்டுதான்.

வழக்கம்போலவே இந்தப் பதிவிலும் வார்த்தை ஜாலத்தால் கருத்துப் பதிந்திருக்கும் தங்களுக்கு நன்றியும் கடப்பாடும்.

வஸ்ஸலாம்.

(அ.நி.: அடுத்தாட்டம் ப்ளீஸ்)

Ahamed irshad said...

பயங்கர சுவராஸ்யம் சபீர் காக்கா...

|| "என்ன? சொல்றது புரியுதா? சிகரெட்டைக் குறைச்சாத்தான என்னால் குணப்படுத்த முடியும்"

"ஆனா டாக்டர்..."

"என்ன? சொல்லுங்க"

"நான் என் ஆயுளுக்கும் இதுவரை சிகரெட்டோ பீடியோ பிடிச்சதே இல்லையே!!!"

நானும் அலியும் ஒரே ஒரு எழுத்தின் பக்கத்தில் மூன்று ஆச்சரியக் குறிகள் போட்டுப் பார்வையைப் பரிமாறிக்கொண்டு பேந்தப்பேந்த விழித்தோம். ||

இந்த இடத்தில் சத்தம் போட்டு சிரித்துட்டேன்... புகை பழக்கம் கெடுதி என்பதை புரிந்து அலுவலக வரை நறுமணம் என அதகளம்.... ரொம்ப நீளமா நிறைய நேரம் குடிக்கலாம்னு தாஜ்மஹால் பீடியை வாங்கும் ஒருத்தரை இப்போ நினைக்கிறேன்... செய்யது பீடி சைஸ் கம்மிம்பார்...எந்த பீடிய குடிச்சாலும் ஆயுள் கம்மின்னு இருமல் வந்து ஞாபகப்படுத்துது அவரை...

ஒரே மூச்சில் படிச்சாச்சு :) சூப்பர்....

Ebrahim Ansari said...

//ஜாகிர்: அப்பவெல்லாம் சிகரெட் பிடிப்பதில் ஒரு ஹீரோ கெத்து இருப்பதாகப் பட்டதே காரணம்.//

அப்படியும் சில பெண்கள் நினைப்பதாக நான் அறிந்துள்ளேன். எனக்கு நெருக்கமான ஒரு நண்பனுக்கு இளமையில் வந்த காதல் கடிதத்தை என்னிடம் மட்டும் காட்டுவான். அதில் அவள் எழுதிய வரிகள்:

" அத்துமீறலில் நீ அவசரம் காட்டவில்லை சரிதான். ஆனால் ஆண்கள் போல சிகரெட் கூட பிடிக்க மாட்டேன் என்று ஏண்டா அடம் பிடிக்கிறாய்? "

இதை எழுதியவர் இன்று ஒரு ஊரின் பேரூராட்சித்தலைவி.

எழுதப் பட்டவர் சவூதியில் கேட்டரிங்க் கம்பெனியில் சூபர்வைசராகி ஒய்வு பெற்றார்.

இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது - மற்றவர்களுடன்.

Anonymous said...

வ அலைக்கும் ஸலாம்(டா) தஸ்தகீர்.

வெட்டிப்பேச்சில் எழுதியபோது எத்தகைய எதிர்பார்ப்பும் இருக்கவில்லை என்பதால் எதைப் பற்றியும் எழுத முடிந்தது. நம்மூர்லயே நாமதான் அறிவாளியோ என்றுகூட சிலநேரம் நினைத்ததுண்டு.:)) அநியாயத்துக்கு நீ, அனாஇனா காக்கா & சபீர் காக்கா எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட பில்டப் கொடுத்துள்ளதால் உஷாரா எழுதனும்டோய். எழுதுவோம்.

சபீர் காக்கா,

ஹாஸ்டல் மெஸ்ஸுக்குக் கட்டத்தந்த காசில் செய்யது பீடியே ஓவர். அப்போது நியூகாலேஜ் கிரவுண்டில் உட்கார்ந்து தம்மடிக்கும்போது செய்யதுபீடியைவிட சாதா கோல்ட்ப்ளேக் அழகாகத் தெரியும். அந்த நினைப்பில் எழுதிவிட்டேன். சரி கிடக்குது கழுதை. கல்ஃபில் விற்கப்படும் சிகரெட் பாக்கெட்களில் தார் இவ்வளவு, நிகோடி இவ்வளவு என்று பட்டியல் போட்டிருப்பார்கள். ஆனால், நம்நாட்டு சிகரெட்டில் செ.மீ,/மி.மீ என்று சிகரெட்டின் நீளத்தைக் குறிப்பிட்டு இருப்பதுதான் ஏனென்று தெரியவில்லை.

N.ஜமாலுதீன்

Anonymous said...

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்கும் அந்த புகைக்கும் பழக்கம் இருந்தது. புகைத்தது சிகரெட் அல்ல சுருட்டு! எத்தனையோ பேர் ''விடு-விடு'' என்றார்கள். நான் 'குரங்கு பிடி' போட்டு விடாமல் பிடித்தேன். பிரச்சனை வரும் நேரங்களில் பற்றவைத்து ஊதினால் பிரச்சனைகளுக்கு தீர்வும் மன அமைதியும் கிடைப்பது போல் மனதுக்குள் ஒரு பிரம்மை உருபெற்று நிலை கொண்டது.

ஒரு நாள் ஊரிலிருந்து வாங்கி வந்த இருபது கட்டு மணிக்கொடி சுருட்டில்
ஒரு கட்டை பிரித்து ஒருசுருட்டை பற்ற வைத்து ஊதினேன். யோசித்தேன்!

''ஒ! சுருட்டே! உன்னை காசுக்கு வாங்கிய முதலாளி நான்! உனக்கு நான் ஏன் அடிமையாக வேண்டும்?''

'ஊதிய புகைகள் ஆகாயத்தின் மீது சுருண்டு-சுருண்டு பறந்து மறைந்தது.

உடனே அந்த இருபது பக்கெட் மணிக் கொடியையும் உடைத்து டாய்லெட்டில் கொட்டி பிளாஷ் அவுட் சங்கிலியை இழுத்து விட்டேன்! ''அப்பாடா! நிம்மதி''!

''ஒரு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுத்து விட்டோம்!'' என்னை நானே புகழ்ந்து கொண்டேன். வானத்தில் மறைந்த சுருட்டு புகை மீண்டும் திரும்ப வந்து என்னிடம் கேட்டது ''ஒமனிதா! முதலாளியே!. முப்பது ஆண்டுகளாக தீ யிட்டு கொளுத்தி எங்கள் இனத்தை சாம்பலாக்கிய குற்றத்திற்கு உன்னையல்லவா தூக்கில் போட வேண்டும்? எங்களுக்கு ஏன் தூக்கு தண்டனை?''

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

crown said...

ஒரு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுத்து விட்டோம்!'' என்னை நானே புகழ்ந்து கொண்டேன். வானத்தில் மறைந்த சுருட்டு புகை மீண்டும் திரும்ப வந்து என்னிடம் கேட்டது ''ஒமனிதா! முதலாளியே!. முப்பது ஆண்டுகளாக தீ யிட்டு கொளுத்தி எங்கள் இனத்தை சாம்பலாக்கிய குற்றத்திற்கு உன்னையல்லவா தூக்கில் போட வேண்டும்? எங்களுக்கு ஏன் தூக்கு தண்டனை?''

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த உரையாடல் இப்படித்தொடர்வதாக ஒரு கற்பனை:
உனக்கு ஏன் தூக்குத்தண்டனை என கேட்கிறாயே நான் சொல்லாவா காரணம்?
ஏ சுருட்டே நீ என் வாழ்வின் நீளத்தை "சுருட்டப்பார்த்தாய்!அதன் பொருட்டாய் என்னை முன்பே நால்வர் வந்து "தூக்கி"செல்லும் நிலை வந்துவிடாமல் இருக்கவே உன்னை தூக்கிலிட்டேன்!
- இப்பொழுது புரிகிறது என் முதலாளியின் நியாயம் என் பாவத்திற்கு தண்டனை இந்த தூக்கு
என்னை மன்னியுங்கள்- சுருட்டு!!
குறிப்பு:யா அல்லாஹ் ! பாருக்காக்காவின் ஆயுளை இன்னும் ஆரோக்கியத்துடன் நீடித்துவைப்பாயாக ஆமீன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு...

உரையாடல் தொடர்கிறது...

சுருட்ட வந்த என்னை பொருட்டாக மதிக்காமல் இருட்டில் போட்டுட்டீங்களே முதலாளி...

உரிஞ்சித்தான் பார்த்தேன்... ஆனால் என்னுயிரை உரிஞ்ச நினைத்த உனக்கு இதுதான் தண்டனை.... !

யா அல்லாஹ் ! எங்கள் மூத்த ஃபாருக் காக்காவின் ஆயுளை இன்னும் ஆரோக்கியத்துடன் நீடித்து வைப்பாயாக ஆமீன்...

sabeer.abushahruk said...

ஓ... இன்னும் இங்கு புகைகிறதா?

இப்றாகீம் அன்சாரி காக்கா எழுதிய காதல் கதையில் அந்தக் கடைசி வார்த்தைதான் உச்சகட்டம்.

இருப்பினும், காதலனைப் புகைபிடிக்கச் சொன்னதை அப்படி ஒன்றும் பெரிதாகக் குற்றம் பிடித்துவிட முடியாது. காரணம் அந்தக் காலத்தில் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைப்பற்றி அத்தனை ஒன்றும் விழிப்புணர்வு இல்லை.

சிலருக்கு ரயில் புகை, சிலருக்கு பஸ் புகை பிடிப்பதுபோல் சில பெண்களுக்கு காதலன் விடும் சிகரெட் புகை பிடித்திருக்கலாம்.

எனக்குத் தெரிந்து காதலிக்குப் பிடிக்கும் சிகரெட் மனைவியானதும் கணவனின் ஆரோக்கியத்தில் ஏற்படும் அக்கறையால் பிடிக்காமல் போய்விடுவதே நடப்பு.

ஃபாரூக் மாமாவின் சுருட்டு அனுபவம் சுவாரஸ்யம்.

தம்பி இர்ஷாத்தை இப்டி இழுத்து வந்துதான் வாசிக்க வைக்க வேண்டியிருக்கிற்து.

காதரும் மன்சூரும் இதை வாசிக்கவில்லையா?

ஜமாலுதீன், காத்திருக்கிறோம்.

கிரவுனும் அபு இபுவும் இன்னும் அடங்கலயா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு : இன்று கூகில் ப்ளஸ் யாரோ சொன்னதாக கண்டது !

"இன்று காந்தி ஜெயந்தியாம்...! ஒருத்தர் காந்தி படம் போட்ட எல்லாத்தையும் சேகரித்து வருகிறாராம் அதனால், நூறு ருபாய், ஐநூறு ரூபாயில இருக்கிற காந்தி படத்தையும் அவருக்கு அனுப்பி வைக்கச் சொல்லி கேட்டிருந்தார்"

நல்ல டீலிங்காதான் இருக்கு... காந்தி'யின்' ஜெயந்திக்கு...!

Ebrahim Ansari said...

உடனே மறைந்துவிடும் புகையா இது? இன்னும் புகைந்துகொண்டுதான் இருக்கிறது தம்பி!

//இப்றாகீம் அன்சாரி காக்கா எழுதிய காதல் கதையில் அந்தக் கடைசி வார்த்தைதான் உச்சகட்டம்.//

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் . அந்தக் காதலர் இருவரும் தங்களின் மனதை மாற்றிக் கொண்டனர்- மதத்தை மாற்றிக் கொள்ள விரும்பாததால்

( காதலி:அன்றைய வட ஆற்காடு இன்றைய வேலூர் மாவட்டம். காதலர் அன்றைய தென் ஆற்காடு இன்றைய கடலூர் மாவட்டம் - பரங்கிப் பேட்டை) இப்போதும் குடும்ப நண்பர்களே. அந்தக் காதலர் சவூதி போனதும் சிகரெட்டை புகைக்க பழகிக் கொண்டது தனிக்கதை. .

Ebrahim Ansari said...

//நல்ல டீலிங்காதான் இருக்கு... காந்தி'யின்' ஜெயந்திக்கு...!//

ஹஹஹஹஹஹாஹ். சூப்பர்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு