நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை ! 51

அதிரைநிருபர்-பதிப்பகம் அமைதியின் ஆளுமை | சனி, ஆகஸ்ட் 27, 2016 | , , , ,

(2007 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்இயற்றியளித்த ஆய்வுக் கட்டுரை. வலைத்தள வாசகர்களின் வசதியைக் கருதி, சில தகவல்களை விடுத்தும், சில தகவல்களை எடுத்தும் உருவாக்கப்பட்டது, இத்தொடர்.)

உம் இரட்சகனின் பாதைக்கு மக்களை நுண்ணறிவைக் கொண்டும் அழகிய நல்லுரையைக் கொண்டும் அழைப்பீராக!” (அல்குர்ஆன்-16:125) எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள ஹிக்மா’ (நுண்ணறிவு) என்ற சொல்லையும், “இன்ன மினஷ் ஷிஅரி ஹிக்மா” (திண்ணமாக, கவிதைகளில் நுண்ணறிவு பொதிந்துள்ளது. - இப்னு மாஜா) என்ற நபிமொழியையும் பொருத்திப் பாருங்கள்.

உண்மையும் அழகுணர்வும் நிறைந்த சொற்களால் வாழ்க்கையைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டுவதே கவிதைஎன்று கூறுகின்றார் இலக்கிய மேதை ஒருவர். (இலக்கியக் கலை பக்கம் 46) “ஊடுருவி நிற்கும் உண்மைப் பொருளை உணர்த்த வல்லது கவிதைஎன்பர் ஆய்வாளர்கள்.

ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியில் கவிதைக்கென்று ஒரு கட்டுப்பாடான இலக்கணமே வகுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ‘கவிதைகளெல்லாம் பொய்என்ற பொதுவான கருத்தை மக்கள் கொண்டிருப்பதாலும், கற்பனைகளையே மூலதனமாகக் கொண்டு முற்காலக் கவிஞர்கள் கவி பாடியதாலும், இஸ்லாமியத் திருமறை குர்ஆன், “கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224) என்று கூறுகின்றது.

என்றாலும், இறைவன் அல்லாஹ் இறக்கிய வேதமும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசிய மொழியும் அரபியாக இருப்பதால், குர்ஆனிய வசனங்களும் நபிமொழிகளும் சில இடங்களில் கவிதையின் இலக்கியத் தரத்தில் அமைந்திருக்கக் காண்கின்றோம். அரபி இலக்கியத்தில், இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலிய்யாஎனும் அறியாமைக் காலத்திலிருந்தும், கவிதைகள் மலிந்து கிடக்கின்றன. இம்ரஉல் கைஸ்,

உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த், லபீத் போன்ற புகழ் வாய்ந்த கவிஞர்கள் அன்று இருந்துள்ளனர். ஆனால், அத்தகைய கவி வல்லாரையும் மலைக்க வைக்கும் விதமாக, “மா ஹாதா கலாமுல் பஷர்என்று கூற வைத்தது அல்குர்ஆன்!

மக்காவில் தொடக்கமாக இறங்கிய இறைவசனங்கள் மக்கத்து இலக்கிய விற்பன்னர்களுக்கும் அறிவில் முதிர்ந்த குறைஷியருக்கும் வாயாப்புக் கொடுக்கும் விதத்தில், இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது. இதற்குச் சான்றாக, அன்றாடத் தொழுகைகளில் நாம் ஓதும் சிறு சிறு அத்தியாயங்கள் ஓசை நயத்துடன் உள்ளதை நாம் உணரலாம்.

இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நல்ல கவிஞர்களை ஊக்கப் படுத்தியுள்ளார்கள்! சிறந்த கவிதைகளைச் செவி மடுத்துப் பாராட்டியும் உள்ளார்கள்! கவிஞர்களைக் கவி பாடத் தூண்டியும் உள்ளார்கள்! ஏன், அவர்களே சில வேளைகளில் கவி பாடியும் உள்ளார்கள்! நபிமொழி இலக்கியங்களையும் நபி வரலாற்றையும் நன்கு ஆராய்பவர்கள் இதற்கு ஏராளமான சான்றுகளை அவற்றில் காண முடியும்.

மாநபியவர்கள் மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்றபோது, மதீனாவில் அவர்களை எதிர்கொண்டு அன்பாதரவுடன் சிறுவர் சிறுமியர் கூடிப் பாடிய இசைப் பாடல் நாம் அனைவரும் அறிந்த ஒன்றல்லவா? அது இதோ:

தலஅல் பத்று அலைனா, மின் தனிய்யாத்தில் வதாஇ
வஜபஷ் ஷுக்று அலைனா, மா தஆ லில்லாஹி தாஇ
அய்யுஹல் மபுஊது ஃபீனா, ஜுர்த்த மன் இலைஹி தாஇ

* சான்றுகள்: பைஹகீ, அபூதாவூத்

இந்த வாழ்த்துக் கவிதை வரிகளைக் கீழ்க் கண்டவாறு தமிழ்க் கவிதை வடிவில் ஆக்கலாம்:

எங்கள் மீதே ஒளிவீச எழுந்து வந்த வெண்ணிலவு
மங்கா தனியத் துல்வதாவின் மருங்கி ருந்து வந்ததுவே.

அல்லா வின்பால் அழைப்பாளர் அழைக்கும் போது நாங்களெலாம்
வல்லா னுக்கே நன்றியினை வழங்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இறைவ னனுப்பிய தூதரிலே இறுதித் தூதாய் வந்தவரே!
குறையில் லாவும் நேர்வழியில் கூடி யுமக்குக் கீழ்ப்படிவோம்.

இறை உவப்பையும் நபி நேசத்தையும் இதயத்தில் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இது போன்ற கவிதை வரிகளில் இன்பத்தைக் காண்பார்கள் என்பதில் ஐயமுண்டோ?

தாரகுத்னிஎன்ற நபிமொழித் தொகுப்பில் இடம்பெறும் நபிமொழிப் பகுதியொன்று நற்கவிதைகளுக்குக் கட்டியம் கூறுவதைப் பாருங்கள்:

கலாமுன் ஃப ஹசனுஹு ஹசனுன்; வ கபீஹுஹு கபீஹுன்.

(நற்கருத்துடைய சொற்கள் கவிதைகளாகும். தீய கருத்துள்ளவை தீயவையாகும்.)

*** இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்

அதிரை அஹமது

பெரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் M H J அவர்களுக்கு... 3

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016 | , , ,

பெரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் M H J அவர்களுக்கு,

தங்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு எனக்கு அனுபவம் உள்ளதாக நான் நினைக்கவில்லை, இருப்பினும்  பலரின் ஆதங்கத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர விழைந்ததன் வெளிப்பாடே இந்த கடிதம்.   இறுதி நேரத்தில் மறுப்பு தெரிவிக்கும் சாத்தியக் கூறுகள் குறைவானதே என்பதை அறிவேன், இருப்பினும்  நிகழ்ச்சியின் பாதகத் தன்மையை முன்கூட்டியே எடுத்துரைக்க விரும்பியதே இக்கடிதத்தின் நோக்கம். 

புதிய கல்விக் கொள்கை   குறித்து  தந்தி தொலைகாட்சி நடத்தும் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் தாங்கள் கலந்துகொள்ள விருப்பதாக அறிந்தேன்.  காவி மயம் என்ற தலைப்பில்  தாங்களும்,  காவியம் என்ற தலைப்பில் பாஜக மற்றும் இந்துமக்கள் கட்சியை சேர்ந்தவரும்  பேசவிருப்பதாகவும் அறிந்தேன். 

இருதரப்பிலும் பேச்சாளர்களாக தலா மூவர் என்ற அடிப்படையில் விவாத நிகழ்ச்சி நிகழ்த்துவதே  மறைமுக கருத்து திணிப்புக்கான   முயற்சிகள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. தாங்கள் எப்படி சம்மதித்தீர்கள்.  புதியக் கல்வி கொள்கை குறித்து  எத்தனையோபேரை அழைக்க முடியும் என்ற போதும்  ஓர் முஸ்லிமை கொண்டு எதிர்கருத்து கூற வைப்பதன் சூழ்ச்சியை நீங்கள் உணரவில்லையா? 

உங்கள் கல்வியின் மூலம் நீங்கள் பெற்ற அறிவாற்றல் பற்றியும், பல மேடைப்பேச்சுக்களின் வாயிலாக உங்களின் வாதத்திறமை பற்றியும் நாம் அறிவோம். எதிர்தரப்பினரின் கருத்துக்களை கோபம் கொள்ளாமல், தர்க்க ரீதியில் தகர்த்தெறிக்கும் திறன் அல்லாஹ் உங்களுக்கு நிரப்பமாய் தந்துள்ளதையும் அறிவோம். இருந்தபோதும் கூட பேச்சாளர்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் குறித்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட உங்களுக்கே தெரியும். அப்படியிருக்க,  நேர அடிப்படையில் குறைவான கருத்துக்கள் உங்கள் தரப்பிலிருந்தும், அதிகபட்ச கருத்துக்கள்  காவியமயம் என்ற தரப்பிலும் பேச வைப்பதன் மூலம் மக்கள் மனதில் உளவியல் ரீதியாய்  தந்தி தொலைகாட்சியினரும் பாண்டே வகையறாக்களும்  புகுத்தவிருக்கும் தாக்கங்கள் பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா?

கல்வியாளர் என்ற அடிப்படையில் உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால், பாஜகவும் ஹிந்துத்துவாவின் உறுப்பினருக்கும் அங்கு என்ன வேலை ? புதியக் கல்வி கொள்கைக என்பது எதனைச் சார்ந்தது என்றே தெரியாத பாமர மக்களும் நடுத்தர வர்க்கத்தினருக்குமே இன்னும் அதனைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தாத நிலையில்,  சாதக பாதகங்களை அலசுவதற்கு தகுதியான நபர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சியினை மதசண்டையாக உருமாற்றும் பாண்டேயின் சதியினை தெரிந்தே  ஏற்பது  வேதனையளிக்கிறது.  புதியக்கல்வி கொள்கையை "இந்து-முஸ்லிம்" பிரச்சனையாக மட்டுமே  சித்தரிக்க முயலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் தெரிந்தே நாம் பலிகாடாவாவது வருத்தமளிக்கிறது.

இனி என்ன செய்ய! நேரம் குறைவு தான்.  வாக்களித்ததை நிறைவேற்றும் நிலையில் நாம் இருக்கிறோம்.  இருப்பினும் உங்கள் எதிர்ப்பை  சுட்டி காட்ட இன்னும் உங்களுக்கு வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறேன். தயவு செய்து   மதச்சாயத்தை வெளுக்க, நடுநிலையாளர்களை பேசுவதன் அவசியத்தை உணர்ந்து , நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுங்கள்.

உங்களால் முடியும் என்று கருதியே இந்த மடல்...  எல்லாவற்றிற்கும் மேல் அல்லாஹ்வின் நாட்டம்.

ஆமினா முஹம்மத்

கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி? Cancer Awareness Program 0

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், ஆகஸ்ட் 25, 2016 | , ,

ந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களுள் மிக முக்கியமானது ‘கேன்ஸர்’ எனும் புற்றுநோயாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் என்றால் என்ன?

மனித உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் இன்றியமையாதவையாகத் திகழும் ‘செல்கள்’ எனும் உயிரணுக்களைச் செயற்படவிடாமல் தடுக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கின்றோம்.  

video

கேன்ஸர் எனும் புற்று நோயின் உற்பத்தியைப் பற்றிக் கட்டாயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்து வளர்கிறதென்றால் குறிப்பிட்ட கணக்கில் அக்குழந்தையினுள் செல்கள் பிறந்து, தன் பணியினை முடித்துக்கொண்டு உயிரிழந்துவிடும். உயிரிழந்த செல்கள் அழிந்துகொண்டிருக்கும்போதே புதிய செல்கள் பழைய செல்களின் அளவைவிடக் கூடுதலாகப் பிறந்துவிடும். பழைய செல்களின் இறப்பும் அவற்றின் அழிவும் புதிய செல்களின் உற்பத்தியும்தான் குழந்தையையும் அதன் தலை முடியையும் நகங்களையும் விரைந்து வளர்க்கின்றன. பழைய செல்களின் இறப்பைவிட, புதிய செல்கள் குறைவாக உற்பத்தி ஆவதையே நாம் ‘முதுமை’, ‘நினைவாற்றல் குறைவு’, ‘தடுமாற்றம்’ என்கின்றோம்.

ஆரோக்கியமான உடல் நலம் உள்ள ஒருவருக்கு, எத்தனை செல்கள் புதிதாகப் பிறக்கின்றன தெரியுமா?

ஒரு வினாடிக்கு சுமார் 20,00,000 (2 மில்லியன்) செல்கள்! வளரும் இளைஞர் ஒருவரின் உடலில் அழியும் செல்களை ஈடுகட்டவும் புத்தியக்கத்திற்கும் பிறப்பெடுக்கும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை சுமார் 222-242 பில்லியன். உயிரை இழந்து அழியும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை 50-70 பில்லியன்.

இவ்வாறாக, உயிரிழந்து அழியவேண்டிய செல்கள், அழிந்துவிடாமல் சிலரின் உடலில் தங்கிவிடுகின்றன. வீணான, தேவையற்ற இந்த செல்கள்தாம் ‘கேன்ஸர் செல்கள்’.
 • கேன்ஸர் எனும் புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் யாவை?
 • எந்த வகையான உணவுப் பொருட்களைத் தவிர்த்துக்கொண்டால் …?
 • எந்தப் பொருட்களைப் பயன்படுத்தாவிட்டால் …?
 • எந்த வகை வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டால் … புற்று நோயிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்கள் உள்ளன?

என்பது குறித்து ஆழமான விழிப்புணர்வு முகாம் ஒன்றை அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள்:

இடம் : பவித்ரா திருமண மண்டபம், ECR, அதிராம்பட்டினம்.

காலம் : 29.8.2016 திங்கட்கிழமை, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை

காணொளி விளக்கம் : 
டாக்டர் M. முஹம்மது இப்ராஹீம். MS., MRCS (UK)., DNB., FMAS., FAIS.

நிகழ்ச்சியின் இறுதியில் புற்று நோய் குறித்த உங்கள் ஐயங்களைக் கேள்விகளாகக் கேட்டுத் தெளிவடையலாம்.

சிறந்த கேள்விகள் கேட்கும் மூவரைத் தேர்ந்தெடுத்து,  பரிசுகள் வழங்கப்படும்.

பெண்களுக்குத் தனி இட வசதி உண்டு.

டாக்டரிடம் தனியாகச் சிறப்பு ஆலோசனை பெற முன் பதிவு செய்துகொள்ளுங்கள்: 9043727525.


அதிரை தாருத் தவ்ஹீத்

வாயில பஞ்ச் - காதுல பஞ்சு… 41

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், ஆகஸ்ட் 24, 2016 | , , , ,

தாய்மொழியால் தனக்கென்றே இருக்கும் தனித்துவத்தால் தலை நிமிர்ந்து எவ்வகைச் சூழலையும் எதிர்கொள்ளும் பக்குவம் அதிரைநிருபருக்கு இருப்பதை அனைவரும் நன்கறிவீர்கள் ! 

சரி மேட்டருக்கு வருவோம், தனிமை அல்லது மல்லாக்க படுத்து யோசிக்கும் போது என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் சிந்தனையில் மின்னி மறையும், சந்தோஷங்கள், பஞ்ச் டையலாக் (!!?) அல்லது வெறுப்பேற்றும் சூழல் என்று இவைகளை சந்தித்திருக்காமல் யாரும் இருந்திக்க முடியாது.

அவ்வகையில் எப்போதாவது காத்திருக்கும்போது , தூரமாக பயணம் செய்யும் போது சிந்திக்கும், நினைக்கும் கேள்விகள் உங்களுக்கும் இதுபோல் யோசிக்க தோன்றும்... கமென்ட்ஸில் கலக்கலாமே...!
 • ஆத்திரம் அவசரத்துக்கு உதவும் என கிரடிட் கார்டு எடுத்தால் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள அத்தனை பொருட்களும் ஆத்திர(ம்) அவசரமாகி விடுகிறது.
 • பிச்சை எடுக்கும் வயதானவரின் அவலத்தை கூட ஃபேஸ் புக்கில் "லைக்" போடும் மடமை எப்போது ஒழியும்?
 • மிருகங்களை வதைக்காதீர்கள் என்று கொடி பிடித்த அதே ஆட்கள் எப்படி "லேம்ப் சாப்"  பில் பெப்பர் தூவி சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை.
 • வாரம் ஒருமுறை மட்டும் பள்ளிவாசலுக்கு வரும் ஆட்கள் எப்படி ஒரு மார்க்க விவாதம் என்றால் இப்படி அருவியாய் கொட்டுகிறார்கள்?
 • முன்னேர வாய்ப்பு ஒரு முறைதான் வரும் என்றார் நண்பர்... அது எப்போதுன்னு தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்கேன் என்கிறார்கள் பெரும்பாலானவர்கள்.
 • எந்த ஊர்லதான் கிடைக்கிறாங்களோ இந்த அழும் பெண்கள்… சீரியலுக்கு என்றே 'பெத்து" வளர்க்கிறாங்களா?
 • பெரியவங்க சொல் கேட்காட்டியும் உருப்பட முடியாது என்று சொல்லும் பெரியவர்களே... நீங்கள் உங்கள் பெரியவர்களின் சொல்லை 100% கேட்டீர்களா?... நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்.?
 • வாங்கும் அல்வாவில் மேற்பரப்பில் மட்டும் முந்திரி பருப்பு...அல்வாவுக்கே அல்வாவா?
 • ஷேர் பன்ன அதே வீடியோவெ எத்தனை தடவை ஃபேஸ் புக்கில் அப்லோட் செய்து சாவடிக்கனும்னு ஒரு கணக்கே இல்லையா?
 • பசித்த போது சாப்பிடகூட முடியாத  ஓய்வில்லாத  வேலை- ஓய்வு காலத்தில் விரும்பியதை சாப்பிட முடியாத நிலை.
 • ஊரில் உள்ள நண்பரிடம் பேசியபோது அவர் கேட்ட கேள்வி.  “இப்போது பள்ளிவாசல் எல்லாம் சர்ச் மாதிரி ஒரே நாற்காலி மயம், காலை மடக்கி தொழ முடியவில்லை என்பது அவர்களது வாதம், இருப்பினும் எந்த விருந்திலும் சகனுக்கு சம்மளம் போட்டு அவர்களால் எப்படி உட்கார முடிகிறது. ?”
படித்ததில் பிடித்தது :
 • நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?
 • நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள். நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!
 • மயிலே மயிலே இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமி்ழ் தெரியாது!
ZAKIR HUSSAIN

எப்படி அவர்களை மன்னிப்பேன் ? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016 | , , ,

பில்கிஸை நீங்கள் மறந்திருக்கக் கூடும்! பலருக்கு இப்பதிவே முதல் அறிமுகமாகவும் இருக்கலாம்...  மறந்தவர்களுக்கு நினைவூட்டலாகவும், புதியவர்களுக்கு சுருக்கமான அறிமுகத்துடனும் கட்டுரையை துவக்கலாம்..

"ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். ஒருவரால் அல்ல.. இருவரால் அல்ல... முன்னதாக பில்கிஸ் கையில் இருந்த மூன்று வயது குழந்தையும் தூக்கி எறிந்து பாறாங்கல்லில் மோத வைத்து சாகடித்தனர்"

கற்பனை செய்து பாருங்கள்! கொடூரமாய் இருக்கிறதல்லவா? நல்லவேளை நமக்கேதும் இப்படியொன்று நிகழவில்லை என்ற   பெருமூச்சு வெளிப்படுகிறதா?  நம்மைப்போல் ஓர் பாதுகாப்பான சூழலில் , அழகான வாழ்க்கையில் , இயற்கையின் வனப்பைபோலவே செழிப்பமாய் இருந்த குடும்பம் தான் பில்கிஸ் உடையது! கோரச் சம்பவம் நடக்கும் வரை அவரை யாருக்கும் தெரியாது... அவர் தனக்கான நியாயத்தை கேட்டு வாதாடி நிற்கவில்லை எனில்  14க்கும் மேற்பட்ட குடும்ப உறவினர்கள் மண்ணோடு புதைக்கப்பட்டது போல் நமக்கும் தடயம் கிடைக்காது போயிருக்கும் !


பில்கிஸ்க்கு நேர்ந்த அவலம் எதனால்? 

அவர் முஸ்லிம் பெண்மணி என்ற ஒரே காரணத்தினால் !!! ஆம்... அவ்வடையாளத்தை தவிர்த்து அவரை பாலியல் வன்முறைக்குள்ளாக எந்த முகாந்திரமும் அந்த நாசக்காரர்களுக்கு தெரிந்திருக்கவில்லை! 

சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்க முடிந்த கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த , 'வாழும் துயரம்' அவர்.

பிப்ரவரி 27, 2002ல் கோத்ரா ரயிலில் பற்றிய தீ கலவரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காவு வாங்கியது. தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதற்கு பலர் உயிரோடு இல்லை, பலர் உயிருக்கு பயந்து சொல்லத்தயாராய் இல்லை! ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் படிப்பறிவற்ற ஓர் இளம்பெண் துணிந்து வந்தார்.  

அதனை அவர் சொல்லக் கேட்போம்... 

"என் கணவர் வேலையில்லாதவராக அப்போது இருந்தாலும் , வசதிக்கொண்ட வீட்டில் திருமண வாழ்க்கை சுகமாக சென்றுக்கொண்டிருந்தது. எங்களுக்கு 3 வயதில் ஓர் மகள் இருந்தாள். பெயர் சாலிஹா. நான் 5 மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவளாக இருந்தேன்.

பிப்ரவரி 28! சரியாக கோத்ரா சம்பவத்திற்கு அடுத்த நாள் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்துத்துவாவினரால் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது கலவரமாக மாறிப்போக பல முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல நாடிய போது ஊர்த்தலைவர் தடுத்து "யாராலும் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்த முடியாதென்று" உறுதி கூறினார்.

ஆனால் ,

அதன் பின்னர் கலவர கும்பல் எங்கள் இல்லங்களை நோக்கி கற்களை வீசத்தொடங்கினர். அதிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தோம். அப்போது நான் செருப்பு கூட அணிய அவகாசம் பெற்றிருக்கவில்லை. உறுதி கொடுத்த ஊர் தலைவர் வீட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் , குழந்தைகள் ஒன்று கூடினோம். ஆனாலும் பாதுகாப்பற்றவர்களாய் உணர்ந்தோம். நாங்கள் தப்பி வேறிடம் செல்பதற்குரிய எல்லா வழிகளும் கலவரக்காரர்களால் அடைக்கப்பட்டிருந்தன. 28ம் தேதி நள்ளிரவில் எங்கள் வீடுகள் திட்டமிட்டு எரிக்கப்பட தொடங்கின. நாங்கள் உங்களை கொல்வோம், நாங்கள் உங்களை வெட்டியே தீருவோம் எனும் கோஷங்கள் உரக்க ஒலித்தன. 

எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டது. அதற்காக கிராம ஆண்கள் காவல்நிலையத்தில் உதவி கேட்டனர். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள காடுகளுக்கு சென்று சில நாட்கள் மறைந்து வாழ்ந்தனர்.

அன்றைய நாள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ண உணவின்றி அருந்த நீருமின்றி உயிருக்கு பயந்து எங்கள் கிராமங்களிலேயே பல்வேறு இடங்களில் ஒளிந்துக்கொண்டே இருந்தோம். ஆனால் அசாதரண சூழல் திணிக்கப்பட்ட நிலையில் அது சாதாரண விஷயமாக இருக்கவில்லை. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அவர்களை வெளியே அனுப்பவில்லை எனில் உன் வீட்டையும் கொளுத்துவோம் என்று ஆவேசமாக அவர்கள் கத்தியதால் பலரும் அடைக்கலம் கொடுக்க அஞ்சினர். 

மிரட்டலுக்கு அஞ்சிய , உறுதி அளித்த எங்கள் ஊர் தலைவரும் அவர் வீட்டிலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டார். எங்கள் வீடுகளுக்கே செல்லலாமென நினைத்தால் , அது ஏற்கனவே தீக்கு இரையாகியிருந்தது. மீண்டும் காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கோரினோம். அவர்களோ எங்களை அக்கிராமத்தை விட்டு வெளியேறிச்செல்ல அறிவுறுத்தினர்.

இரவாகியிருந்தது. அருகிலிருக்கும் கிராமத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிஜல்பாய் தாமோர் வீட்டுக்கு அடைக்கலம் தேடி சென்றோம். துரதிஷ்டவசமாக அவர் அப்போது ஊரிலில்லை. அவர் மகனும் கூட எங்களை ஆசுவாசப்படுத்த குடிக்க நீரும் சில திண்பண்டங்களையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி சொல்லிவிட்டார். 

வேறு வழியில்லை! வேறிடம் செல்ல வேண்டும். இன்னுமொரு கிராமத்திற்கு சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து எங்கோ தப்பியோடியிருந்தனர். அங்கிருந்த பள்ளிவாசல் அன்றைய இரவுக்கு பாதுகாப்பு கொடுத்தது.

ஷாமின்! என் ஒன்றுவிட்ட சகோதரி... நிறைமாத கர்ப்பிணி. திடீரென பிரசவ வலி ஏற்பட மருத்துவ உதவியும் கிடைக்காத அந்த நேரம் செய்வதறியாது திகைத்தோம். அவள் பள்ளிவாசலிலேயே தன் குழந்தையை பிரசவித்தாள்.

பள்ளிவாசல் அமைந்திருந்த நாங்கள் தங்கியிருந்த கிராமம் ஏற்கனவே இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டதால் அங்கிருப்பது பாதுகாப்பற்றது என எண்ணி குத்ரா எனும் கிராமத்திற்கு பழங்குடியினர் உதவியுடன் சென்றோம்.

எங்கள் கிராமத்திலிருந்து 500 முஸ்லிம்கள் தப்பி வந்தோம். 17 உறுப்பினர்கள் மட்டும் குத்ராவில் தங்கிக்கொண்டோம். ஷாமினால் பயணிக்க முடியவில்லை. ஈன்றெடுத்த வேதனை அவளை சோர்வாக்கியிருந்தது. ஆகையால் இக்கிராமத்திலேயே 3 நாள் வரை மறைந்திருக்க எண்ணினோம். எங்கள் அடையாளங்களை மறைக்க பழங்குடியினர் அவர்களின் துணிகளை எங்களுக்கு அணியவைத்தனர். ஷாமின் மீதான இரக்கத்தால் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். இல்லையேல் அதுவும் கிடைத்திருக்காது. 

ஆனால் அதுவும் எளிதானதாக இருக்கவில்லை. முஸ்லிம்களை அவர்கள் தங்களுடன் வைத்துள்ளார்களா என பல விசாரணைகளுக்கு உள்ளாகினர். எனவே அதிகாலை 4 மணிக்கு மாறுவேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.


உயிருக்காய் பயந்தோடிய நாட்கள் எல்லாம் கண்ணீர் மட்டுமே சுமந்திருந்தோம். அடுத்த நொடி என்ன ஆபத்திருக்கிறது என்பதை அறியாத படபடப்புகள் கொடூரமானவை. எதுவும் சிந்திக்க முடியவில்லை! சிந்தனையெல்லாம் எப்படி உயிரை காப்பாற்றுவதிலேயே இருந்தது.

இரு நாட்களுக்கு பிறகு பழங்குடியினரின் வழிகாட்டல் உதவியுடன் சபர்வாட் கிராமத்திற்கு சென்றோம். இங்கிருந்து ,மானாபாய் எனும் நீண்டநாள் நண்பரை சந்தித்து உதவி பெற நினைத்தோம். அவர் இருக்கும் பகுதி பனிவேலா. அங்கு செல்லும் வழியில் ஒரு குக்கிராமத்தில் ஓய்வெடுத்துக்கொண்டோம். அது இரு மலைகளுக்கு இடைபட்ட இடம் . குருகிய சாலை வழியே செல்லக்கூடிய பகுதி.

நாங்கள் சாலை வழியே சென்ற போது திடீரென ஒரு நபர் என் மாமாவை தாங்கினான். கீழே சரிந்த அவர் ஒரு மணி நேரத்திற்கு பின்பே சுயநினைவு பெற முடிந்தது. விரைவிலேயே சில நபர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்களை முன்பே எனக்கு தெரியும். ஆம்! அவர்கள் என் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். சற்று முன்னர் நாங்கள் தங்கிய சபர்வாட் கிராமத்தினர் தான் நாங்கள் எங்கேசெல்கிறோம் என்ற தகவலை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வெறியர்கள் டாட்டா ஸ்மோவில் வந்திருந்தனர்.

"முஸ்லிம்கள் இங்கேயிருக்கிறார்கள்! கொல்லுங்கள்! கொல்லுங்கள்" எனும் ஆவேச குரல்களை எழுப்பினர்.

அவர்கள் சபர்வாட் மற்றும் பனிவேலா கிராமத்திலிருந்த வெறிபிடித்த மக்களை திரட்டி வந்திருந்தனர். தொடர் ஓட்டத்தின் காரணமாக எங்கள் உடல் சோர்ந்திருந்தது, உதவிக்கு ஆள் இல்லாத நிலை உள்ளத்தையும் சோர்வடைய செய்திருந்தது. எங்களால் இனி அவர்களுடன் சண்டையிட முடியாது! அதற்குரிய சக்தியையும் இழந்துவிட்டோம். ஆனாலும் ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடிக்க நினைத்தோம்! பயனில்லை- சுற்றிவளைக்கப்பட்டோம். நாங்கள் 17 நபர்கள் தான்... நான்கு ஆண்கள் மட்டுமே எங்களில் உண்டு! எட்டு பெண்களும் மீதமுள்ளவர்கள் சிறு குழந்தைகளாகவும் இருந்தனர். அவர்களிலோ 25க்கும் மேற்பட்ட வெறியர்கள் இருந்தனர்.

அவர்கள் எம் பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள் கூட்டத்தினர்க்கு முன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.

அவர்களின் வெறி 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தையையும் விட்டுவைக்கவில்லை! ஷாமின் 2 நாள் வயது குழந்தையை கொடூரமாக கொன்றனர். என் தாய்மாமா, என் தந்தையின் தங்கை மற்றும் அவரின் கணவரையும் அடித்துக்கொன்றனர். வன்புணர்வுக்காளான பெண்களையும் கொன்றனர்.

அதன் பின் என்னிடம் வந்தனர். நான் என் 3 வயது மகளை கையில் ஏந்தியிருந்தேன். என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக அவளை பறித்துக்கொண்ட அந்த வெறியர்கள், தன் வெறியின் விசைக்கேற்ப அவளை தூக்கி வீசினர். அவளின் பிஞ்சு தலை பாறையில் மோதிய போது என் இதயமே சுக்குநூறாய் உடைந்தது. அவள் இறந்து போனாள். நான்கு பேர் என் கை மற்றும் கால்களை பிடித்துக்கொள்ள பலபேர் ஒருவர் பின் ஒருவராக என்னை வன்புணர்வுக்குள்ளாக்கினர். அவர்களின் வெறி அடங்கிய பின்பும் கூட கண்மூடித்தனமாக என்னை உதைத்தும் அடித்தும் துன்புறுத்தினர். என் கழுத்துப்பகுதியினை காலால் அழுத்தியிருந்தான் ஒருவன். கற்கள் கொண்டு தாக்கப்பட்டேன். இரும்பு தடியால் என் தலையில் தாக்கிய போது நினைவிழந்து போனேன். நான் இறந்துவிட்டதாக நினைத்த அந்த வெறியர்கள் என்னை புதருக்குள் தூக்கி வீசினர்.

எங்களை தாக்கிய போது அவர்கள் உதிர்த்த முறைகேடான வார்த்தைகளை என்னால் எப்போதும் திருப்பிச்சொல்ல முடியாத அளவுக்கு கேவலமானவை. " கோத்ராவில் எங்கள் மக்கள் கொன்றதற்காக உங்களை கொல்வோம்! எந்த ஒரு முஸ்லிமையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டோம்" என ஆக்ரோஷமாக கத்தினர்.

என் கண் முன்னே என் அம்மா, என் தங்கை மற்றும் என் 12 உறவினர்களும் கொல்லப்பட்டன்னர். தன் துன்பத்தை கத்தி சொல்ல முடியாத மிருகங்களை துன்புறுத்தி துடிதுடிக்க வைத்து கொல்லப்படுவதை போலவே என் உறவினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் 28ம் தேதி காலையில் என் கணவரும் இன்னும் சில உறவினர்களும் பிஜேபி ஊழியர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமத்தினர்க்கான மீட்டிங்கில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கெஞ்சியுள்ளார். இப்போது எங்களை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றவர்கள் அப்போது அக்கூட்டத்தில் இருந்தவர்கள் தான்!

17 பேரில் 2 குழந்தைகளும் (சதாம் -வயது 7, ஹுசைன் -வயது 5) நானும் மட்டும் பிழைத்துக்கொண்டோம்! அவர்கள் இருவரும் எப்படி தன்னை காத்துக்கொண்டார்கள் என எனக்கு தெரியவில்லை.

நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களில் எவரும் ஹிந்து பெண்கள் இல்லை. அவர்கள் அனைவரும் நடுத்தர வயது ஆண்கள் மட்டுமே. நாங்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட போது இவர்களெல்லாம் ஆபாச வார்த்தைகளில் கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போது நான் ஐந்து மாத கற்பிணி என கூட என்னால் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் கால்கள் என் கழுத்திலும் , வாயிலும் மிதிப்பட்டிருந்தது.

ஹிந்துக்களில் சாதி பேதமின்றி இந்த கொடூரத்தில் பங்காற்றினர். என் கிராமத்தை சேர்ந்தவர்களும் அதில் ஒரு பகுதியினர் தான்! எப்படி என்னால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போகும் ? அவர்கள் என் கிராமத்தை சேர்ந்தவர்களே!

இரண்டு மணி நேரத்திற்கு பின் என் கண்களை திறந்த போது என் உலகம் சிதைக்கப்பட்டதை கண்டேன். என்னால் நிற்க கூட முடியவில்லை! ஆனால் அவர்கள் கையில் மீண்டும் சிக்க விரும்பவில்லை. நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள கந்தல் துணியேனும் கிடைக்குமா என தேடியலைந்தேன். மேலங்கி கிடைத்தது. என்னை சுற்றி என் உறவினர்களின் பிணங்கள் இருந்தது. மண்ணில் சரிந்திருந்த அந்த உடல்களை பார்க்கவும் என்னால் முடியவில்லை.

ஓர் இரவும் கழிந்து, அடுத்த நாள் பகல் பொழுதும் கழிந்தது. தண்ணீர் தாகமும் பசியும் என்னை மேலும் துன்புறுத்தியது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! தாகத்திலேயே செத்துவிடுவேனோ என எண்ணத்தோன்றியது. அதனால் மலைப்பாங்கான அந்த இடத்தை விட்டு கீழிறங்கி உணவும் உடையும் கிடைக்குமா என தேடியலைய ஆரம்பித்தேன்.

சில தொலைவில் அடிகுழாய் ஒன்றை பார்த்தேன். அது அந்த பகுதியில் வாழும் பழங்குடியினர்க்கு சொந்தமானது. என்னை கண்டதும் நான் ஒரு முஸ்லிம் என அறிந்து என்னை தாக்க வந்தனர். அதிலிருந்து என்னை காத்துக்கொள்ள நான் முஸ்லிம் இல்லை என்றும் உங்களை சேர்ந்தவள் தான் என்றும் பொய் சொன்னேன் அவர்கள் மொழியிலேயே. அவர்கள் நம்பினார்கள். எனக்கு நீரும் உடையும் கொடுத்தனர்.

கொஞ்சம் உறங்கினேன். அப்போது தான் போலிஸ் வேன் அந்த பகுதிக்கு வந்து தேட ஆரம்பித்தது. ரந்திக்புர் கிராமத்திலிருந்து வந்த குடும்பத்தினர் கொல்லப்பட்டதை குறித்து அவர்கள் அங்கே கேட்டார்கள்.

போலிஸ்காரர்கள் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என நம்பினேன். அவர்களும் என்னை அவர்கள் கொண்டு வந்த வண்டியின் பின்புறம் ஓய்வெடுத்துக்கொள்ள சொன்னார்கள். உயிர் பிழைத்தது என் அதிஷ்ட்டம் என்றார்கள். அவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டேன். லிம்கேதா விற்கு அழைத்து சென்றனர். எனக்கு உணவு கொடுத்த பின் என் கதையை கேட்டார்கள். ஆனால் என் புகாரை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவர்கள் என்னை பயம் காட்டினர்.

ஒருவேளை இந்த வன்புணர்வு சம்மந்தமான குற்றச்சாட்டை சொன்னால் என்னுடல் இருக்கும் மோசமான நிலையில் என்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றும் விஷ ஊசி செலுத்தி என்னை மருத்துவர்கள் கொல்வார்கள் என்றும் கூறினர். நான் பயந்தேன் , எனினும் நான் சொன்னவற்றை ஒன்று விடாமல் புகாராக ஏற்றுக்கொள்ளச் சொன்னேன். ஆனால் அவர்களோ நான் சொன்னவற்றுக்கு புறம்பாக 500 பேர் சேர்ந்த மக்கள் குழு என்னையும் உறவினரையும் அடித்துவிட்டதாக கதை கட்டி எழுதினர். சக்தி முழுவதும் இழந்த என்னால் என் புகார் குறித்து போலிஸாருடன் முறையிட முடியவில்லை.. இவர்களிடம் அது பயனளிக்காது என்பதையும் அறிந்துக்கொண்டேன். ஆகையால் என் எண்ணத்தை கைவிட்டு என்னை கோத்ரா முகாமிற்கு அழைத்துச்செல்லும்படி வேண்டுகோள் விடுத்தேன்! நான் என் உறவினர்களை பார்க்க விரும்பினேன்.

நான் படிக்காதவள். நான் சார்ந்த அமைப்பு பெண்களை பள்ளிக்கு செல்வதை அனுமதிக்காத தப்லீக் ஜமாத்தை சேர்ந்தது. ஆனாலும் கற்பழிப்பு நடத்தப்பட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு, மெடிக்கல் செக்கப் செய்ய முடிவெடுத்தேன். நான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் சான்றிதழை பெற்றேன். 

என் அம்மா, என் 2 சகோதரர்கள், இரு சகோதரிகள் மற்றும் என் மூன்று வயது மகள் கொல்லப்பட்டனர். ஆனாலும் என்னால் அந்த குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும். அந்த மிருகங்களை பல வருடங்களுக்கு முன்பிருந்தே எனக்கு நன்கு தெரியும். நாங்கள் ஊரில் பால் விற்று வந்தோம். எங்களிடம் பால் வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்கள் அவர்கள். ஒருவேளை அது அவர்களுக்கு அவமானமாக இருந்தால் அதற்காக அவர்கள் இவ்வாறு என்னை செய்திருக்க வேண்டியதில்லை. இந்நிகழ்வுகளுக்கெல்லாம் பிறகு என் தந்தை மனநிலை குன்றியவராகிவிட்டார். எண்ணிப்பார்க்க முடியாத திருப்பங்களுடனும் மோசமான சொற்ப நாட்களுக்குள்ளும் நான் அனாதையாக்கப்பட்டுவிட்டதால் சக்தி முழுவதும் இழந்துவிட்டேன் ! ஆனாலும் இதனை பாதியிலேயே நான் கைவிடுவதாக இல்லை! எப்படி என்னால் அவர்களை மன்னிக்க முடியும் ? "

முடித்தார். பத்திரிக்கையாளர் ஷீலா பட்-இடம் தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் விவரித்தார் பில்கிஸ். அதன் பின்னர் தான் பலரின் கவனத்திற்கு இக்கொடூரம் சென்றது. 

எதிர்பார்த்த படியே மோடியின் காவல்துறை 2003ல் இந்த வழக்கை "சம்பவம் உண்மைதான். ஆனால் கண்டுபிடிக்க இயலாதவை" என கூறி முடிவுக்கு கொண்டு வந்தது. இதுபற்றி சகோதரி பில்கிஸ் குறிப்பிடுகையில் " இருமுறை புகார் அளித்தேன். முதலாவதாக லிம்கேதா வில், அடுத்ததாக நான் தங்கியிருந்த கோத்ரா முகாமில் . அவர்கள் என் கைரேகையை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் படிப்பறிவற்றவளாக இருந்ததால் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை நான் அறியவில்லை"

அதன் பின் பில்கிஸ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக அஃது அஹ்மதாபாத் சுப்ரிம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இவ்வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட பின் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவர்களும் போலிஸும் இந்நிகழ்வுக்கு துணை புரிந்ததும், தடயங்களை அழித்ததும் அம்பலமானது. 2 மருத்துவர்கள், 6 போலிஸ் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. சிபிஐ தன் அறிக்கையில் இந்நிகழ்வு குஜராத் போலிஸ்ஸின் ஒட்டுமொத்த தோல்வியையும் அவர்களின் உடந்தையையும் சுட்டிக்காட்டியது. இந்த வழக்கு போக்கின் காரணமாக பில்கீஸ் அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்ததன் காரணமாக அவருக்கு CISF பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்தது முதல் வழக்கு முடியும் வரையில் 20க்கும் அதிகமான இடங்களுக்கு பாதுகாப்பு கருதி மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்கிஸ் குஜராத் க்கு வெளியே வழக்கு விசாரணை நடத்தும்படி சுப்ரிம் கோர்டில் மனு கொடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. "நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க வைத்தது" என இம்முடிவு குறித்து கூறினார்.

இதற்கிடையில் போலிஸாரால் பில்கீஸ் உறவினர்கள் புதைக்கப்பட்ட பனிவேலா கிராமத்தை ஏய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தோஹ்ரா குழு ஆய்வு செய்த போது அங்கே 60 கிலோ உப்பு கிடைத்தது. உடலை சீக்கிரமாக மக்கச்செய்வதற்காக திட்டமிட்டு போலிஸார் இவ்வாறு செய்தது நிரூபணமானது. மண்ணின் ஈரப்பதம் காரணமாக அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. பில்கிஸ் சொன்ன அடையாளங்கள் வயதும் மருத்துவகுழு ஆராய்ச்சி முடிவோடு ஒத்துப்போனது. 8 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்தன. மீதம் ஆறுபேர் காணாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மருத்துவக்குழுவின் அறிக்கை இவ்வழக்கின் போக்கை மேலும் வலுவாக்கியது.

ஆறுவருட போராட்டத்தின் பயனாக , பில்கிஸ் வைத்திருந்த நம்பிக்கையை காக்கும் வண்ணம் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்தது. பிடிபட்ட 20 பேரில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 2008, ஜனவரி 18ல் ஆயுள் தண்டனை விதித்தது. ஒருவர் விசாரணையின் போதே இறந்துவிட்டிருந்தார். 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டனர்.

நீதி கிடைத்த போதும் விடுவிக்கப்பட்ட ஆறுபேருக்காக தன் ஆதங்கத்தையும் சகோதரி பதிவு செய்தார். அந்நபர்களுக்கும் தண்டனை பெற்றுத்தருவதில் உறுதியாய் உள்ளார். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த கேஸ்களுக்கும் சிபிஐக்கு தன் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இத்தீர்ப்பு பற்றி ப்ரஸ் மீட்டிங்கில் பேசியபோது " இது என் தனிபட்ட போராட்டமல்ல. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல பெண்களுக்கான போர். பாலியல் வன்முறை திட்டமிடப்பட்டு எங்கள் சமுதாயப் பெண்கள் மீது நடத்தப்பட்டது. என்னுடைய இப்போராட்டம் பாதிப்படைந்த பல பெண்களுக்கு சக்தியை கொடுக்கும். அவர்கள் தண்டிக்கப்படுவதால் மட்டுமே வெறுப்பு ஓய்ந்து விடாது. ஆனால் நீதி இன்னும் சாகவில்லை என்பதற்கான சிறிய அறிகுறிதான் இது..!" என்றார். உண்மை தான் ! எவ்வித பணபலமும் இன்றி, எந்த ஒரு அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இன்றி தனித்து போராடி தனக்காக நீதியை தனியாளாய் நிலைநாட்டிய பில்கிஸ்ஸின் செயல் ஒவ்வொரு பாதிப்படைந்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரி தான்.

மோடிக்கு பெரும் தலைவலி என்றே தான் எண்ணத்தோன்றும் சகோதரி பில்கிஸ் அவர்கள் தரும் பதிலடிகளைப்பார்த்தால்! முதலமைச்சர்க்கான தேர்தல் சமயத்தில், "நீங்கள் ஓட்டுப்போடுவீர்களா?" என கேட்கப்பட்ட போது, "நான் ஏன் ஓட்டளிக்க வேண்டும் ?, பல கொடுமைகள் எனக்கு நிகழ்த்தியதோடு என் குடும்பத்தாரை என் கண் முன்னே கொடூரமாய் கொன்றார்கள். இவற்றுக்கு பின்னாவது குஜராத் அரசு என்னை பாதுகாத்திருக்க வேண்டும், எனக்கு நீதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். இவையெல்லாம் செய்ய வக்கற்ற அரசு இயந்திரத்திற்காகவா நான் ஓட்டளிக்க வேண்டும். முடியாது. நான் விரும்பவுமில்லை" என்றார் காரமாக.

இப்படியான விரக்தியாளர்களை தான் இந்த மதவாத அரசு உருவாக்கியுள்ளது. உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி மோடியின் ஆதரவுக்காக அவரை சென்று சந்திப்பீர்களா என கேட்டபோது " தன் சொந்த மாநிலத்தில் எனக்கு நீதியும் பாதுகாப்பும் தர முடியாத நபரை நான் எப்போதும் சந்திக்க விரும்பவில்லை. நான் அவரை நம்பப்போவதுமில்லை " என்ற அவரின் ஒவ்வொரு சொல்லும் மோடியின் ஒவ்வொரு பிம்பத்தையும் உடைத்துக்கொண்டே வந்தன.

இன்று இவரை நாம் மறந்திருக்கலாம், இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மக்கள் புறக்கணித்திருக்கலாம். நமக்கொரு துன்பம் நிகழாத வரை அத்துன்பத்தின் ரணங்கள் நமக்குப் புரியப்போவதில்லை! ஆனால் அவருக்கான அநீதிகளை ஒதுக்கிவிட்டு கொடூரனை ஆட்சிகட்டிலில் அமர வைக்க துடித்த ஒவ்வொரு சாமானியனும் குற்றவாளிகளே தான். வெட்கபட வேண்டும் நாம்...

மூன்று பெண்குழந்தை ஒரு ஆண் குழந்தையுடன் 20க்கும் மேற்பட்ட முறை வீடும் ஊரும் மாறி மாறி அலைகழிக்கப்பட்டும், அவ்வபோது போலிஸ் நெருக்கடிகளோடும் , இதற்கு சாவே மேலோ என்ற சிந்தனையில் அடிக்கடி வயப்பட்டும் கூட "வாழ்வதற்காய் போராட வேண்டுமெனில் போராடத் தயங்கமாட்டேன்" என திடமாய் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கிறார்...  14 வருடத்தில் ஏதேதோ நடந்துவிட்டது! குற்றவாளிகளெல்லாம் சுதந்திரமாய்... பில்கிஸ் மட்டும் கேள்விக்குறியாய்......... டெல்லி மாணவி நிர்பயா இறந்ததே நலம் தான்! இந்தியாவில் நீதி வேண்டுவோர் தான் குற்றவாளிகள். 

சகோதரி பில்கிஸ்ஸின் நல்வாழ்வுக்காய் பிரார்த்திப்போம்.

ஆமினா முஹம்மத்

reference :
http://www.rediff.com/news/2004/feb/26guj.htm
Tehelka Magazine, Vol 5, Issue 4, Dated Feb 02, 2008
http://articles.economictimes.indiatimes.com/2008-01-22/news/27701050_1_bilkis-bano-shailesh-bhatt-ramesh-chandana
http://archive.indianexpress.com/news/the-meticulous-seven-and-a-sevenday-hunt-for-proof/264049
http://wayback.archive.org/web/20080323094551/http://www.deccanherald.com/archives/aug092004/n14.asp
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/importance-of-being-bilkis/article1436970.ece

அன்புப் பெட்டகமும் ஆசை ஒட்டகமும் 4

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், ஆகஸ்ட் 22, 2016 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 11

வாஅக்ராஹ்! வாநாகத்தாஹ்! (ஓ, என் செல்லமே! என் ஆசை ஒட்டகமே!)

நாடோடிகளின் தூதுவர் அலறிப் புடைத்துக்கொண்டு வந்த வழியே திரும்பி ஓடினார்.

“ஓ, மதீனா வாசிகளே! அந்தோ! என் செல்லமான ஒட்டகம் பலியாக்கப்பட்டுவிட்டது. இனி நான் என்ன செய்வேன்?” என்று ஆவேசமாக அலறினார்.

இறையில்லத்தில் இருந்து இறங்கி வந்த வேகத்தில், அவரை இதமாய் அணைத்தது ஒரு கரம். அது அண்ணலின் திருக்கரம்! ஆறுதல் தரும் கரம்!

அந்த அருட்கரம் தொட்டதுமே அப்படியே அவர் அமைதியானார். அது எப்படிச்  சாத்தியம்? அந்தக்  கரத்தில் அப்படி என்னதான் இருந்தது?

அந்த இனிய கரம், சாதாரண கரமல்ல! மனித மனங்களையும் மனத்தின் உணர்வுகளையும் துல்லியமாக நாடி பிடித்துப் பார்க்கத் தெரிந்த உளவியல் மருத்துவரான உண்மைத் தூதரின் கரம்! 

அந்தக் கை, வெருங்கையல்ல! அருள் நிறைந்த கை. அறிவுப் பாதையிலிருந்து வெகுதூரம் விலகிப்போய்விட்ட, அறியாமை அந்தகாரம் எனும் அடிப்பாகமே இல்லாத, ஆழ்கிணற்றில் வீழ்ந்து கிடந்த விலங்குகளான அராபியர்களை, ஏகத்துவம் என்ற ஏணி மரம் கொண்டு கரை சேர்த்த கருணை மனிதரின் கை! இம்மையிலும் மறுமையிலும் அனைத்து முஃமின்களுக்கும் ஆதரவான ஒரே நம்பிக்கை!

இந்த இனிய கரங்களுக்குச் சொந்தமானவர் பற்றியே, தூயோன் அல்லாஹ் (ஜல்), இந்தத் தூதர் இடத்தில் உங்களுக்கு "உஸ்வத்துல் ஹஸனா" இருக்கிறது! என்கின்றான். 

ஒரு மனிதன் யாராக இருந்தாலும் சரியே! எத்தகைய சூழலில் அவன் இருந்தாலும் சரியே! எப்படிப்பட்ட தொல்லைகளால் தொடரப்பட்டவனாகவும் சோதனைகளால் சூழப்பட்டவனாகவும் வேதனைகளால் விரக்தியானவனாகவும் இருந்தாலும் சரியே! அந்தச்  சூழ்நிலைக் கேற்ற "அழகிய முன்மாதிரி"யும் அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய பயிற்சி முறையும் அல்லாஹ்வின் அருட்சுடராம் அண்ணல் நபி (ஸல்) யிடம் இருக்கவே செய்தது. இன்றும் வரலாற்றில் அது வாழ்வு நெறியாக வாழ்கிறது!

இந்த மகோன்னதமான மாமனிதரின் வாழ்வு, எடுத்த எடுப்பிலேயே தாயும் தந்தையுமற்ற அனாதையாகவே ஆரம்பமாகியது!

பிறகு, ஆடு மேய்க்கும் இடையராக, கவனிப்பாரற்ற ஏழையாக, சின்னஞ்சிறு வியாபாரியாக, வணிகப்பயணியாக, குழுவின் தலைவராக, எல்லோருக்கும் நம்பிக்கையாளராக, நாணயம் மிகுந்தவராக, வாதி பிரதிவாதிகளுக்கு நடுநிலையானவராக, பேச்சில் வாய்மையானவராக, நடத்தையில் நேர்மையானவராக, நேசமான கணவராக, பாசமான தந்தையாக, ஜிப்ரீலின்  முன் சிறந்த மாணவராக, அருள்மறை ஏந்திய அல்லாஹ்வின் தூதராக, மார்க்கப் பிரச்சாரகராக, அயல்நாட்டில் தஞ்சமடைந்த அகதியாக, அரசியல் தலைவராக, தானைத் தளபதியாக, வேதத்தின் விரிவுரையாளராக, சட்டத்துறைச் சிற்பியாக, ராஜதந்திரியாக, பொறுமையின் சிகரமாக, குணமளிக்கும் மருத்துவராக, கவிஞனையும் இணங்கவைக்கும் நாவலராக, நகைச்சுவை விரும்பும் நல்ல நண்பராக, சமூக சீர்திருத்தவாதியாக, வான்வெளிப் பயணம் சென்றுவந்தவராக, வாரி வழங்கும் வள்ளலாக, வஞ்சகர்களை எதிர்த்துப் போராடிய போர்வீரராக, மதீனாவின் ஆட்சியாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக, மேலும், தம் தோழர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த தோழராக, எல்லாவற்றுக்கும் மேலாக, "தோழமை" என்ற சொல்லின் மொத்த வடிவமாகவே நின்றார்கள்!

அந்தி மயங்கும் சூரியன் அடிவானில் தஞ்சமடையும் நேரம். மெல்ல வருடிய கோடைக் காலத் தென்றல் காற்றால், சரசரவென ஒலித்தச் சருகுகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மாலைச் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் இருள் நெருங்கியதைத் தொடர்ந்து, அங்கு ஒளியேற்றி வைப்பது போல் விரைந்தேறி நகர்ந்து அருகேயிருந்த மலைக்குன்றின் உச்சியில் ஏறி நின்று வெளிச்சத்தைச்  சற்று  இதமாக வீசிக் கொண்டிருந்தன!

நாடோடிகளின் தூதுவர், தன் கொழுத்த இளம் ஒட்டகையிலிருந்து இறங்குவதையும் ஒட்டகையை மஸ்ஜிதுன் நபவீக்கு வெளியில் தனியே விட்டபின், அல்லாஹ்வின் தூதரிடம் அரசியல் உரையாட அவர் உள்ளே சென்றுவிட்டதையும் சில கண்கள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தன. அவை பசியால் பஞ்சடைந்த கண்கள்!

தூக்கிவிட்டால் சுமப்பவர் எவரோ, தூண்டிவிட்டால் துள்ளி ஆடுபவர் எவரோ, அதே அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி) அப்போது சரியாக வந்து ஆஜரானார்!

“நண்பா! நாம் ஒட்டகக் கறி உண்டு எவ்வளவு காலமாகிவிட்டது கண்டாயா?” ஒருவர் அங்கலாய்த்தார்!

“அந்-நுஐமான் மனது வைத்தால், நாம் இப்போதே அறுத்துப் பொறித்துச்  சுவைத்து உண்ணலாமே” என்று உசுப்பேத்தினார் இன்னொருவர். “இதோ என்னை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லாமல், சொல்லி அழகாய் அமர்ந்திருக்கிறதே!” என்றார் பிரிதொருவர். “என்னையும் கொஞ்சம் சேர்த்துக்கொள் தோழா!” என்று கெஞ்சினார் மற்றொருவர்!

அர்த்தம் புரிந்துபோனது அந்-நுஐமானுக்கு. நகைச்சுவை நாயகருக்குக் கொஞ்சம் யோசனைதான். இலேசாகத் தயங்கினார்! எனினும் என்ன நினைத்தாரோ, உடனே செயல்பட்டார். கூட்டாளிகள் என்னால்தான் முடியும் என்று இவ்வளவு கெஞ்சுகிறார்கள். இதுகூடச்  செய்யாவிட்டால், நட்புக்கு என்னதான் அர்த்தம் இருக்கிறது! என்று அந்த ஒட்டகையை உடனே போட்டுத் தள்ளிவிட்டார்!

குர்பானி கொடுத்தாகி விட்டது!

நாடோடிகளின் தூதுவர், அரசியல் ஆலோசனை முடித்துக் கொண்டு வெளியே வந்தால், ஒட்டகை நின்ற இடத்தில், அதன் தும்புக் கயிறுதான் கிடந்தது. சற்று தூரத்தில் புத்தம் புது இறைச்சி பொறிக்கப்படும் சுவையான வாசனை மூக்கைத் துளைத்தது.

நாடோடி அரபிக்கு சட்டென்று புரிந்து போனது!

ஆத்திரம் பொங்க அரற்றி நின்ற அவர் மீது தம் அருட்கரத்தை வைத்த அண்ணலார், அவரை அமைதிப் படுத்திவிட்டு, கூட்டத்தைப் பார்த்துக்  கேட்ட கேள்வி:

“இதைச் செய்தது யார்?”

சப்தம் அடங்கிய சபையிலிருந்து ஒரு குரல் "அந்-நுஐமான்" என்றது. 

“எங்கே அந்-நுஐமான்?” 

அங்கே அந்-நுஐமான் (ரலி) உற்சாகமிகுதியால் ஒட்டகத்தை அறுத்துப் போட்டுவிட்டு, பிறகுதான் அந்தத் தகாத செயலை உணர்ந்தவராக, இந்தத்  தவற்றுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்ற உதறலில் எங்கு போய் ஒளிவது என்று யோசித்துப் பார்க்காமல், கண்ணுக்குக் கிடைத்த ஒரு வாகான தோட்டத்திற்கு ஓடிப்போய், அங்கிருந்த ஒரு சிறிய பொந்து போன்ற பள்ளத்தில்  புகுந்து ஒளிந்து கொண்டார்.

அந்நியரின் வாகனத்தை அனுமதியின்றி அறுத்துவிட்டோமே! இத்தகு செயலுக்கு என்ன தண்டனையோ என்று உள்ளுக்குள் உதறலெடுத்துக் கொண்டிருந்தது அவருக்கு!

அது அண்ணலாரின் பெரிய தந்தை ஜுபைர் இப்னு அப்துல் முத்தலிஃப் அவர்களின் மகளார் ளுபாஆ (ரலி) அவர்களுக்குச் சொந்தமான வீட்டைச் சுற்றியுள்ள ஒரு சிறிய தோட்டம்.

பள்ளத்தில் பதுங்கிக் கிடக்கும் அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி), சுதாரித்துக் கொண்டு எழுந்து ஓடிவிடக்கூடும் என்ற எச்சரிக்கையுடன், “நான் அந்-நுஐமானைப் பார்க்கவே இல்லையே! அல்லாஹ்வின் தூதரே” என்று நயமாக வாயால் சொல்லிக்கொண்டே, கையால் அவர் ஒளிந்துகொண்டிருக்கும் சாக்கடைப் புதரைச் சுட்டிக்காட்டினார் ளுபாஆ (ரலி) வின்  விவேகமான அண்டை வீட்டுக்காரர்.

தன் ஒன்றுவிட்ட சகோதரி ளுபாஆ பின்த் ஜுபைர் (ரலி) உடைய தோட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட இடத்துக்குச் சென்று, பேரீத்த ஓலை, இலை தழைகளையெல்லாம் பரபரவென்று அப்புறப்படுத்தித் தோண்டிப் பார்த்தால், கல்லறைப் பிணத்துக்கு உயிர்வந்துவிட்டதுபோல், பயத்தில் முகமெல்லாம் வெளிறிப்போய், அந்தக் குறுகிய பள்ளத்திலிருந்து வெளியானார் அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி). 

கண்ணின் மணி நேர் கருணைக் கடல் நபியவர்களுக்கு, அவரின் இக்கட்டான அந்நிலை கண்டு இரக்கம் சுரந்தது! மனித நெஞ்சங்களிலேயே, பரிவுடன் துடித்த கனிவு மிகு இதயங்களில் தலையாயது அல்லவா நமக்கெல்லாம் நேர்வழி காட்டிய, நானிலம் போற்றும் அந்த நாயகத்தின் உள்ளம்!

“உனக்கு ஏன் இந்தப் பரிதாப நிலை அந்-நுஐமான்?” அவர் முகத்தை மூடியிருந்த புழுதி, இலைதழை தூசுகளை எல்லாம் துடைத்து விட்டுக் கொண்டே பரிவுடன் கேட்டார்கள் அமைதியின் ஜோதி அண்ணல் நபி (ஸல்) அவர்கள். 

“எந்த மனிதர்கள் உங்களை என்னிடம் ஆள்காட்டி அனுப்பி வைத்தார்களோ, அதே ஆட்கள்தாம் என்னை, ஒட்டகையை ஒரு கை பார்க்கச் சொன்னார்கள் யா ரசூலல்லாஹ்” என்றார் வெகுளித் தனமாக!

காண்போரின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் அந்த மதி முகத்தின் மந்தகாசப் புன்னகை மாறாமல், அந்-நுஐமானை மன்னர் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு அழைத்து வந்தார்கள். 

பாலைவன நாடோடிகளின் தூதுவருக்கு ஆறுதல் சொன்னது மட்டுமன்றி, அவர் இழந்ததைவிடச்  சிறந்த ஒட்டகம் ஒன்றைப் பகரமாக அளித்தார்கள் 'அன்புப்பெட்டகம்' அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.(1)

மனமகிழ்ச்சி கொண்டார் அந்த நாடோடிகளின் தூதுவர். இனிமை மிகு மொழியில், அழகுமிகு நடையில், பெருமானாரின் ஈகையை, இரக்கத்தை, ராஜரீகப் பெருந்தன்மையை, தயாள குணத்தை, வீரத்தை, விவேகத்தைப் புகழ்ந்து போற்றினார்!

அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி) யின் கை பிடித்து, அவரையும் நாடோடி அரபியையும் ஒட்டகைக் கறி விருந்துக்கு அழைத்துச் சென்றார்கள் ஓங்குபுகழ் நபியவர்கள். தோழர்களுடன் அனைவருக்கும் களிப்புடன் சேர்த்துக் கல்யாண விருந்துபோல் அமைந்தது அன்று! 

ஒட்டகத்தை இழந்தவரும் ஒட்டகத்தை அறுத்தவரும் ஒன்றாய் அமர்ந்து ஒரே மரவையில் உணவுண்ணுவதை ரசித்துப் பார்த்து நின்ற வெள்ளை மன வேந்தர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அல்லாஹ் (ஜல்) வின் கருணையை  எண்ணி அர்த்தத்துடன் சிரித்தார்கள். அதைவிட ‘அதிஅழகு’ என்பது வேறு எங்கு நோக்கினும் இல்லவே இல்லை! (2)

ஆம்! 'அழகின் சிரிப்பு' என்றாலும் 'சிரிப்பின் அழகு' என்றாலும் இந்த இரண்டுமே அந்த ஒருவரையே சுட்டி நிற்கும்! அவர்தாம் 'அன்புப் பெட்டகம்' அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!

o  o  o  o  0  o  o  o  o  
ஆதாரங்கள்:
(1) ஹயாத்துஸ் ஸஹாபாஹ் : 3/154
(2) அல்இஸாபாஹ் 3/570 : ரபீஆ இப்னு உஸ்மான் (ரலி) 
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் ? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2016 | , ,

அதிகாலை வேளை. சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென என் மகனை காணவில்லை. "அவனுக்கு நம் போன் நம்பர் நினைவிருக்குமா?, கூட்டத்தில் யாரிடம் கூச்சம் விட்டு , போன் வாங்கி என்னை தொடர்புகொள்வான்" என்ற புலம்பலில் ஆரம்பிக்கிறது தேடலின் பதற்றம்.. போன வாரம் கூட இதேபோல் என் 3வயது மகள் என் கைப்பிடிக்குள் இருந்து நழுவி எங்கோ செல்ல "எங்கே அவளை தேடுவேன், வாகனங்கள் மிகுந்த பகுதியை கடந்திருப்பாளா? அழுதழுது மூச்சு விட முடியாமல் தவித்தபடி யாரிடத்திலேனும் அடைக்கலமாகியிருப்பாளா" என்றெல்லாம் நினைத்து வெதும்பி அலைந்து தேடிய பின்னர் கிடைத்தாள். இம்முறை என் மகன்!  தேடலின் ஆரம்பப்புள்ளியிலேயே  வலிகள் நெஞ்சை அடைக்க    நீரால் நிரம்பிய கண்களை   வலுகட்டாயமாய்  திறந்துக்கொண்டேன்.. நிம்மதியாய் கட்டிலில் உறங்கும் மகனை பார்த்த பின் ஒரே அலைவரிசையில் மூச்சுக்காற்று உள்ளூம் வெளியேயும் சென்றது.  ஆம்! இரண்டு நிகழ்வுகளும் கனவு தான் ! ஆனால் "ச்ச, கனவா" என வழக்கம் போல் புறம்தள்ள முடியாத ரணம் அது ! எழுத்துக்குள் அகப்படாத பரிதவிப்பு ! 

இந்த கனவு குறித்த சிந்தனைகளில் மூழ்கியபடியே வேறொரு தேவைக்கு கூகுள் தேடலில் தொலைந்தபோது  பர்வீனா பற்றிய தகவல் கிடைத்தது எதார்த்தமான ஆச்சர்ய பொருத்தம்! எனக்குள் சொல்லிக்கொண்டேன் 'என்னே பொருத்தம்' .


உங்கள் குழந்தைகளை நீங்கள் தொலைத்ததுண்டா?  லட்சத்தில் ஒருவருக்கு தொலைத்த அனுபவம் இருக்கலாம்.. அவர்களின் தேடல் ரணங்களின் நீட்சியாய் இருக்கலாம். ஆனாலும் பொதுவாய் இச்சூழல் அரிதிலும் அரிது !. கொடுத்துவைத்தவர்களல்லவா நாம் ? நம் குழந்தைகள் போல் பாதுகாப்பான சூழலில் வாழ்க்கை அமைந்த அதிஷ்ட்டசாலி குழந்தைகள் அல்ல காஷ்மீரிகள். 

புரிந்திருக்கும்..பர்வீனா யாரென்று. அத்துடன் இக்கட்டுரையை நீங்கள் 'பத்தோடு பதினொன்றென'  முடித்துக்கொள்ள அவ்வடையாளம் போதுமானதாய் இருக்கலாம்.  12 வயதில் திருமணம் செய்துகொடுக்கப்பட்டு வீடே கதியென கிடந்த சராசரிப் பெண்ணின் குரல் திடீரென ஓர்நாள் ஆக்ரோசமாய் அலறியதையும், ஓர் தனிமனுஷியின் போராட்டம் மக்களின் அமைப்பாய் உருமாற்றமானதும் மனசாட்சியுடையவர்களால் எளிதில் கடந்துவிடக்கூடிய செய்தியல்ல! இறந்துவிட்டாலும் அது சிலகால இழப்பின் வேதனையுடன் முடிந்துபோகும், ஆனால் தம் பிள்ளை என்னவானான் என்றே தெரியாமல் ஒவ்வோர் நாளும் வலியுடன் முடித்து வலியுடனே ஆரம்பமாகுமே! அத்தகைய கண்ணீரை நீங்கள் நிச்சயம் அறிந்திட வேண்டும்.  உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவனோ, எதிர்காலத்தை வளப்படுத்த காத்திருக்கும் உங்கள் மகனோ  சட்டென உங்களில் இருந்து காணாமல் போனால் அந்நொடியே வாழ்க்கைச்சூழல் தலைகீழாய் சுழலுமே, அதன் மரணவலி புரிய வேண்டும். 


"யாரும்  ஒரு தாயின் வலியை புரிந்துகொள்ளவில்லை, நான் பாதிக்கப்பட்டவள், என்னைப்போல் பாதிக்கப்பட்டோர் பலர் காஷ்மீரில் உண்டு, APDP என் வலிகளைச் சுமந்த, என்னைப்போன்று நூற்றுக்கணக்கான தாய்களின் கண்ணீரையும் பிறப்பிடமாய் கொண்ட அமைப்பு" என அப்பெண் புகழ்பெற்ற லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்த போது அரங்கம் கனத்தது! 

" ராணுவ உயர் அதிகாரி என்னை அழைத்து, கேஸ் வாபஸ் வாங்கிக்கொள்ள என்னிடம் பேரம் பேசினார் , 10 லட்சமென்றும் 20 லட்சமென்றும் அரசு வேலையொன்றை வாங்கி தருவதாகவும் , ஆசை காட்டினார்.  என் மகனுக்கான தேடலுக்கு அவர்கள் நிர்ணயித்த விலை இவை அனைத்தும். ஆனால் ஒரு அன்னையால் எப்படி தன் மகனை விற்க முடியும்?" என்று அவரின் குரல் அலிகார் பல்கலைகழக மேடையில் ஒலித்த போது அரங்கம் முழுதும் அதிர்ந்தது!


பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், இந்தோனேஷியா, ஜெனிவா, கம்போடியா, லண்டன் போன்ற பல்வேறு நாடுகளில் தான் உருவாக்கிய APDP அமைப்புக்காக கலந்துகொண்டு உலக நாடுகளின் கவனத்தை திருப்பி வரும் பர்வீனா அதிகம் படித்தவரல்லர். 1990 வரை சந்தோஷங்களும், கொண்டாட்டங்களும் மிகைத்திருந்த குடும்பத்தின் தலைவி என்பதை தவிர்த்து எந்த பெரிய பின்புலமும் அடையாளமும் அல்லாதவர். வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்லாதவர் அன்றைய நாளில் ஆரம்பித்த ஓட்டம் இன்றும் நின்றபாடில்லை! தனக்கு மட்டும் அன்று ஓடியவர் இன்று தன்னுடன் சேர்த்து பல குடும்பங்களுக்காகவும் போராடுகிறார். 

என்ன தான் நடந்தது ? அவரே அந்நிகழ்வைச் சொல்லக் கேட்போம், 

18 ஆகஸ்ட் 1990,

அன்றைய அபாயகரமான இரவு, என் அன்றாட நிகழ்வுகளை அடியோடு புரட்டிபோடும் என நான் எதிர்பார்க்கவில்லை. என் மகன் ஜாவீத் படிப்பதற்காக என் சகோதரன் வீட்டில் தங்கச் சென்றிருந்தான்.  அன்றிரவு தேசிய பாதுகாப்புப் படையை ( NSG) சேர்ந்த சில கமேண்டோக்கள் ரெய்ட் எனும் பெயரில் அப் பகுதிக்கு வந்து, என் மகனை இழுத்துக்கொண்டு சென்றார்கள். அப்போது 16 வயது அவனுக்கு. எவ்வித சர்ச்சைக்குரிய அமைப்புகளின்  வாடையும் உணராத மென்மையான குணம் கொண்ட பாலகன் அவன். பள்ளி சென்றது போக மீத நேரம் எனக்கு உதவியாக இருப்பான்.  அந்த வருடம் கூட அவன் தான் பள்ளியின் முதல் மாணவன். 


பக்கத்துவீட்டு பெண் ஓடிவந்து கதவு தட்டி பதட்டமாய் சொன்னாள்.  சற்று நேரம் கருப்பான ஓர் இருட்டுக்குள் அடைபட்டவளைப்போல் செய்வதறியாது ஸ்தம்பித்தேன். அனைத்து காவல்துறை விசாரணை மையங்கள் மற்றும் இராணுவ முகாம்களிலும் தேடினேன். பயனில்லை. அடுத்த நாள் காவல்நிலையம் சென்று புகார் அளித்தேன். என் மகன் பற்றிய தகவல் ஒன்றேனும் அவர்கள் சொல்லக்கூடும் என எடுபிடி வேலை பார்க்கவும் நான் தவறவில்லை. பின்னர் தான் தெரியவந்தது அவர்கள் எப்.ஐ.ஆர் கூட பதியவில்லை. மாறாக என்னை B.B கண்டோன்மெண்ட் இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். அங்கில்லை. 2ம் முறை சென்றேன், வீண். மூன்றாம் முறை சென்றும் வெறுங்கையுடன் திரும்பினேன்! என் மகன் ஜாவீத் அங்கே இல்லை.  தொடர்ந்து அடுத்தாண்டு வரை இப்படியாக அலைகழிக்கப்பட்டேன். போலிஸின் பொய்கள் ஒரு கட்டத்தில் சளிப்பான போது அருகிலுள்ளோர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டேன். கூட்டத்தை கலைத்தார்கள்.. மீண்டும் போராடினேன்... நீதிமன்றத்தை அணுகும்படி அவர்களின் கையை விரித்தார்கள். வழக்கை கோர்ட்டில் பதிந்தேன், வருடம் முழுக்க விசாரணை ஓடியதே தவிர என் மகன் என்னிடம் வந்து சேரவில்லை. ஒரே ஒரு பலன் எனில் என் மகன் மூன்று ராணுவ அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்டது மட்டும் உறுதியானது அங்கே ! எம்.எல்.ஏ முதல் முதலமைச்சர் வரை சென்று முறையிட்டேன். என் வலிகளும், என் தேடல்களும் யாருக்கும் ஒரு பொருட்டாகவே இல்லை. அடர்ந்த காட்டுக்குள் தனி ஒருத்தியாய் கதறி அழுவது போன்றதான நிலை அது ! அந்த நேரத்தில் தான் என்னைப்போலவே பலரும் தங்கள் கணவனை காணவில்லை என்றும் மகனை தேடியும் காவல்நிலையத்துக்கும், கோர்ட்டுக்குமாய் அலைந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடன் போராட தீர்மானித்தேன். 1994ம் ஆண்டு காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம் (Association of Parents of Disappeared Persons:APDP) உருவாக்கினேன் " . முடித்தார். 


இப்படியாக உருவாக்கப்பட்ட அமைப்பில் மூவாயிரம் குடும்பங்கள் உறுப்பினர்களாய் உள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் தேடல் கதை உண்டு! அவையெல்லாம் படித்திட நமக்கு நேரமில்லை, பலருக்கோ தேவையும் இல்லை! APDPஐ சார்ந்தவர்கள் பொது இடங்களில் அடிக்கடி ஒன்றுகூடுவதன் மூலம் நம் வலியும், நம் தேவையும் குறித்து பலரின் கவனத்தை பெற முடியும் என ஓர் பாதிக்கப்பட்டவர் ஆலோசணை முன்வைக்க, அதனை ஏற்று பர்வீனா அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி ஶ்ரீநகரின் லால்சவுக் பகுதில் ஒன்று கூட்டுகிறார். மௌனமாய் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். ஒவ்வோர் மாதமும் 15,30 ஆகிய இருதேதிகள் மொத்தமாய் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கிறார்கள். தங்கள் தேவைகளை அதிகாரவர்க்கத்திடம் முறையிடுகிறார்கள்.   

APDPயின் அலுவலகத்தில் அவர்களே தயாரித்த காலண்டர் , அலுவல் பயன்பாட்டிற்கு உண்டு. அதிலும் மாதவாரியாக தொலைந்து போனவர்களின் வரைகோட்டுப் படங்கள்... APDPயின் சார்பில் நடக்கும் பேரணி, கூட்டங்களிலும் காணாமல் போனவர்களின் படங்கள்!  கழுத்தில் மாட்டியிருக்கும் அடையாள அட்டையிலும் ஒவ்வொரு தாயின் தொலைந்து போன குடும்ப ஆண்கள்! இப்படியாக அவர்களின் ஒவ்வொரு போராட்ட முன்னெடுப்பிலும் அவர்களின் நோக்கம் , மௌனங்களின் சத்தங்கள் உலகுக்கு எதிரொலிக்கும் யுக்தியை கையாள்கின்றனர். இத்தனைக்கும் காரண கர்த்தா பர்வீனா என்ற  இரும்புப் பெண்மணி... 


பர்வீனாவை காஷ்மீர் குடும்பங்கள் கொண்டாடுகின்றன. காஷ்மீரின் இரும்பு மனுஷி என புகழாரம் சூட்டுகின்றன. காஷ்மீர் மட்டுமல்லாது தன் அமைப்புக்காய் அவர் வெளிமாநிலம் செல்லுமிடமெல்லாம் இளைய பட்டாளம் அவரை கௌரவிக்கின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆர்வத்துடன் பலர் பர்வீனாவின் அமைப்பில் இணைகிறார்கள். இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க பல்வேறு நாடுகளுக்கும் சென்று காஷ்மீரின் நிலைகளை விவரிக்கிறார். தொலைந்துபோனவர்களைத் தேடுவதற்கான போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுகிறார். " எங்கள் குடும்ப ஆண்கள் உயிரோடு இருக்கிறார்களா , இறந்துவிட்டார்களா என்றாவது இந்த அரசு எங்களுக்கு சொல்லிவிட வேண்டும். ஆம்... 1989 ம் ஆண்டு வரையில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கேனும் ஆறுதல்பட்டுக்கொள்ள கல்லறைகள் நினைவிடமாய் உண்டு. ஆனால் எங்களின் உறவுகளோ என்னவானார்கள் என்றே தெரியாமல் ஒவ்வோர் நாளும் வலியுடன் கழிக்கிறோம்" என்று வேதனையுடன் ஒவ்வோர் முறையும் முறையிடுகிறார். 

இரும்பு மனுஷி என்ற பட்டத்துக்கு ஏற்ப ரொம்பவே தைரியம் மிக்க பெண்மணி அவர்! 


அவரின் வலிகொண்ட பயணத்துக்கு சிறு ஊக்குவிப்பாய் விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணமுள்ளன. 2005ம் ஆண்டு நோபல் பரிசுக்காய் பரிந்துரைக்கப்பட்டார். CNN IBN 2011ம் ஆண்டின் சிறந்த இந்தியர்களுக்கான விருதுக்கு பர்வீனாவை பரிந்துரைத்த போது நிராகரித்தார். "இந்திய ஊடகங்கள் காஷ்மீர் விஷயத்தினை சித்தரிக்கும் விதம் , உண்மையிலிருந்து எப்போதும் வித்தியாசப்பட்டதாகவே இருக்கிறது" என்ற காரணத்தையும் முன் வைத்தார்.  இப்படித்தான் ஓர் முறை லால்சௌக்கில் அனைத்து குடும்பங்களும் வழக்கம் போல் 10ம் தேதி ஒன்று கூட, டெல்லியை சேர்ந்த ரிப்போர்ட்டர் பேட்டி எடுத்துள்ளார். எத்தனை குடும்பங்கள் உங்களுடன் சேர்ந்து இந்த போராட்டத்தில் இப்போது கலந்துகொண்டுள்ளன என அவர் கேட்ட கேள்விக்கு பர்வீனா சொன்னார் "300". ஆச்சா? அடுத்தநாள் பத்திரிக்கையில் இப்படியாக செய்தி வருகிறது, மொத்தம் 300 பேர் காணாமல் போயுள்ளார்கள் என்று. 

APDP கணக்கீட்டின்படி 5,000-6,000 காணாமல் போனவர்கள் வழக்குகள் அவர்கள் அமைப்பில் பதிவாகியுள்ளன.  அவர்கள் மதிப்பீட்டின் படி சுமார் 8000-10000 பேர் காணாமல் போயிருக்கலாம். ஆனால் காஷ்மீர் அரசு 2009 ல் வெளியிட்ட அறிக்கையில்  3,429  வழக்குகள் பதிவானதாகவும், இவர்கள் 1990-1999 க்குள் காணாமல் போனவர்கள் என்றும்  கணக்கு வெளியிட்ட போது "மாநில அரசு 'விஷயங்களை மறைப்பதில்" மிகச்சிறப்பாய் செயலாற்றுகிறது" என்று அதிரடியாய் அறிக்கை விட்டார். மாநில மத்திய அரசுகளை தொடர்ந்து சாடி வரும் இவர் அனைத்து காலகட்டத்திலும் சொல்வது இதுதான் " இதை சொல்வதில் எனக்கொன்றும் பயமில்லை ! உண்மைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பேன், அதனை யாரும் தடுக்க முடியாது". 


"உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒரு சிறைச்சாலையை பார்த்ததுண்டா? என் 26 ஆண்டுகால வாழ்க்கையில் பல சிறைச்சாலைகளுக்கு சென்றுவந்துவிட்டேன்! இன்னும் தொடர்வேன்..என் மகன் பத்திரமாய் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறான் என்ற நம்பிக்கை துளி அளவு இருக்கும் வரையிலும் தேடுவேன். மரணம் ஒன்று மட்டுமே என் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்" என்ற அவரின் சொற்கள் மீண்டும் என் கெட்ட கனவை மீட்டன. சில நொடிகூட பர்வீனாவாய் கற்பனை செய்துகொள்ள முடியவில்லை. முடிவுறா சோகங்களும் கண்ணீர்களுமான வாழ்க்கைப்பயணங்களில் ஆழ்த்தப்பட்டவர்களுக்கு சிறு ஆறுதலேனும் தருவதற்கான வழிகளை வலிகளுடன் யோசிக்கிறேன்! 

ஆனாலும் பர்வீனாவை இன்னும் ஓரிரு நாளில் மறந்திருப்போம்! எனில் 

அன்னையர் தினம் கொண்டாடும் போது கொஞ்சமேனும் நம் உள்ளங்கள் கூனிகுறுகட்டுமாக!!!! 

ஆமினா முஹம்மத்

இயற்கை இன்பம் – 20 2

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, ஆகஸ்ட் 20, 2016 | , , , ,

விழுஞாயிறு


நாள்முழுதும் உழைத்துழைத்து நாடி தளர்ந்து
  நலிவுற்ற உயிர்களுக்கு நல்ல ஓய்வைக்
கேள்வியின்றி இரவதனைப் போர்வை யாகக்
  கிழக்குமேற்கும் மங்கிடவே ஆக்கித் தந்தே
நாள்முடித்து நற்கடமை செய்யும் ஆதவன்
  நாமுறங்கிப் புத்துணர்வை இன்ப மாக
மீள்வருகை நாளைஎன்ற எதிர்பார்ப் போடு
  மேற்றிசையில் மறைகின்றான் இறைநாட் டத்தால்.

அதிரை அஹ்மத்

திரைகடலோடி திரவியம் தேடு...??? - காணொளி பாடல்... 14

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஆகஸ்ட் 19, 2016 | , , ,காசு பணங் கேட்கல
கைக் கடியாரங் கேட்கல
காத ராக்கா பொண்டாட்டியாட்டம்
கைக் கொலுசுங் கேட்கல

பட் டெடுத்துக் கேட்கல
பகட்டு வாழ்வு கேட்கல
பக்கத்து வீட்டு பாத்துமாபி
படுக்கும் மெத்த கேட்கல

கட்டி முத்தங் கேட்கல
கட்டில் சொகங் கேட்கல
கட்டிவச்ச மல்லிச் சரம்
கசங்கி உதிர கேட்கல

வூடு வாசல் கேட்கல
ஊறும் கெணறு கேட்கல
வூட்டு நடு உத்தரத்தில்
ஊஞ்சல் கட்டிக் கேட்கல

தோட்டந் தொரவு கேட்கல
தொங்கட்டானுங் கேட்கல
தோடு நடுவில் பதித்துவைக்க
தோதா வைரம் கேட்கல

காடு கழனி கேட்கல
காரு வாங்கி கேட்கல
காது ரெண்டும் ஜொலிஜொலிக்க
கனத்த நகை கேட்கல்

வாய்க்கா வரப்பு கேட்கல
வாத்து கோழி கேட்கல
வாய்க்கு ருசியா வக்கனையா
வறுத்த கறி கேட்கல

கேட்ப தெல்லாம் சொற்பமய்யா
கிடைத்து விட்டால் சொர்க்கமய்யா
கஞ்சி கூழே போதுமய்யா
கூடிக் குடிச்சா வாழ்க்கையய்யா

கண் முழிக்கும் காலையெலாம்
கனக்கும் நெஞ்ச லேசாக்க
கண் நெறைஞ்ச கணவர் உமை
காணுஞ் சொகம் கேட்கிறேன்

கத்திமுனை இளமை தனை
கடக்க துணை கேட்கிறேன்
கட்டி அவிழ்க்கும் சீலையோடு
கண்டு ரசிக்க கேட்கிறேன்

சேர்ந்து உண்ணக் கேட்கிறேன்
சிரித்துப் பேசக் கேட்கிறேன்
சாவு வந்து சேரும்வரை
சகல சுபிட்சம் கேட்கிறேன்

மாலை வெயில் சாயும்காலம்
மடியில் சாய கேட்கிறேன்
மறுபடியும் விடியும் வரை
முடியா காதல் கேட்கிறேன்

வீட்டுக்குள்ளே வெறுமையிலே
வீழ்ந்து சாக விரும்பல
வாழத்தானே வாழ்க்கைப் பட்டேன்
வாழ வைக்கக் கேட்கிறேன்

கிடைக்கும் செல்வம் போதுமய்யா
கண்ணீர் விற்க வேண்டாமய்யா
கணவன் மனைவி பொழப்புயிது
காசு தீர்க்காக் கணக்குயிது

சபீர் அஹ்மது அபுஷாரூக்
குரல் : ஜஃபருல்லாஹ்நமதூரில் புதியக் கலாச்சாரம் உருவாகுது! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், ஆகஸ்ட் 18, 2016 | , , , ,

பிஸ்மில்லாஹ்

நமதூரில் புதியக் கலாச்சாரம் உருவாகுது! 

மாப்பிள்ளைக் கடத்தல்

25, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அதிகமாக இரவுக் கல்யாணம் தான். திருமணம் நடந்தால், நிக்காஹ் மஜ்லிஸ் முடிந்து மணமகன் – மணமகள் கை இணைப்பு ஏற்படுத்திய பின் மணமகன் ரூமிலிருந்து வெளியே வந்து பந்தலில் இருக்கும் நண்பர்களைச் சந்தித்து நன்றி கூறி, பதிலுக்கு நண்பர்களும் வாழ்த்துக் கூறி சென்றிடுவர்.

'காலையில் ரெடியாக இரு' என மாப்பிள்ளையும் நண்பர்களை அன்பாக, அதிகாரமாகக் கூறிடுவார் "தோழன் சாப்பாட்டுக்கு". மாப்பிள்ளைத் தோழர் விருந்து என சகட்டுமேனிக்கு 3 நாட்கள், 5 நாட்கள் என வெவ்வேறு நண்பர் குழாம் சாப்பிட்டு வெளுத்துக்கட்டிவிட்டு வருவர். 
ஆனால், இன்றோ பகல்நேர,  மாலைநேரத் திருமணங்கள் தான் அதிகம். அதில் பல நன்மைகளும் உண்டு. குறிப்பாக இன்றைய காலத்தில் மாத்திரைகள் சாப்பிடுவோர் அதிகமாகிவிட்டனர். இவர்களுக்கு இரவுத் திருமணங்கள் மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் கடந்த விடுமுறையில் நடந்தத் திருமணங்களில் அதைக் கண்டு கொண்டேன். மக்கள் அவ்வாறுக் கூற எனது காதுகளினால் கேட்டேன். இரவு 9 மணி 10 க்கு திருமணம் வைத்தால் நாங்கள் எப்போது மாத்திரை சாப்பிட்டு, எப்போது உறங்குவது என்று கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

சரி, மேட்டருக்கு வருகிறேன்.

நிக்காஹ் மஜ்லிஸ் முடிந்து, மணமகன் மணமகள் கை இணைப்பும் முடிந்தது. பந்தலில் நண்பர்கள் காத்திருக்கின்றனர். மணமகன் வெளியே வந்து சலாம், நன்றி கூறி விடைபெறுவார்கள் என நாம் வழக்கம் போல் எதிர்பார்த்து இருந்தோம். வெளியே சென்று பந்தலில் இருந்த நண்பர்களுக்கு கைகொடுத்ததுதான் தாமதம் அப்படியே நைஸாக அழைத்து, காரில் ஏற்றி வெகுதூரம் (கடத்திச்) சென்றுவிடுகின்றனர். பெண் வீட்டார் மாப்பிள்ளை இதோ வருவார், இதோ வருவார் என ஏக்கத்துடன் சற்று மன சஞ்சலத்துடன் எதிர்பார்த்து இரவைக் கழிக்கின்றனர். என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ என்று பல நினைப்புகள். அந்த நண்பர்களுக்கு இப்படிக்கடத்திச் செல்வதில் அலாதியான பெருமகிழ்ச்சி. காரணம் மணமகனான நண்பனின் முதலிரவை வெற்றிகரமாக வெற்றிடமாக ஆக்கிவிட்டோம் என்று!

அடப்பாவிகளா அந்தப் பெண் என்ன பாவம் செய்தாள்? பெண் வீட்டார் என்ன தப்பு செய்தனர்? விசாரித்ததில் அவர்கள் தொண்டி, இராமேஸ்வரம் என வெகுதொலைவுக்குக் கடத்திச் சென்று, வெத்துப் பேசி, இரவைக் கழித்து ஊர் திரும்புகின்றார்களாம்.

கடந்த விடுமுறையில் ஊரில் இருந்தபோது ஒரு திருமணம் அதுவும் இரவில்! மாப்பிள்ளை வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. பெண் வீட்டாரோ மாப்பிள்ளையை, "வெளியே சென்று நண்பர்களுக்கு சலாம், நன்றி கூறி வாருங்கள்" என சொன்னபோது, பயம் கலந்த வார்த்தைகளில் மணமகனின் பதில் அதிர்ச்சியாக இருந்தது: "என்னைக் கடத்திச் சென்றுவிடுவர்" என்றாரே பார்க்கணும்! ஏன் என விசாரித்ததில் "பதிலுக்குப் பதில் - பதிலடி" காத்திருந்தது தெரிந்தது. ஆம், இவரும் பல திருமணங்களில் மணமான நண்பர்களை கடத்தல் காரியங்களில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமகின்னா பிற்பகல் தாமே வரும் என்பதிற்கிணங்க காத்திருந்தது கடத்தல் செய்தி.

இதற்கிடையில் நண்பர்கள் பொறுமையிழந்து வீட்டின் முகப்பு உள்வாசல் வரை வந்து கூச்சல். மணமகன் எங்கே? என்ற கேள்வி. "மேல்வீட்டில் இருக்கின்றார்" என்று சொன்னபோது உடனே யாவரும் மேலே சென்றுவிட எத்தனித்தபோது, "அங்கே பெண்கள் இருக்கிறார்கள்" என நாங்கள் சொன்னதும்; இல்லை, இல்லை நாங்கள் மேல்வீட்டிற்கு (மொட்டமாடிக்கு) போய்விடுகிறோம், மேலும் மாப்பிள்ளை வந்தால் தான் நாங்கள் வீட்டிலிருந்து கீழே இறங்குவோம் என Blackmail செய்துவிட்டனர்.

வேறு வழியில்லாமல் மாப்பிள்ளை தனது காக்காவுடன் மேலே சென்றால் கூத்தும் கூச்சலும். அப்போது நடு இரவு தொட்டுவிட்டது. அங்கே பேரம் நடக்கிறது. மாப்பிள்ளைக்கும் நண்பர்ளுக்கும்.

இதில் கொடுமை என்னவென்றால் வந்திருந்த நண்பர்களில் பலர் தாடி (Untrimmed Beard), தொப்பி அணிந்த முழு முஸ்லிம் உருவம். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கீழே இறங்குபவர்களாக இல்லை. "நாங்கள் கொஞ்ச நேரம் இவனுடன் பேசிவிட்டு, சின்ன டீ பார்டி முடித்துவிட்டுச் சென்று விடுகிறோம்" எனக் கூறி பொழுதைக் கடத்தினர்.

சற்று நேரம் கழித்து யாவருக்கும் இஞ்சி டீ ஆர்டர் வந்தது. சப்ளை முடிந்தது. அவ்வளவாக யாரும் எழும்புவது போல் இல்லை. பிறகு ஒரு நபர் கீழே இறங்கினார். இன்னும் சற்று நேரம் கழித்து ஓரிருவர் இறங்கினர். நேரம் நடு இரவைத் தாண்டிவிட்டது.

இவை யாருடைய பழக்கம்? யாருடைய கலச்சாரம்? சற்றுமுன் தான் "திருமணம் எனது வழிமுறை" என்ற ஹதீஸ் வரிகளைக் கேட்டுத்தான் வந்திருக்கிறோம் என்கிற உணர்வு கூட இல்லாமல், எல்லோருக்கும் இடைஞ்சல், சிரமம் தரக் கூடிய வகையில் இந்த நண்பர்கள் கூட்டம் செயல்படுகிறது.

வாலிபர்களே, இளைய தலைமுறையே! சிந்தியுங்கள். நமது பழக்க வழக்கம் மாற்றாருக்கு "தஃஅவா"-வாக அமைய வேண்டும். தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது. நமதூரில், நமக்கு அருகில் மாற்று மதத்தினர் இருக்கின்றனர் என்ற சிந்தை வேண்டும்.

இது போதாததற்கு, இப்போது வெடி வெடிக்கும் கலச்சாரமும் கொஞ்சம் தலைக் காட்டுகிறது. மணமகன் வீட்டிலிருந்து மாப்பிள்ளை கிளம்பிவிட்ட சிக்னல்: வெடி. பெண் வீட்டில் வந்து கை இணைப்பு முடிந்தவுடன் ஒரு சிக்னல் மறு வெடி. என்ன பழக்கம் இதுவெல்லாம்?

நமதூரில் பல ஆண்டுகளுக்கு முன் திருமணத்தில் வெடி வெடித்து பல தகாத சம்பவங்கள், ஏன் விபரீதமே நடந்திருக்கிறது. அத்தோடு வெடி கலாச்சாரம் ஓய்ந்து இருந்தது. இப்போது அது இலேசாகத் தலைக்காட்டுகிறது.

எல்லாம் வல்ல ரப்புல்ஆலமீன் நமது இளைஞர்களுக்கும் இளைய சமூகத்திற்கும் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.

குறிப்பு: ஊரில் நடக்கும் எல்லாத் திருமணங்களிலும் இவை நடப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் நடக்கிறது. இருப்பினும், இவை நம் சமூகத்திலிருந்தே துடைத்தெறியப் படவேண்டியவை என்பதால் இங்கே பதிவிடுகிறேன்.

அபூஹாமித்
அல்லாஹ் நாடினால் மீண்டும் சந்திப்போம்…

ஒரு பிள்ளையின் ஏக்கம் ! - காணொளி 1

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், ஆகஸ்ட் 17, 2016 | , , ,

இஸ்லாமிய பெற்றோர்கள் அனைவரின் ஏக்கமும் பிரார்த்தனைகளும் தங்களது குழந்தைகள் சாலிஹானவர்களாகவும் நல்லதையே நாடக்கூடியவர்களாகவும் அதையே செய்யக் கூடியவர்களாகவும் இருக்கத்தான் விரும்புவர்.

அவ்வகையில் ஏங்கும் பெற்றோர் எத்தனை பேர் தாங்களும் சாலிஹானவர்களாக, மார்க்கம் எடுத்துரைத்த கடமைகளை பொறுப்புடனும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்கிறார்களா என நமக்குள்ளே கேட்டு கொள்ளும் அளவுக்கு ஆங்காங்க ஒரு சில நிகழ்வுகளையும் பார்க்கத்தான் செய்கிறோம்.

மாஷா அல்லாஹ், இந்த காணொளியின் நாயகி தனது பெற்றோருக்காக அவர்களின் நலனுக்காக மறுமையின் நிலையை எண்ணி ஏங்கும் இந்த குழந்தையைப் போன்றவர்களை பெற்றெடுத்தவர்கள் பேறுபெற்றவர்களே !


அதிரைநிருபர் பதிப்பகம்

சுதந்திர தினம் யாருக்கு ? 0

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016 | , , ,


குழந்தைகளே..!

சுதந்திர தினம்  வருடாவருடம் வரும் நாளெல்லாம் நம் பள்ளிகள் திருவிழாக்கோலம் போல் காட்சியளித்தாலும்  நம் வீடுகளில் பண்டிகை பரபரப்பு எதுவுமற்று இருக்கும்.  குறைந்தபட்சம் இனிப்பாவது நம் பெற்றோர்கள் இந்நாளில் செய்து தந்ததுண்டா?   எனில் சுதந்திர தினம் யாருக்கானது ?  

நெஞ்சில் தேசிய கொடி காகிதத்தை கொஞ்சம் நேரம் குத்தி, வானை நோக்கி ஏற்றப்படும் கொடிக்கு சல்யூட் செலுத்தி, காலம்காலமாய் கொடுக்கும் மிட்டாயை வாயில் போட்டு வீடு திரும்புவது தான் சுதந்திர தின கொண்டாட்டமா?  அல்லது வீடு  திரும்பியதும் சேனல்க்கு சேனல் டிவிக்களில் காட்டப்படும்  சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பது வரை நீள்வது தான்  சுதந்திர தினத்தின் நோக்கமா? 

இல்லை, அதையும் தாண்டி நம் ஒவ்வொருவருக்கும்  கடந்து போன தியாகங்களை நினைவூட்டவும் , எதிர்கொள்ளவிருக்கும் சாதனைகளுக்கும் நம்மை தயார்படுத்தவும்  'சுதந்திர தாகம்'  கொண்டு செயலாற்ற நம்மை நினைவுபடுத்துவதற்குமான நாள் அது. ஆனால் நம்மில் பலருக்கு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதியா, ஜனவரி 26ம் தேதியா என்பதிலேயே ஏகப்பட்ட குழப்பம் உண்டு. காரணம் என்ன?  வெறும் சம்பிரதாய சடங்காய் நாம் அந்த தினத்தை அனுசரிக்க பழகிவிட்டோம். "ஏதோ ஒரு காலத்தில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்தோம், அதற்காய் சிலர்  சுதந்திரம் வாங்கி தந்தார்கள்"     என்ற அளவுக்கு நம் நாட்டின்  உன்னதமான தினத்தையே சர்வசாதாரணமாய் கடந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.   

இன்றைய நாளில் பலரிடத்திலும் சுதந்திரம்  உணர்வுகள் அற்று போனதால் தான்     பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சமூக விரோதிகள் பெருகி வருகின்றனர்.  எப்படி அடிமைப்பட்டு கிடந்தோம், எப்படி மீண்டோம் என தெரியாதன் காரணமாய் தான் நம் நாட்டின் வளர்ச்சி குறித்து எவ்வித கவலை இல்லாமல் இருக்கிறோம்.எத்தனை லிட்டர் குருதிகளை இந்த மண்ணில் கலந்ததென்றும்  தெரியாததன் காரணமாய் தான் சுற்றுச் சூழலை பாழ்படுத்தி அசுத்தப்படுத்தி வருகிறோம்.  தியாகத்திலான  வரலாறுகள் குறித்து நமக்கு அக்கறையில்லாததால் தான்   ஊழலிலும் , லஞ்சத்திலும் ஊறித்திளைத்த  ஆட்சியாளர்களை உருவாக்கியிருக்கிறோம்.  இப்படியான அசாதாரண சூழலை சாதாரணமாக்கி கொள்வதன் விளைவு மீண்டும் நாம் யாருக்கேனும் அடிமைப்படும் சூழல் நிலவுவது நிச்சயம். 

அப்படி நாம் விடலாமா? 

மாற்றத்தின் விதைகளாகிய எம் இளம்பிறை குழந்தைச் செல்வங்கள் மற்ற எல்லோரை விடவும் மிகவும் நற்பண்புகள் கொண்ட தனித்த சிறந்த ஆளுமைகளல்லவா? அவர்களின் சுதந்திர தினங்கள் இப்படியா பத்தோடு பதினொன்றாய் இருக்கும் ? நிச்சயம் இல்லவே இல்லை. அப்படியாயின் நம் சுதந்திர தினத்தில் என்ன செய்வது ? 

எத்தனையோ சுற்றுலாக்கள் சென்றிருப்போம். அவற்றில் வெளிநாட்டு பயணங்களும் இருக்கும். ஆனால் உள்நாட்டிலேயே , அருகிலேயே இருக்கும் சுதந்திர தின நினைவு சின்னங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை. வரலாறுகளை கல்வெட்டுகளோடு சிதிலமடையச் செய்ய நாமே காரணமாகி விடாதிருக்க, இன்ஷா அல்லாஹ் சுதந்திர போராட்டத்தை நினைவுபடுத்தும் இடங்களுக்கு சென்று வருதலை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். 

உங்கள் ஊர்களிலேயே போராட்ட வீரர்கள் இருக்கக்கூடும். அவர்களை நேரில் சந்தித்து வரலாம்.  வயதின் காரணமாக அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தாலும் கூட  அவர்களின் வீடுகளுக்கு சென்று வரலாம். நேரடியாக அவர்கள் மூலமோ அவர்களின் உறவினர்கள் மூலமா வரலாறுகளை கேட்டு அறிந்துக்கொள்ளலாம். இதன் மூலம்  அறியப்படாத போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தியதுடன் கௌரவப்படுத்தலாம். 

நாட்டுக்காக உழைத்ததால் தனக்கென எதுவும் சேர்த்து வைக்காத நிலையில் அரசு தரும் சொற்ப ஓய்வூதியத்தில் வாழ்க்கை அமைத்திருக்கும் தியாகிகளும், வறுமையில் வாடும் அவர்களின் குடும்பங்களும் இருக்கக் கூடும். சுதந்திர தினங்களில் நிதி சேகரித்து அத்தகைய குடும்பங்களுக்கு கொடுப்பதன் மூலம், நாட்டுக்கு நன்மை செய்தால் நாடு நமக்கும் நன்மை செய்யும் என்ற  கொள்கையை குட்டீஸ்கள் உருவாக்கி புரட்சி காணலாம். 

தபால் தலை, நாணயம் போல் ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு சேகரிப்பது போல் நினைவில் நின்ற தலைவர்களை பற்றியும் ,  கால ஓட்டத்தில் மறந்த நம் போராட்ட வீரர்களை பற்றியும் தகவல்கள் சேகரித்து வைக்கும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுதந்திர தினங்களில் அதனை பள்ளிகளிலோ வீடுகளிலோ காட்சி படுத்த ஏற்பாடு செய்யலாம். 

சுதந்திர உரைகள் கேட்பது , செங்கோட்டையில் நடக்கும் அணிவகுப்புகள் பார்ப்பது சளிப்பை ஏற்படுத்தினாலும் கூட பெற்றோர்களை துணைக்கு அழைத்து அதன் விவரங்களை கேட்டு அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் அரசியலமைப்பு சட்டம், அரசு இயந்திரம் குறித்த புரிதல்கள் உங்களுக்கு கிடைக்கும். கால போக்கில் நீங்களே உங்க பெற்றோர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க முடியும். 

இது பெரியவர்களுக்கானது : 

பல பள்ளிகளில் சுதந்திரதின நிகழ்ச்சி என்பது சம்பிரதாயமாய்
மாறிவிட்டிருக்கிறது. அன்றைய நாளிலும் கூட சினிமாபாடல்கள் கொண்ட மாணவ மாணவிகளின் நடனம் அரங்கேற்றப்படுவது மிகவும் வேதனை. அப்படியாக அல்லாமல் குழந்தைகளுக்கு நாட்டுப்பற்று மேலோங்கும்வி தமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றலாம். 

சுதந்திரதின உரைகள் அனைத்தும் உணர்ச்சி பெருக்கில் இருக்கிறதே அன்றி குழந்தைகளுக்கு புரியும் எளிய நடையில் அமையாதிருப்பது மிகப்பெரிய மைனஸ். பேச்சாளர்கள் அதனை கவனத்தில் கொள்ளலாம். 

  சுதந்திர தினங்களில்  அது சம்மந்தமான நினைவு பரிசுகள் வழங்கி அது பற்றிய தகவல்களை குழந்தைகளுக்குச் சொல்லலாம். எத்தனையோ தியாகிகளின் சுயசரிதைகளும், புத்தகங்களும் கேட்பாரற்று விலைபோகாமல் கரையானுக்கு இரையாகின்றன. அப்படியல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு 'சுதந்திரதின பரிசு பெட்டகம்' பொக்கிஷ புத்தகங்களாக வழங்கலாம். 

வழக்கமாய் அன்றைய தினங்கள் 'உனக்கு பிடித்த தேசியதலைவர்' எனும் தலைப்பில் காந்தி, நேருவைப் பற்றி மட்டுமே பேச வைக்கும், எழுத வைக்கும் கலாச்சாரத்திலிருந்து சற்று மாறி அறியாதவர்கள் பற்றி அறியச் செய்திடும் முயற்சிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளலாம்.  

ஒவ்வோர் பள்ளியிலும் அன்றைய நாளில் கண்காட்சிகள் வைத்து, பல தலைவர்களை அறிமுகம் செய்யலாம். மாணவ மாணவிகளை கொண்டே தியாகிகளின் புகைப்படங்கள், நினைவு சின்ன மாதிரிகள், அரிதான புகைப்படங்கள் , தலைவர்கள் படம் பொருத்திய அஞ்சல்தலை காட்சிகள், ஓவியங்கள் காட்சிபடுத்தலாம். வகுப்பு வாரியாக போட்டிபோல் நடத்தி சிறு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தலாம். 

கவர்ச்சிகர பேச்சாளர்கள், ஊரின் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் அமரும் நிகழ்ச்சி மேடையில் தியாகிகளையோ அவர்களின் குடும்பத்திலுள்ளோர்களையோ ஏற்றி கௌரவப்படுத்தலாம். அவர்களையும் பேச வைத்து குழந்தைகளிடத்தில் விடுதலைப்போராட்டங்கள் பற்றிய நேரடி அனுபவங்களை அறியச் செய்யலாம். 

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆகஸ்ட் 15 அன்று விடுமுறையில் இருக்கும் பெற்றோர்களையும் கட்டாயம் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள செய்யலாம். இன்றைய நாளில் பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு தெரிந்த அளவில் கூட பெற்றோர்களுக்கு சுதந்திரம் பற்றிய அக்கறை இருப்பதில்லை. மாற்றம் அனைத்து தரப்பிலிருந்தும் வந்தால் மட்டுமே புரட்சிகர பாதையில் நாம் பயணம்கொள்ள முடியும். 

நடந்ததெல்லாம் போகட்டும்.. அக்கறையின்றி பல சுதந்திர தினத்தை நாம் அநியாயமாய் இழந்துவிட்டோம். இனியேனும் அப்பொக்கிஷ நாளை சிறப்பாக்கி வைத்து அதன் மூலம் விடுதலையின் நினைவுகளையும், தியாகங்களின் மாண்புகளையும் , அகிம்சையின் சக்திதனையும் உரக்க ஒலித்து மனதில் நிலைநிறுத்த தேவையான முயற்சிகளை முன்னெடுப்போம் இன்ஷா அல்லாஹ்... 

ஆமினா முஹம்மத்


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+